கடவுளின் தேசத்தில் ஒருநாள்


நள்ளிரவு 12.00 மணி... திடீரென ஒலித்த செல்போன் ரிங்டோன். தூக்க கலக்கத்தில் எடுத்து பார்த்தால் இனியன் அழைக்கிறான். இந்த நேரத்தில் என்ன திடீர்னு. எதும் பிரச்சினையா? பதற்றத்துடன் எழுந்து போனை அட்டெண்ட் செய்தேன்.


இனியன்: அப்பா, எப்படி இருக்கீங்க?


நான்: என்னபா, இந்த நேரத்துல, எதும் பிரச்சினையா?


இனியன்: அதெல்லாம் ஒன்னுமில்ல. இப்பதான் கொஞ்சம் ஃப்ரீ ஆனேன். உடனே பேசணும்னு தோணுச்சு. அதான் கூப்பிட்டேன்.


நான்: அப்படியா? நல்லது. நான் எதும் பிரச்சினையோனு பயந்துட்டேன்.


இனியன்: அப்படி எதும் இல்ல. நீங்க தைரியமா இருங்க. உங்களுக்கு சொல்ல தேவையில்ல. அம்மாவ தைரியமா இருக்க சொல்லுங்க.


நான்: சரிபா. நிச்சயமா. உன்னுடைய கேரளா பயணம் எப்படி போய்ட்டு இருக்கு?


இனியன்: நல்லா போயிட்டு இருக்கு. நிறைய புதிய மனிதர்கள். புதிய இடங்கள். புதிய சிந்தனைகள். புதிய அனுபவங்கள். இப்படி சொல்லிட்டே போகலாம்.


நான்: ஏதாச்சும் குறிப்பிட்டு சொல்லேன். கேட்க ஆவலே இருக்கேன்.


இனியன்: திருச்சூர் பக்கத்துல சாழூர் அப்படினு ஒரு ஊரு. இங்க கம்யூனிஸ்ட் தோழர்கள் நிறைய பேரு இருக்காங்க.


நான்: கேரளானாலே தோழர்கள் அதிகம் தானே. இதென்ன புதுசா?


இனியன்: சொல்றேன். கேளுபா. இங்க தங்கறதுக்கு வாய்ப்பு கிடைச்சுது. இவங்க அடிக்கடி கூட்டம் போடறாங்க. அதெல்லாம் உட்கார்ந்து கேட்டேன். மலையாளம் நிறையவே புரியது. மார்க்ஸ் பத்தி பேசுனாங்க. லெனின் பத்தி பேசுனாங்க. அதிகார அத்துமீறல்கள் குறித்து பேசறாங்க. இங்க கம்யூனிஸ்ட்கள் தான் தொடர்ந்து ஜெயிச்சிட்டே இருக்காங்க. இருந்தாலும் விலைவாசி ரொம்பவே ஏறிப் போய் கிடக்குது. அதுதான் மக்களுக்கு பெரிய சுமையா இருக்குது. அதுமட்டுமில்லாம, இந்துத்துவாவை திணிக்கிற மாதிரி நிறைய திட்டங்கள், சட்டங்கள் மத்திய அரசு கொண்டு வராங்களாம். மாட்டுக்கறி சாப்பிடக் கூடாதுனு தடை போடப் போறாங்களாம். அதான் கேரளாவே கொந்தளிச்சு போய் கிடக்குது. இதுக்கெல்லாம் எதிரா போராடுறதுக்கு தோழர்கள் ஆங்காங்கே கூடி கூடி பேசிட்டு இருக்காங்க. சீக்கிரமா கொடி தூக்கிடுவாங்கனு நினைக்கிறேன்.


நான்: அப்படியா? அடி வயித்துலயே கைய வைக்கிறாங்களா? சும்மாவா இருப்பாங்க.


இனியன்: நீங்க சொன்ன மாதிரி சில விஷயங்கள் இன்னும் மாறல. அரசியல் படுகொலைகள் மாறி, மாறி நடந்துட்டே இருக்கு. அடிக்கடி பந்த் அறிவிச்சு நகர முடியாம உட்கார வச்சுட்றாங்க.


நான்: எச்சரிக்கையா இருந்துக்கோபா. கூட்டம், கலவரம் நடந்தா கொஞ்சம் விலகியே இரு.


இனியன்: அதெல்லாம், இங்க நிறைய நண்பர்கள் இருக்காங்க. நான் பத்திரமா இருப்பேன். சொல்றத கேளுங்க. நாட்டிலேயே படிச்ச ஆளுங்க அதிகமுள்ள மாநிலம் கேரளானு படிச்சுருக்கேன். இது எவ்ளோ பெருமையான விஷயம். ஆனா அதுக்கு தலைகீழா இன்னும் வரதட்சணை கொடுமை நடந்துட்டு இருக்கு. தமிழ்நாட்டுல இருக்கிற மாதிரி பெண்கள் சுதந்திரம், சொந்த காலில் நிற்பது போன்ற விஷயங்கள் பெருசா இங்க இல்ல போலயே. நிறைய பெண்கள் வெளி மாநிலங்கள், வெளிநாட்டுல போய் செட்டில் ஆகத் தான் விரும்புறாங்க. இதுவும் நீங்க சொன்ன மாதிரி மாறவே இல்லபா.


நான்: ஆனா சமூகநீதி விஷயத்துல தமிழ்நாட்டுக்கு, கேரளா சளைச்சது கிடையாதுனு நினைக்கிறேன். நம்மோட சாயல கொஞ்சம் அங்க பார்க்கலாம்.


இனியன்: எங்கபா, நாமலே திராவிட மாடல், திமுக மாடல்னு பேசிட்டு. அப்பப்போ கொள்கையில சமரசம் செஞ்சிட்டு இருக்கோம். இதுல கேரளாவ ஏன் கைகாட்டுறீங்க? அவங்களும் நம்மல மாதிரி தான். ஏதாவது ஒரு இடத்துல கொள்கையை சமரசம் செஞ்சிக்கிறாங்கபா.


நான்: சரிவிடு. ரொம்பவே அரசியல் பேசிட்டோம். எங்கெல்லாம் சுத்தி பாத்தீங்க. அதை சொல்லுபா.


இனியன்: ஆலப்புழா போட் ஹவுஸ்ல பயணிச்சேன். ஒருநாள் தங்குனேன். செமயா இருந்துச்சு. கொச்சின் துறைமுகத்துல கால் கடக்க நடந்தேன். மூணாறு மலையில ஏறி, இறங்குனேன். சாப்பாடு கொஞ்சம் பிடிக்கலபா. சாப்பாடு சாப்பிட்டா காரசாரமே இருக்க மாட்டீகுது. ஆனா புட்டு, கடலை கறி நல்லா இருந்துச்சு. தலச்சேரி பிரியாணி ஓகே. கேரள பரோட்டா பிடிக்கலபா.


நான்: நல்லதுபா. இன்னும் நிறைய அனுபவங்களோட பத்திரமா வந்து சேருபா.


இனியன்: சரிபா. டார்லிங்க கேட்டதா சொல்லு. நான் அப்புறம் கூப்பிடறேன்.


பெருமிதம் கொண்ட தருமணமாய் காலண்டரை பார்த்தேன். 20.10.2039 என்றிருந்தது. அட இதை கவனிக்கலேயே. கொஞ்ச நேரத்துல மீண்டும் செல்போன் ஒலித்தது.


இனியன்: அம்மாட்ட போன் கொடுங்க. 


அம்மா: சொல்லுடா இனியா.


இனியன்: ஹேப்பி பர்த்டே டார்லிங். ட்ரீட் ரெடி பண்ணி வை. காலையில கூப்பிடறேன். Byeeeee...

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

2 Comments

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post