ஆதம்பாக்கம் ஏரியாவில் உள்ள சலூன் கடை ஒன்றில் சிகை அலங்காரம் செய்வதற்காக சென்றிருந்தேன். அங்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரின் புகைப்படங்களும் இருந்தன. முடிவெட்டும் படலம் தொடங்கிய போது கடைக்காரர் அண்ணனுடன் எனது பேச்சும் ஆரம்பித்தது. அந்த அண்ணனின் தந்தை 90களில் அதே இடத்தில் சலூன் கடை வைத்திருந்தாராம். அவரது வழியை மகனும் பின்பற்றி வந்துள்ளார். காவல்துறையில் Home Guard பணியை பகுதி நேரமாக செய்து வருகிறார். இதில் சேருவதற்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமாம். எங்கு விண்ணப்பம் வாங்குவது, எப்படி விண்ணப்பிப்பது என நிறைய விவரங்களை கூறினார். தந்தை காலந்தொட்டே அதிமுகவின் தீவிர தொண்டர்களாக இருந்து வந்துள்ளனர்.
கடைசியாக நடந்த சட்டமன்ற தேர்தல் வரை அவர்களின் வாக்கு அதிமுகவிற்கு தான் பதிவாகியுள்ளது. ஜெயலலிதா அம்மா என்றால் அவ்வளவு பிடிக்குமாம். குடும்பம் என எதையும் வைத்துக் கொள்ளாமல் எல்லாம் மக்களுக்காகவே வாழ்ந்து மறைந்துவிட்டார். அவருக்கு ஒரு பிள்ளை இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் அதை கண்ணில் காட்டாமல் போய்விட்டார் எனக் கூறி வேதனைபட்டார். சென்னையில் அம்மாவின் கூட்டம் என்றால் மாவட்ட செயலாளர்கள் மூலம் சேதி வந்துவிடும். மாலை 4 மணிக்கு ஜெயலலிதாவின் பேச்சு தொடங்கும் என்றால், நண்பகல் 12 மணியில் இருந்தே கூட்டத்தில் காத்திருக்க தொடங்கி விடுவார்களாம். கடும் வெயிலை பொருட்படுத்தாமல் பல மணி நேரம் காத்திருந்து அம்மாவின் முகத்தை பார்த்த தருணத்தில் கிடைத்த மகிழ்ச்சி அப்படி இருக்கும் என பெருமிதமாக கூறினார்.
ஜெயலலிதா ஓர் உத்தரவு பிறப்பித்தால் கட்சியின் கடைசி தொண்டன் வரை அப்படியே பின்பற்றுவார்கள். அவர் பயணிக்கும் காரை கூட அவ்வளவு நேசிப்பாராம். ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்திற்கு ஜெயலலிதா வந்தால், அவரது காருக்கு நான்கு புறமும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நின்று கொள்வார்களாம். ஒருவரை கூட காரை தொட விட மாட்டாராம். ஒரு அமைச்சரிடம் ஏதாவது ஒரு வேலையை கொடுத்துவிட்டு, அதே வேலையை ஜெயலலிதாவும் மறைமுகமாக செய்வாராம். அமைச்சர் செய்தது சரியில்லை எனில் தனது திட்டத்தை செயல்படுத்தி விடுவாராம். தற்போது அம்மா இல்லாத அதிமுக மீது ஈடுபாடு குறைந்துவிட்டது என்று ஏக்கத்துடன் கூறினார். அதுமட்டுமின்றி மக்களுக்காக சேவை செய்யும் Home Guard பணியில் அரசியல் எதுக்கு என்ற மனநிலைக்கு வந்துவிட்டாராம்.
ஆதம்பாக்கம் ஏரியா எந்த சட்டமன்ற தொகுதிக்குள் வரும்னா எனக் கேட்டேன். வேளச்சேரி என்று பதில் கூறினார். கடந்த முறை திமுகவின் வாகை சந்திரசேகர் எம்.எல்.ஏவாக இருந்தார். அவர் தொகுதிக்கு பெரிதாக எதுவுமே செய்யவில்லையாம். இதனால் திமுக எம்.எல்.ஏ மீது மக்கள் அதிருப்தியில் இருந்துள்ளனர். 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட தனது மனைவி மூலம் துர்கா ஸ்டாலினுக்கு வாகை சந்திரசேகர் தூது அனுப்பினாராம். ஆனால் அவர் மீது கட்சி தலைமைக்கு நல்ல எண்ணம் இல்லையாம். இந்த சூழலில் காங்கிரஸ் கையில் வேளச்சேரி தொகுதியை ஒப்படைத்துவிட்டு ஸ்டாலின் நழுவி கொண்டதாக கூறினார். காங்கிரஸின் புதிய எம்.எல்.ஏ தொடக்கத்தில் ஊடக விளம்பரத்திற்காக முக்கியமான பகுதிகளில் மட்டும் கழுகு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டாராம்.
அதன்பிறகு ஆள் வெளியே வருவதே இல்லையாம். ”எல்லாம் தண்ணீ பார்ட்டி” என கடுமையாக விமர்சனம் காதில் வந்து விழுந்தது. புதிய ஆட்சி பரவால மாதிரி இருக்கு. ஜெயலலிதா எப்படி "One Man Army"ஆக கட்சியை வழிநடத்தினாரோ, அதே வழியை முதல்வர் மு.க.ஸ்டாலினும் பின்பற்றுகிறார். மிகுந்த கட்டுக்கோப்புடன் நடந்து கொள்கிறார். அமைச்சர்கள் யாரையும் நம்புவதில்லையாம். அனைத்து துறைகளிலும் என்ன நடக்கிறது என்று அதிகாரிகள் மூலம் கண்கொத்தி பாம்பாக கவனித்து கொண்டிருக்கிறாராம். ஜெயலலிதா மீதான தீராத பற்றில் தொடங்கி, நடுநிலையான எண்ணங்கள் முளைத்து, மு.க.ஸ்டாலினை புகழ்ந்ததில் முடிந்தது எங்களின் உரையாடல்.