தேவியின் பிரசவ வலி...!

சுமார் 3.30 மணி இருக்கும். சேலம் ஆரோக்யா மருத்துவமனை வாயிலில் கார் வந்து நின்றது. ”வந்த காரியம் நல்லபடியா முடிஞ்சிடணும் சாய் பாபா. நாளைக்கு வியாழன். நீ தான் பாத்துக்கணும்” என்று மனதிற்குள் முணுமுணுத்த படியே கீழே இறங்கினேன்.


மருத்துவமனை உள்ளே சென்றதும் வரவேற்பு அறையில் டோக்கன் போட சொன்னார்கள். பின்னர் கவுண்ட்டரில் பணம் கட்ட அறிவுறுத்தினர். அங்கு சென்றால் ரொக்கமாக 2 ஸ்வீட் பாக்ஸ், யுபிஐ மூலம் ஒரு ஸ்வீட் பாக்ஸ் என முழுசா 3 ஸ்வீட் பாக்ஸ்களை கட்ட வேண்டும். அதுதான் மருத்துவமனையின் விதிமுறை என்றனர். விஷயத்தை கேட்டதும் கணவர் ஏடிஎம் வாசலை தேடி நடக்க ஆரம்பித்தார். அவர் வருவதற்குள் கொஞ்சம் உட்காரலாம் என்று நானும், அம்மாவும் அங்கிருந்த சேரில் அமர்ந்து கொண்டோம். இனியன் என்ன செய்து கொண்டிருப்பானோ, யாரையும் தொந்தரவு செய்யாமல் இருந்தால் சரி என்று மாமியார் வீட்டில் விட்டு விட்டு வந்ததை நினைத்து கொண்டேன்.


ரொக்கம் கைக்கு வந்தது. பணம் கட்டி ரசீதை வாங்கி கொண்டோம். கீழே Labour Ward-க்கு சென்றோம். நானும் கணவரும் உள்ளே சென்று நாற்காலியில் அமர்ந்தோம். ஒரு பக்க அச்சிடப்பட்ட தாளை கொடுத்து முழுவதையும் படித்து பார்த்து விட்டு கையெழுத்து போடச் சொன்னார்கள். நிதானம் காக்க நேரமில்லை. கிடுகிடுவென கண்கள் ஓடின. சட்டென கடைசி வரியில் வந்து நின்றது. கையெழுத்திட்டு போட்டு கொடுத்து விட்டோம். பின்னர் உடை மாற்றி கொள்ள அறிவுறுத்தினர். அம்மாவிடம் இருந்து சில துணிகளை வாங்கி கொண்டு தயாரானேன். என்னை மட்டும் உள்ளே அழைத்து சென்றனர். கணவரின் கண்களை பார்த்தபடியே உள்ளே நுழைந்தேன். எங்களுக்குள் ஒருவித நம்பிக்கை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.


உள்ளே சென்றதும் குழந்தையின் இதயத் துடிப்பை பரிசோதித்தனர். நன்றாக இருக்கிறது என்று செவிலியர்கள் கூறினர். சுமார் 7 மணிக்கு வெளியே வந்தேன். இரவு உணவை முடித்துக் கொண்டே மீண்டும் உள்ளே திரும்பினேன். அதே பரிசோதனை நடைமுறைகள் தான். பின் 10 மணி, நள்ளிரவு 12 மணி என இரண்டு முறை வந்து கணவரையும், அம்மாவையும் பார்த்து விட்டு சென்றேன். அதுவரை பெரிதாக வலி இல்லை. வலி வரக்கூடிய நடைமுறைகளையும் கையாளவில்லை. இரவு அனைவரையும் உறங்க சொல்லி விடுவார்கள். எனவே நீங்களும் உறங்கி விடுங்கள் என்று கணவரிடம் கூறி விட்டு சென்றேன்.


ஆனால் கணவர் அவ்வளவு எளிதில் உறங்க மாட்டார் என்று தெரியும். மறுபுறம் கொசுக் கடியை எப்படியை சமாளிக்கப் போகிறார்கள் இருவரும் என்ற கேள்விகளுடன் மெல்ல தூக்கம் அரவணைத்து கொண்டது. சிறிய உறக்கத்திற்கு பின் பொழுது விடிந்தது. இன்று புதிதாய் பிறக்கப் போகிறோம் என்ற எண்ணம் தொற்றிக் கொண்டது. அடி வயிற்றில் ஜெல் தடவி விட்டதால் வலி ஆரம்பித்து விட்டது. படிப்படியாக வலி அதிகரித்தது. நன்றாக நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வெளியே அனுப்பி வைத்தனர். உடலில் வலியும், கண்களில் கண்ணீரும் சேர்ந்து படியே வெளியே வந்தேன். கணவரின் கைகளை பிடித்து கொண்டே இங்கும் அங்கும் பலமுறை நடந்தேன். முடியவில்லை. இடுப்பில் தாங்க முடியாத வலி.


தயவு செய்து விட்டு விடுங்கள் என்று கெஞ்சும் அளவிற்கு வாட்டி எடுத்தது. ஆனால் கணவர் நம்பிக்கை ஊட்டிக் கொண்டே இருந்தார். அவர் என்னை கைகளால் தாங்கி கொள்ள முடிந்தவரை வேகமாக நடந்தோம்.


”என்னால முடியலபா. ப்ளீஸ் விட்ருப்பா” என்று கண்ணீரால் மண்டியிட்டேன்.


இந்த ஒருநாள் வலியை தாங்கி கொண்டால் ஆயுசு முழுக்க வலி இருக்காது என்று பெரியவர்கள் கூறியது மனதில் வந்து சென்றது. இனியனுக்கு பின்பு பெண் குழந்தை வேண்டும் என்ற ஏக்கம் பெரிதாக இருந்தது. அவள் பிறப்பாள். எங்கள் மீது அன்பை வாரி பொழிவாள். கடைசி வரை நிற்பாள். எங்களுக்காக பேசுவாள். பார்த்து கொள்வாள் என்ற எண்ணமும், கண்கூடாக கண்டு தெளிந்த அனுபவங்களும் அப்படி சிந்திக்க வைத்திருந்தன.


ஆனால் கண்ணீரில் தத்தளித்தபடி வலியை பொறுக்க முடியாமல் தட்டு தடுமாறி நடந்த தருணத்தில் ”ஆணாவது, பெண்ணாவது ஏதோ ஒரு குழந்தை பிறந்தாள் சரி. சீக்கிரம் இந்த வலியில் இருந்து விடுவிச்சிடுங்க போதும். என்னை படைச்ச ஆண்டவனே எங்கே இருக்க? எப்படியாவது மீட்டு கொண்டு போயிடு” என்று கை கூப்பி கெஞ்சாத குறை தான்.

இதற்கிடையில் உடல் சோர்வு பாடாய் படுத்தியது. தலை சுற்றுவது போல் இருந்தது. நேரம் காலை 9 மணியை தொட்டதும் பிரியா விடை சொல்லி விட்டு Labour Ward-க்குள் சென்று விட்டேன். உள்ளே சென்றதும் குழந்தையின் இதயத் துடிப்பை பரிசோதித்து விட்டு ஊசி போட்டார்கள். அவ்வளவு தான் வலியின் உச்சியில் போய் நின்று கொண்டேன். இடுப்பு எலும்புகள் உடைந்து சுக்கு நூறாய் போய் விடும் போல் இருந்தது. வலியை தாங்க இறுக்கமாக பிடித்து கொள்ள கனமான ஒரு பொருளை தேடினேன். அதற்குள் பிரசவம் பார்க்கும் அறைக்குள் அழைத்து சென்றனர்.


சிறிய படுக்கை தான். இடுப்பு வரை மட்டுமே நேராக கட்டில் இருந்தது. அதன்பிறகு இரண்டு கால்களை விரித்து வைத்து கொள்ளும் வகையில் நுனியில் சிறிய இரும்பு மேஜை இருந்தது. இடுப்பை இரண்டாக உடைப்பது போல தாங்க முடியாத வலி. உள்ளுக்குள் கதறலின் உச்சத்தை மீண்டும் மீண்டும் தொட்டு வந்தது மனம். அதற்குள் ஒரு காலை கீழே இறக்கி வைக்குமாறு செவிலியர்கள் கூறினர்.


”இருக்குற கடுப்பில் என்னடா சர்க்கஸ் காட்ட சொல்றீங்க?” என்று கோபத்தில் கொந்தளித்தேன். கீழே இறக்க முடியவில்லை.


சரி அப்படியே கால்களை வைத்து கொள்ள முடிவு செய்தேன். மெதுவாக வயிற்றை உந்தச் சொன்னார்கள். என் உடலின் முழு தெம்பையும் ஒன்றாக சேர்த்து அழுத்தம் கொடுத்தேன். இரண்டு முறை அழுத்தம் கொடுத்த நினைவிருக்கிறது. அப்புறம் அப்படியே மயக்கம் வந்து ஆட்கொண்டு விட்டது. முழுவதும் ஒரே இருட்டு. சிறிய சத்தம் கூட இல்லை. நான் எங்கே இருக்கிறேன். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று எதுவும் நினைவில் இல்லை. உலகின் ஒட்டுமொத்த நினைவுகளும் காணாமல் போன தருணம். எவ்வளவு நேரம் ஆனது எனத் தெரியவில்லை. மருத்துவர் என்னை தட்டி எழுப்பினார். அவரது கையில் குழந்தை இருப்பது போல லேசாக தெரிகிறது. ஆனால் உற்று பார்க்க வலுவில்லை.


உங்களுக்கு ***** பிறந்திருக்கிறது என்று மருத்துவர் கூறினார். எனக்கு சரியாக காதில் விழவில்லை. மீண்டும் ஒருமுறை மருத்துவர் கூறினார்.


”உங்களுக்கு மகாலட்சுமி பிறந்திருக்காங்க” என்று கூறியது போல் இருந்தது.


டாக்டர் எனக்கு என்ன குழந்தை பிறந்திருக்கிறது” என்று கேட்டேன். மூன்றாவது முறையும் மருத்துவர் கூறினார். நான் இரண்டாவது முறை கேட்டேன். அதற்கு மருத்துவர் நான்காவது முறையாக ”உங்களுக்கு மகாலட்சுமி பிறந்திருக்காங்க” என்றார். உடலில் எந்தவித அசைவுகளும் இல்லை. ஆனால் மனம் சட்டென விழித்து கொண்டது.


”என்ன.... மகாலட்சுமியா? என்ன சொல்றீங்க டாக்டர்? என்னால நம்ப முடியலயே? எங்க இன்னொரு வாட்டி சொல்லுங்க? நிஜமா தான் சொல்றீங்களா? சாய் பாபா உன் பவரே பவர். நான் நினைச்சதை நிறைவேற்றி காட்டிட்டியே? அடடா... இந்தப் பிறவியின் பலனை அடைஞ்சிட்டேன் போலயே” என்று எண்ண ஓட்டங்கள் தாறுமாறாக பீறிட்டு கிளம்பின.


இதை என் கணவர் கேட்டால் எவ்வளவு சந்தோஷப்படுவார். நேரம் ஆயிடுச்சு. இந்நேரம் அவருக்கு தகவல் சொல்லியிருப்பாங்க. கொண்டாட்டத்தின் உச்சியில் இருப்பார். அவரது சிறு வயது ஏக்கத்தை எப்படியாவது சரி செஞ்சுடுவேன்னு நான் வேண்டாத கடவுள் இல்லை. எனக்கு கருணை காட்டிட்டியே என் தெய்வமே. இன்னமும் என்னால நம்ப முடியலயே. எனக்கு மகாலட்சுமி பிறந்திருக்கிறாளாம்” என்ற பூரிப்பில் கண்கள் முழுவதும் திறந்தன. என் உயிரை அள்ளி அணைத்து கொண்டேன்.


ஆம்... இயற்கையின் பேரதிசயமான உயிர் பிறந்தது.

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post