இனியன் அத்தியாயம் ஒன்று...


டிசம்பர் 17, 2017 காலைப் பொழுது... அசதி நீங்காத நிலையில் மிகவும் சிரமப்பட்டு எழ நேர்ந்தது. மூன்று ஆண்டுகளைக் கடந்து ஒரே நிறுவனத்தில் பத்திரிகையாளர் பணி தொடர்ந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நேரப் பணி என்ற வகையில் இன்று மதியப் பணி. நிறைமாத கர்ப்பிணியான மனைவியை அழைக்க மனம் எண்ணியது. இதற்கிடையில் காலைக் கடன்களை ஒவ்வொன்றாக முடிக்கத் தொடங்கினேன். அப்போது மனைவியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மகிழ்வுடன் பேசத் தொடங்கினேன். வழக்கத்திற்கு மாறான தகவல் ஒன்று கிடைத்தது. கர்ப்பிணி மனைவிக்கு காலை முதல் சிறுநீர் போக்கு இருந்தது. என்ன செய்வது என்று அறியாதவனாய் கேட்டேன். சிறிது நேரம் பார்த்துவிட்டு, மருத்துவமனைக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறினாள். சரி என்று கூறிவிட்டு, எனது பணிகளை ஒவ்வொன்றாக செய்து கொண்டிருந்தேன்.

மீண்டும் மனைவியிடம் இருந்து அழைப்பு வந்தது. அவளுடன் பேசியதில் சேலம் மருத்துவமனைக்கு புறப்பட்டு விட்டதாக தெரிவித்தாள். அங்கு சென்று நிலைமையை அறிந்து, எனக்கு தெரிவிப்பதாகவும், அதுவரை ஊருக்கு கிளம்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டாள். அதனை உள்வாங்கிக் கொண்டு எனது பணிகளை முடித்தேன். அதற்குள் என் தாயிடம் இருந்து மனைவியின் நிலை குறித்து தொலைபேசி அழைப்பு வந்தது. பின்னர் அலுவலகத்திற்கு செல்ல பேருந்தில் ஏறினேன். பயணத்தின் போது தோன்றிய சிந்தனையில், இந்நேரம் மருத்துவமனைக்கு சென்றிருப்பார்களே என்று தோன்றியது. எனது அலுவலகத்திற்கு அருகே அமைந்துள்ள நிறுத்தத்தில் பேருந்து நின்றது. இறங்கிய பின், தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது. தானும் கிளம்பி விட்டதாகவும், மருத்துவமனைக்கு சென்று தகவல் அளிப்பதாகவும் கூறினார். இதனைத் தொடர்ந்து மனைவிக்கு அழைத்தேன்.

அவருடைய தாயார் அழைப்பை எடுத்தார். மனைவியின் கர்ப்பப்பை பனிக்குடம் உடைந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருப்பதாகவும், இன்றே குழந்தை பிறந்து விடும் என்றும் மருத்துவர் கூறியதாக தெரிவித்தார். அடுத்தக் கணம், ஊருக்கு செல்ல ஆயுத்தமானேன். இப்போது எனது பணி மூத்த அதிகாரியிடன் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் தொலைபேசியில் பணம் இல்லை. அருகிலிருந்த கடையில் பணமேற்ற சென்றால், எனது சிம் கார்டு நிறுவனத்திற்கான சேவை அங்கு இல்லை என்று தெரிவித்தார். உடனே சிம் கார்டு சேவையில் கடன் தொகை பெறமுடியும் என்று முன்பு ஒருமுறை மனைவி கூறியது நினைவுக்கு வந்தது. உடனே பேருந்து ஏறினேன். போகும் வழியில் கடனுக்கான தொகையை பெற்றேன். அதற்குள் கார்ப்பரேஷன் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தேன். அங்கு இறங்கியதும் எனது மூத்த அதிகாரியை தொடர்பு கொண்டேன்.

அவர் எடுக்கவில்லை. பின்னர் சேலம் செல்லும் பேருந்தில் ஏறினேன். போகும் வழியில் மீண்டும் முயற்சிக்கையில், மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி விடுப்பிற்கான அனுமதியை பெற்றேன். பின்னர் தந்தையிடம் நிலவரத்தை அறிந்து கொண்டேன். இதேபோல் மூன்று, நான்கு தடவை அங்கிருந்த நிலைமையை அறிய முற்பட்டேன். அறுவை சிகிச்சை அறைக்கு மனைவியை அழைத்து சென்ற பின், தகவல் இல்லை என்றே கூறினார். மனதில் எண்ணங்கள் அனைத்தும் இன்று நல்ல செய்தி கிட்டும். கைகளில் தவழ, துள்ளி குதித்து ஓட, குழந்தையை பெற்றெடுப்பாள் என்று சிந்தனைகள் ஓடிக் கொண்டே இருந்தன. நீண்ட பயணம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. சேலம் பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன், பசியை போக்குமாறு வயிறு கட்டளை பிறப்பித்தது. ஆம். மதிய உணவு உண்ண மனம் சம்மதிக்கவில்லை. ஆதலால் உணவருந்தாமல் அடுத்த பேருந்து பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டேன்.

எப்படியும் நல்லதே நடக்கும் என்று நம்பிக்கையில், அருகிலிருந்த உணவு விடுதியில் பசியை போக்கிக் கொண்டேன். பின்னர் ஆட்டோவில் ஏறி மக்களோடு மக்களாய் மருத்துவமனை நோக்கி பயணித்தேன். சேர வேண்டிய நிறுத்ததில் இறங்கி மருத்துவமனைக்கு நடந்தேன். மருத்துவமனை நுழைவு வாயில் வெறிச்சோடி காணப்பட்டது. உள்ளே சென்றதும், உறவுகள் அன்புடன் வரவேற்றன. எல்லோரும் நலம் விசாரித்தார்கள். நான் வந்து சேர்ந்தது மாலை 6.30 மணி இருக்கும். அதிலிருந்து 8 மணி வரை எந்த செய்தியும் கிடைத்தபாடில்லை. உட்கார்ந்த இருக்கையில் இருந்து நான் எழவில்லை. ஆனால் என் தந்தைக்கோ நிலை கொள்ளவில்லை. நேரம் ஆக ஆக, அவருக்கு பதற்றம் அதிகரித்துக் கொண்டே சென்றது. அங்கும், இங்குமாய் நடக்கலானார். அதன் பிறகே, புதிய செய்திக்கான அடையாளங்கள் தென்பட்டன.

குழந்தையை துடைக்க வெள்ளைத் துணி எடுத்து வர வேண்டும். பாதுகாப்பிற்காக கொசு வலை, கொசு மருந்து போன்றவற்றை கேட்டனர். கர்ப்பிணி தாய்க்கு சூடாக அருந்த ஏதேனும் பானம் வாங்கி வரச் சொன்னார்கள். உடனே இட்லி, இனிப்புகள் என பட்டியல் நீள, உறவுகளே முடிவு செய்து ஆளுக்கு ஒருபுறமாய் கிளம்பினர். மணி 8.30ஐ கடந்திருக்கும். பிறந்த குழந்தையை வாங்கிக் கொண்டு, எனது மனைவியின் தாயார் வந்து கொண்டிருந்தார். கண்கொள்ளாக் காட்சி. எனது வாழ்வின் மீண்டும் பெற முடியாது மணித் துளிகள். எல்லா உறவுகளும் ஆவலுடன் குழந்தையை பார்த்தனர். இனிப்புகள் வாங்கச் சென்ற எனது தந்தைக்கு உடனே தொலைபேசி அழைப்பு விடுத்து, மகன் பிறந்திருக்கிறான் என்று கூறினேன். மகிழ்ச்சியில் அவரும் வந்து கொண்டிருக்கிறோம் என்றார். அதற்குள் குழந்தையை நான் தூக்க ஆவலூட்டினார்கள். பொறுமையாக போர்த்தியிருந்த வெள்ளைத் துணியை அரவணைத்து அள்ளி எடுத்து தூக்கினேன்.

அழுகையின்றி உடல் இயக்கங்களுடன் காணப்பட்டான். சில நொடிகளில் மீண்டும் கொடுத்துவிட்டேன். எங்கள் உயிரின் மறுபிறப்பு. பெருமிதத்துடன் மனம் அலைந்தாலும், வெளியில் நிதானத்துடனே இருந்தேன். அப்போது வெளியே வந்த மருத்துவர், மீண்டும் குழந்தையை வாங்கி, ஒவ்வொரு உறுப்பாக நன்றாக கவனித்தார். இதையடுத்து எனது தந்தை வர, அவர் கைகளில் தவழ்ந்த குழந்தை, மீண்டும் உள்ளே கொண்டு செல்லப்பட்டது. சிறிது நேரம் பிராண வாயு முன்பு காட்ட வேண்டும், சிறிது நீரில் சுத்தப்படுத்த வேண்டும் என்றனர். இதனைத் தொடர்ந்து மனைவி பிரசவ அறையில் இருந்து, ஓய்வறைக்கு அழைத்து வரப்பட்டார். நாங்கள் முதல் மாடியில் இருந்த அறைக்கு சென்றோம். போர்வையை தலை வரை முழுவதுமாக போர்த்திய நிலையில் மனைவி இருந்தார். பிரசவ வலியால் ஏற்பட்ட குளிரால் அவர் நடுங்கிக் கொண்டிருந்தார். அவளின் புன்னகை பூத்த முகம், எனக்கு எல்லையில்லா மகிழ்ச்சியுடன் கூடிய ஆறுதலை தந்தது.


ஆம்... இயற்கையின் பேரதிசயமான உயிர் பிறந்தது.

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post