முதல் நாள் பள்ளிக்கூடம்

 


மணிக்கணக்கில் சுட்டி டிவி, டோரா புஜ்ஜியின் முகப் பாவனைகள், ஜாக்கி ஜான் ஸ்டைலில் போட்ட குத்துச்சண்டை, டியான் டியான் பாணியில் குறும்புத்தனம், பாஸ் பேபி போல வயதுக்கு மீறிய சிந்தனைகள், அவ்வப்போது முன்னணி நடிகர்கள் திரையிசைப் பாடல்களுக்கு ஆடிய ஆட்டம். இப்படித்தான் இனியனின் நாட்கள் கடந்து போய் கொண்டிருந்தன. அதற்கு இன்று ஒரு முற்றுப்புள்ளி வைத்தாகி விட்டது. இப்போது திறக்கிறார்கள். அப்போது திறக்கிறார்கள் என நாள்கணக்கில் இழுத்து கொண்டிருந்த பள்ளிக்கூடம் இன்று திறக்கப்பட்டு விட்டது.


ஆதம்பாக்கத்தில் உள்ள ஜி.கே.ஷெட்டி இந்து வித்யாலயா பள்ளியில் UKG-B செக்‌ஷனில் இனியனும் ஓர் அங்கமாகி விட்டான். புதிய இடம், புதிய ஆசிரியர்கள், புதிய நண்பர்கள். முதல் நாளில் மிக்கி மவுஸ் நண்பர்கள் இனிதே வரவேற்க, ஜீரக மிட்டாய் நாக்கிற்கு சுவை கூட்ட, நமஸ்தே என்ற சமஸ்கிருத வார்த்தையுடன் இனியனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அவனது வகுப்பின் இருக்கையில் அமர்ந்ததும் தேம்பி தேம்பி அழ முயன்றது இன்னும் கண்களில் அப்படியே நிற்கின்றன. அவனை சமாதானப்படுத்த ஜன்னல் வழியே பார்த்து நாங்கள் சைகை காட்டி பேசியது, ஆர்வத்துடன் தனது பையை திறந்து நோட்டு புத்தகங்களை வெளியே எடுத்து வைத்தது, அருகிலிருந்த நண்பனுடன் மெல்ல பேசத் தொடங்கியது என நிலைமை மெல்ல சீரடையத் தொடங்கியது. அந்த நொடிகள் எங்கள் கண்களில் கண்ணீர் தேம்ப ஆரம்பித்தது. கடைசியாக என் கண்கள் எதற்காக அழுதது, தேம்பியது என்று சரியாக நினைவில்லை.


ஆனால் எனக்காக என் தந்தை கலங்கியது நியாபகம் இருக்கிறது. சென்னையில் முதுகலைப் பட்டம் பயில்வதற்காக பிரபல கல்லூரியில் ஒன்றில் சேர்ந்து தங்குவதற்கு வெளியே அறை ஒன்றையும் எடுத்து விட்டோம். அப்போது எனது உடைமைகளை என்னிடம் அளித்துவிட்டு, என்னை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சக அறை நண்பர்களிடம் தெரிவித்த போது, அவர் கலங்கிய படியே சென்றார். அந்த நொடிகள் என் மனதுக்குள் வேகமாக வந்து சென்றன. இனியனை விட்டு விட்டு வீட்டிற்கு திரும்பும் வரை கலக்கத்தை போக்க முடியவில்லை. வேகமாய் துடித்த இதயம், பெரிதாய் வாடிப் போன தேவி, எப்போது இனியனை வீட்டிற்கு அழைத்து வரலாம் என நிமிடங்கள் கணமாய் நகரத் தொடங்கின.

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

8 Comments

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post