9M கம்மினாட்டி பாய்ஸ்

 


காலையில் எழுந்து தேவிக்கு சின்னதாய் ஓர் உதவி, இனியனுடன் கொஞ்சமாய் ஒரு விளையாட்டு. பின்னர் அரக்க பறக்க கிளம்பி 8.40 மணி பேருந்தை பிடிக்க பிருந்தாவன் நகர் பேருந்து நிலையத்திற்கு ஓடினேன். நேரமாகிக் கொண்டே சென்றதால் கூட்டம் அலைமோதத் தொடங்கியது. 10 நிமிடங்களுக்கு மேல் தாமதமாய் வந்து சேர்ந்தது. கூட்டத்தோடு கூட்டமாய் உள்ளே ஏறி பேருந்தின் நடுவில் நின்று கொண்டேன். கிளம்பியது பேருந்து. 10 ரூபாய் கொடுத்து தி.நகருக்கு டிக்கெட் வாங்கினேன். வழக்கம் போல் கக்கன் நகர், சர்ச், என்.ஜி.ஓ காலனி என வரிசையாக பள்ளி மாணவர்கள் கூட்டம் ஏறியது. அவர்களும் படியில் தொங்குவது, தாளம் போடுவது, மாணவிகளை கிண்டலடிப்பது, ஜாடை பேசுவது, ஹீரோயிசத்தை காட்டுவது என அட்ராசிட்டி வேலைகளை தொடங்கினர்.


இதை சில பெரியவர்களும், பெண்களும் கண்டித்தனர். ”ஏன்டா கம்மினாட்டிகளா? மேல ஏறி வர வேண்டியது தானே. ஏதாச்சும் ஆனா யாருடா பொறுப்பு. உள்ளே வந்து சேருங்கடா” என்று அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. பேருந்து மெல்ல நகர்ந்து கிண்டி ரயில் நிலையத்தை அடைந்தது. கடுப்பான ஓட்டுநர் அப்படியே ஓரங்கட்டினார். பேருந்தை ஆஃப் செய்துவிட்டார். பின்னால் வந்த பேருந்துகள் எல்லாம் முந்தி சென்றன. இதனால் கோபமடைந்த சக பயணிகள் ஆவேசமடைந்தனர். ”யோவ், டிரைவரே எடுயா வண்டிய. அதான் 30ஆம் தேதி ஆனா கவுர்மெண்ட் சம்பளம் வாங்குறேல. அப்புறம் என்னாத்துக்கு நிப்பாட்ற. எங்களுக்கு தான் நேரத்துக்கு போகனும். இல்லனா சம்பளத்துல புடுச்சிடுவானுங்கடா.


ஏன்டி அவனை வண்டியை எடுக்க சொல்லுடி. பஸ்ஸுல இருக்கிற யாராச்சும் கேக்றாங்களா பாரேன்” என்றார். கூடவே ஒரு ஆணும் சேர்ந்து கொண்டார். ”பஸ்ஸ எடுத்து தொலைங்கடா. இம்சை பண்ணாதீங்கடா” என்று கூச்சலிட்டார். நிமிடங்கள் கடந்தன. பேருந்து நகரவில்லை. சுற்றி சுற்றி நடந்த அலம்பல்கள் ஒருவித பதற்றத்தை உண்டு பண்ணியது. எனக்கு பேச்சு, மூச்சு வரவில்லை. அடுத்து சில நிமிடங்கள் கழித்து பேருந்து மெல்ல நகர்ந்தது. அதற்குள் 9 மணிக்கு வரும் 9M பேருந்து எங்களை முந்திச் சென்றது. இதனால் பயணிகளின் கோபம் மேலும் அதிகரித்தது. உடனே படியில் தொங்கிக் கொண்டு வந்த மாணவர்களை பார்த்து, ”ஏன்டா எழவ எடுக்கிறீங்க. உங்களால எங்க வேலைக்கு தாண்டா நேரமாகுது. உள்ள வந்து தொலைங்கடா.


இந்த 9M பஸ்ஸுல ஏறுனாலே எழவு தான். கம்மினாட்டிகளா... வண்டியை வேகமாக ஓட்றா டிரைவரே. எப்படி உருட்டிட்டு போறான் பாருங்க” என்று மீண்டும் அந்தப் பெண்மணியின் கோபம் வெளிப்பட்டது. ஒரு வழியாக சின்னமலை பேருந்து நிறுத்தம் வர பள்ளி மாணவ, மாணவிகள் இறங்கினர். கூட்டமும் குறைந்தது. பிரச்சினையும் ஓய்ந்தது. அதற்குள் சைதாப்பேட்டை பாலத்தை நெருங்கியதும் நெரிசல் அதிகமானது. எறும்பு ஊர்வது போல் பேருந்து செல்லத் தொடங்கியது. அந்த பெண்மணியின் கோபமும் தணிந்தது. சற்று திரும்பி பார்த்தேன். சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண். என்ன வேலை செய்கிறார் என்று தெரியவில்லை. உழைப்பு, வருமானம், குடும்பத்தின் சுமை, நேரம் இவையெல்லாம் அப்படியே என் கண் முன்னால் வந்து சென்றன.


அப்போது தான் தோன்றியது. பேருந்தை மெதுவாக இயக்கிய ஓட்டுநர் கம்மினாட்டியா? படியில் தொங்கி கொண்டு வந்த அந்த மாணவர்கள் கம்மினாட்டியா? இவ்வளவு அலப்பறை நடந்தும் பேசாமல் அமர்ந்திருந்த பயணிகள் (நானும் சேர்த்து தான்) கம்மினாட்டியா? இல்லை லேட்டா போனால் சம்பளத்தில் பிடித்து கறார் காட்டும் அந்த முதலாளி தான் கம்மினாட்டியா? ஒருவித குழப்பத்திற்குள் தி.நகர் வந்து சேர வேகமாய் இறங்கி விரைவாக நடக்க ஆரம்பித்தேன். தினமும் இப்படியான பயணம் தான். 9M ஓர் உதாரணம் மட்டுமே. சென்னையின் பல்வேறு வழித்தடங்களில் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆகியோருக்கு இடையில் ஒரே திண்டாட்டம் தான். ஏப்பா, தமிழக அரசே... இதுக்கு ஏதாச்சும் பண்ணக் கூடாதா?

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post