நான் இன்றும் கற்பனை உலகில் கைகோர்த்து உலாவ ஒரு ஜீவனை அளித்தவர். நன்றாக நீண்டு கொஞ்சமாய் சுருண்ட மீசை. கச்சிதமாய் சீவிய முடி. குறும்புத்தனமான பேச்சு. கண்டிப்பான வாழ்க்கை. இப்படித் தான் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் மஞ்சப்பா. அதுவும் மஞ்சு அக்கா எங்களை விட்டு சென்ற 29 ஆண்டுகளுக்கு பின்னர் யாரும் எதிர்பாராத அந்த நிகழ்வு நடந்துள்ளது. அதுவும் அக்கா பிறந்த நாள் (செப்டம்பர் 10) கொண்டாடிய 2 நாட்களில்... எங்கள் பெரியப்பாவின் பெயர் மா.சுப்ரமணியன். கடலூரில் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக இருந்த போது தான் எனக்கு அறிமுகம். என்னுடைய பள்ளி விடுமுறை நாட்களில் அதிகம் சென்ற இடம் கடலூராக தான் இருக்கும்.
மஞ்சு அக்காவின் இழப்பு என் பிஞ்சு மனதில் ஆழமாய் பதிந்து விட்ட நிலையில் ஆறுதலாய் வந்து நின்றவர்கள் சித்ரா அக்காவும், துரை அண்ணனும். கடலூர் வீட்டில் லேண்ட்லைன் போன் வைத்திருப்பார்கள். அதை ஆச்சரியமாக பார்த்த நாட்களுண்டு. அப்போதெல்லாம் போன் பேச பெரிதும் தயங்குவேன். அங்கிருந்து எங்கள் ஊரில் உள்ள போஸ்ட் மாஸ்டர் வீட்டிற்கு போன் செய்து அம்மாவையோ அல்லது அப்பாவையோ அழைக்க வேண்டும். அப்போது எங்கள் கிராமத்தில் அரிதிலும் அரிதாக தான் லேண்ட்லைன் போன்கள். கடலூர் வீட்டில் சிறிய சிறிய கார் பொம்மைகள் வைத்து நிறைய விளையாடி இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் துரை அண்ணா தவறாமல் உடனிருப்பார்.
வீட்டின் பின்புறம் இருந்த காரையில் சாக்பீஸால் கோடு போட்டு அதை பிரதான சாலையாக கருதி பொம்மைகளை உருட்டி சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆங்கில டிக்ஷனரிகள் அங்கு தான் அறிமுகம் ஆகின. பூஸ்ட், காம்ப்ளேன் வாங்கினால் அப்போதெல்லாம் டிக்ஷனரி, கிரிக்கெட் பேட், பந்து இவையெல்லாம் இலவசமாக தந்த காலம். பூஸ்டிற்கு கொடுத்த மிகவும் குட்டி டிக்ஷனரியை பல நாட்கள் பார்த்து படிக்க முயற்சித்திருக்கிறேன். துரை அண்ணா வெளியில் விளையாட சென்றால் விரைவாக வீடு திரும்ப வேண்டும் என கட்டளையிடுவது, பெரியம்மா உடன் சமையலில் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்வது, அக்கம் பக்கத்து வீட்டினர் வந்தால் குறும்பாக பேசி சிரிப்பது,
இரவு நேரங்களில் வாக்கிங் செல்லும் போது சக வயதுடைய நபர்களுடன் அன்றைய அரசியலை பேசி தீர்த்தது, கூத்தப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் வந்திறங்கும் போது எங்களை டிவிஎஸ்-ல் வீட்டிற்கு அழைத்து சென்றது, கடலூர் கடற்கரையில் கால் நனைத்தது, பூவே உனக்காக, இந்தியன் ஆகிய திரைப்படங்களை பார்த்தது என பெரியப்பா அளித்த நினைவுகள் ஏராளம். கடைகளில் விதவிதமான சட்னிகள் உடன் பரிமாறும் விஷயத்தை பெரியம்மாவிடம் அடிக்கடி கூறி வம்புக்கு இழுத்து கொண்டிருப்பார். சமையல் அறையில் ப்ரட் டோஸ்ட் செய்து சாப்பிட்டது முதன்முதலில் அங்கு தான் நடந்தது. அக்காவும், அண்ணனும் தான் எனக்கு செய்து கொடுத்தார்கள்.
பெரியம்மாவும், அக்காவும் சேர்ந்து கொண்டு குக்கரில் கேக் செய்து என்னை வியப்பில் ஆழ்த்திய தருணங்கள் உண்டு. கல்லூரி பேருந்தில் ஏற்றி விடுவதற்காக அக்காவை கொண்டு போய் விட்டு விட்டு வந்தது, சைக்கிளில் அருகிலுள்ள கடைக்கு சென்று அங்கிருந்த அண்ணனை ப்ரண்ட் பிடித்தது என கடலூர் விஷயங்கள் பொக்கிஷமாய் கிடக்கின்றன. இப்படியான அனுபவங்களுக்கு எங்கள் மஞ்சப்பா தான் முக்கிய காரணம். பெரியம்மா, பெரியப்பா உடனான ரொமான்ஸ் தான் அவர்கள் வாழ்வின் ஹைலைட். அப்படியான ரொமான்டிக் தம்பதிகளை என் வாழ்வில் நான் பார்த்ததே இல்லை.
சமீபத்தில் பெரியப்பா இல்லை என்று போன் வந்ததும், அச்சோ... பெரியம்மாவை எப்படி தேற்றப் போகிறோம் என்பது தான் பெரிய விஷயமாக முன்வந்து நின்றது. நள்ளிரவு 2 மணிக்கு பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு சென்ற போது, என் கையை பிடித்துக் கொண்டு ”பெரியப்பாவை பார்த்தாயா?” என்று கேட்டுக் கொண்டே கண்ணீரால் நனைந்தது தாங்க முடியாத வலி. நமக்கு பிடித்தமானவர்கள் வானில் நட்சத்திரங்களாக தோன்றி நம் வாழ்வில் ஒளியூட்டிக் கொண்டே, நல்வழி காட்டிக் கொண்டே இருப்பார்கள் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. அப்படித்தான் மஞ்சப்பாவும் சென்றிருப்பார் என நினைக்கிறேன்.
Tags:
நான் படித்த மனிதர்கள்
ஆழ்ந்த இரங்கல்கள்...