ஆமாங்க சாமி


இனிய மாலைப் பொழுது. ஐப்பசி மாத மழைச் சாரல் சுற்றுவட்டாரத்தை நனைத்துக் கொண்டிருந்தது. ராஜி தன் வீட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். மழை சற்றே தணிந்திருந்தது. சில மளிகைப் பொருட்களை வாங்க வேண்டும் என்று மனைவி சித்ரா கூறியது நினைவிற்கு வந்தது. மழை நின்னுடுச்சு, நான் போய் மளிகை சாமான் வாங்கிட்டு வரட்டுமா? என்று ராஜி கேட்டார். சரிங்க என்றாள் சித்ரா. உடனே நானும் வருகிறேன் என்று மகள் தேவி அடம்பிடித்தாள். லேசா தூறுவது போல் இருக்கு. நீ இங்கேயே இருடா என்றார். ஆனால் தேவி விடவில்லை. சரி தொந்தரவு செய்யாமல் வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் அழைத்து சென்றார். இந்தாங்க குடை என்று நீட்டினாள் சித்ரா. மெல்லிய புன்னகையுடன் விடைபெற்றுக் கொண்டு ராஜியும், தேவியும் வெளியே வந்தனர். மழை முழுவதுமாக நின்றிருந்தது. உடனே குடையை பைக்குள் வைத்துவிட்டு, இருவரும் கைகோர்த்து நடந்து சென்றனர். அப்பா எனக்கு தேன் மிட்டாய் வேண்டும் என்று எதிர்பாராத நிபந்தனையை தேவி விதித்தாள். சற்றே திகைத்த ராஜி, வீட்டில் கிளம்பும் போது என்ன சொன்னேன் மறந்துவிட்டாயா? அப்பா ப்ளீஸ் பா, ரொம்ப நாளாச்சுபா சாப்பிட்டு என்று கெஞ்சத் தொடங்கினாள். தேவியின் கெஞ்சல் ராஜிக்கு கொஞ்சலாக தெரிந்தது. ஆம் என்று சொல்வது போல் தலையசைத்து விட்டு நடையை தொடர்ந்தார். இரண்டு தெருக்கள் தாண்டி சென்றால் தான் மளிகைக் கடை வரும். அருகே புத்தகக் கடை, சலூன் கடை, பால் கடை என வரிசையாக இருக்கும். இருவரின் நடையும் தொடர்ந்து கொண்டிருக்கையில் வழியில் குட்டி நாய் ஒன்று தத்தி தத்தி சென்றது.

நல்ல கருப்பு நிறத்தில் புசுபுசுவென்று முடி நிறைய காணப்பட்டது. ஓடிப் போய் அப்படியே தூக்கிக் கொண்டாள் தேவி. ஏன்பா இப்படி பண்றே? அந்த நாயை கீழ விடு. பாவம் அதுபாட்டுக்கு போகட்டும் என்றார் ராஜி. ஆசையா இருந்துச்சு பா, அதான் தூக்கிட்டேன். கொஞ்ச தூரம் போய் கீழ விட்டுட்றேன் பா என்று மீண்டும் கெஞ்சினாள். மகளின் ஆசையை நிறைவேற்றுவதில் கிடைக்கும் சுகம் வேறு எதில் கிடைக்கப் போகிறது என மனதில் நினைத்தவாறே, இருவரும் புன்னகை பூத்த முகங்களுடன் நடந்தனர். கடைகள் இருக்கும் பகுதி வந்தது. அப்போது புத்தகக் கடையில் நீண்ட தாடி வைத்த நபரின் அட்டைப் படத்துடன் புத்தகம் ஒன்று தேவியின் கண்களில் பட்டது. வள்ளுவர் மாதிரி இருக்காறே யாருபா அது? அதென்ன புத்தகம் என்று தேவி கேட்டாள். அந்த புத்தகத்தை பார்த்த ராஜி, பெரியார் பிஞ்சு புத்தகம், அவர் தான் பெரியார் என்று கூறினார். பெரியவங்கனு சொல்லுவாங்க. அதென்னபா பெரியார். நிஜமாவே அவர் பேரு பெரியாரா? என்றாள். இல்லை, அவர் பெயர் ஈ.வெ.ராமசாமி. நாம எல்லாரும் நல்லா இருக்கணும். ஒற்றுமையா இருக்கணும். எந்தவித வித்தியாசமும் இல்லாம இருக்கணும். கடவுள் பெயரால பண்ற மூட நம்பிக்கைகள், பொய் பிரச்சாரத்தை நம்பக் கூடாதுனு நிறைய பேசுனாறு, செஞ்சாறு, செய்ய வச்சாரு. அதனால தான் பெரியார்னு பட்டம் கொடுத்து பாராட்டுனாங்க என்றார். அப்படினா, நாம எந்த வித்தியாசமும் இல்லாம இருக்கணுமாபா? என்றாள். ஆமாம் என்றார் ராஜி. அதற்குள் கடை வந்துவிட்டது. சித்ரா சொன்ன மளிகைப் பொருட்களை ஒரு காகிதத்தில் எழுதி எடுத்து வந்திருந்தார்.

அதைக் கடைக்காரரிடம் கொடுத்து, எடுத்து வைங்கனு  சொன்னார். அப்போது, என் ப்ரெண்ட்டு லோஷினி வீட்டுல மட்டும் ரொம்ப பெரிய டிவி இருக்கு. நம்ம வீட்டுல சின்னதா தான் டிவி இருக்கு. நிறைய வித்தியாசமா இருக்கோமே? என்று கேள்வி எழுப்பினாள். அதெல்லாம் அவங்க அப்பாவோட வேலை, வாங்குற சம்பளத்தை பொருத்தது. ஒவ்வொருத்தரும் செய்யுற வேலை, அதுல பெறக்கூடிய அனுபவம் வேற வேற மாதிரி இருக்கும். அதுக்கு ஏத்த மாதிரி தான் சம்பளமும் கிடைக்கும். அதவச்சு தான் வாழ்க்கையை, அவங்களோட வீட்டை அமைச்சுக்குவாங்க. அதுல வந்த வேற்றுமை தான் நீ சொல்றது என்றார். உங்களுக்கு பெரியாரை பிடிக்குமாபா? என்றாள். ஆமாம் நிறைய பிடிக்கும். ஏன்பா பிடிக்கும்? என்று கேட்டாள். அவரு சொன்ன சமத்துவம் பிடிக்கும். மூட நம்பிக்கைகளை ஒழிக்கறதுக்காக சொன்ன கடவுள் மறுப்பு பிடிக்கும் என்றார். என்னது கடவுள் மறுப்பா? அப்ப நீங்க சாமியை நம்ப மாட்டீங்களா? என்றாள். எனக்கு அதுல நம்பிக்கை இல்லபா என்றார். சாமிகிட்ட வேண்டுனா தானே, நமக்கு எல்லாமே கிடைக்கும். நீங்க சாமி கும்பிடலனா எப்படி கிடைக்கும்? என்றாள். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நம்பிக்கையில வாழ்ந்துட்டு இருக்காங்க. எனக்கு செய்யுற வேலை மேல நம்பிக்கை. குடும்பத்து மேல நம்பிக்கை. நம்ம சுத்தி இருக்கிறவங்க மேல நம்பிக்கை என்றார். உடனே கடைக்காரர் மளிகைப் பொருட்களை பையில் எடுத்து வைத்து விலைப் பட்டியலை நீட்டினார். அதை வாங்கி பார்த்து விட்டு, உரிய தொகையை கொடுத்தார் ராஜி. மீதி சில்லறையை வாங்கிக் கொண்டு இருவரும் கிளம்பத் தொடங்கினர். அப்பா தேன் மிட்டாயை மறந்துட்டோமே என்றாள்.

கடைக்காரரிடம் கேட்க அவரும் எடுத்துக் கொடுத்தார். அதற்குரிய தொகையை கொடுத்து வாங்கிக் கொண்டு இருவரும் வீட்டிற்கு கிளம்பினர். தேவி மீண்டும் பேச்சை தொடங்கினாள். நீங்க எதையுமே கும்பிட மாட்டீங்களா? என்றாள். எது என்ன வேலை செய்ய வைக்குதோ, அதை கும்பிடுவேன். யார் என்னை அன்பு காட்ட வைக்கிறாங்களோ, அவங்கள கும்பிடுவேன். இதெல்லாம் யாருக்காவது பிடிக்கலானா? நான் கொஞ்சம் விலகியே இருப்பேன் என்றார். அப்போ வீட்டுல சிலைலாம் வச்சு அம்மா சாமி கும்புட்றாங்க. நீ அவங்களை விட்டு விலகி இருக்கீங்களா? என்றாள். அப்படிலாம் இல்ல. அவங்க நம்பிக்கையில இருந்து விலகி இருக்கேன். அம்மா கிட்ட இருந்து விலகல. இதேதான் எல்லாருக்கும். அம்மா தான் நம்ம ரெண்டு பேருக்கும் சாமி. நமக்காக நிறைய விஷயங்களை செய்யறாங்கல என்றார் ராஜி. நீயும் தான் எனக்கு நிறைய வாங்கித் தர. அப்போ நீ சாமி இல்லையா? என்று தேவி கேட்டாள். அதை நீதான் முடிவு பண்ணனும். நான் சொல்லக் கூடாது என்றார். அப்படியா அப்ப எனக்கு ரெண்டு சாமி என தேவி கூறினாள். அப்பா பெருமிதத்தால் புன்னகையுடன் மகளை அணைத்துக் கொண்டார். வரும் வழியில் அதே இடத்தில் குட்டி நாயை தேவி இறக்கி விட்டாள். ஒரேவொரு விஷயம் நியாபகம் வச்சுக்கோ. உன் சுத்தி இருக்கவங்க தான் சமூகம். அவங்களும் நல்லா இருக்கணும்னு நினைக்கணும். அதுக்காகவும் நீ வேலை செய்யணும் என்றார். ஒருவழியாக மழையில் நனையாமல் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். இருவரையும் புன்முறுவலுடன் வரவேற்ற சித்ரா, என்ன ரெண்டு பேரும் பெரிய விவாதம் பண்ணிட்டு வறீங்க போலயே? என்றாள். ”ஆமாங்க சாமி” என தேவி கூறிவிட்டு உள்ளே சென்றாள். என்னது சாமியா? என சித்ரா கேட்க, ”ஆமாம், ஆமாம்” என்று சொல்லிக் கொண்டே ராஜியும் கடந்து சென்றார்.

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

11 Comments

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post