மான்செஸ்டர் யுனைடெட் vs லிவர்பூல்

இங்கிலீஷ் பிரிமியர் லீக்கின் மான்செஸ்டர் யுனைடெட் vs லிவர்பூல் இடையிலான நேற்றைய ஆட்டத்தில் அனல் பறந்தது என்று சொன்னால் கூட போதாது. அந்த அளவிற்கு வீரர்கள் மத்தியில் ஆக்ரோஷம் பீறிட்டு காணப்பட்டது. ஆயிரத்தில் ஒரு ஆட்டம் தான் இப்படி இருக்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு எதேச்சையாக இந்த ஆட்டத்தை காண முடிந்தது எனக்கு கிடைத்த மகத்தான பரிசு. எகிப்து நாட்டை சேர்ந்த முகமது சாலாவின் தீவிர ரசிகன் என்பதை இந்த இடத்தில் நினைவுபடுத்த வேண்டும். லிவர்பூல் அணி, அதன் சிவப்பு நிற கொடி, பயிற்சியாளர் ஜர்கன் க்ளூப், சாலா - ஃபிர்மினோ - மானே ஆகிய மூவரின் முன்கள கூட்டணி, விர்ஜில் வான் டைக் - ஆண்ட்ரூ ராபர்ட்சன் - ட்ரெண்ட் அலெக்சாண்டர் அர்னால்டு ஆகிய மூவரின் பலமான நடுகளம், கேப்டன் ஜோர்டான் ஹெண்டர்சன், கோல் கீப்பர் அலிசன் பெக்கர் என பிடித்த விஷயங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். எதிரணியும் சளைத்தது அல்ல.

மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு புது வரவான ரொனால்டோ பெரும் எதிர்பார்ப்பை விதைத்திருந்தார். இளம் வீரர்கள் மேசன் கிரீன்வுட், மார்கஸ் ரேஷ்போர்ட் உடன் ப்ரூனோ பெர்னாண்டஸ், லூக் ஷா, கேப்டன் ஹேரி மெகுய்ரே, கீப்பர் டேவிட் டி கியா என ரசிக்கத்தக்க வலுவான அணியாகவே களமிறங்கியது. அதுவும் அவர்களது சொந்த மைதானத்தில் நடந்தது சற்றே கூடுதல் பலமாகவே பார்க்கப்பட்டது. ஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்திலேயே சாலாவிடம் இருந்து கிடைத்த பந்தை கோல் போஸ்டின் வலது பக்கத்தில் அடித்து நேபி கெய்டா கோலாக மாற்றி அசத்தினார். ஒரு கோல் தானே என்று சற்று அசட்டையாக இருந்த யுனைடெட் அணி, 13வது நிமிடத்தில் மற்றொரு கோல் வாங்கியது. மெகுய்ரே மற்றும் ஷா இருவரும் செய்த தவறால் அர்னால்டு அடித்த பந்து நேராக ஜோடாவின் கால்களுக்கு வந்து சேர்ந்தது.

கோல் போஸ்டிற்கு அருகே வேகமாக ஓடியதில் சறுக்கிக் கொண்டே சென்ற ஜோடாவின் கால்களில் பட்டு 2வது கோலாக மாறியது. அதன்பிறகு கிரீன்வுட்டிற்கு கிடைத்த வாய்ப்பை கோலாக்க தவறவிட்டார். 38வது நிமிடத்தில் ரைட் விங்கில் இருந்து கெய்டா அடித்த பந்தை லாவகமாக வலது காலில் தள்ளி மூன்றாவது கோலாக மாற்றினார் முகமது சாலா. அடுத்தடுத்த கோல்களால் சலிப்பில் இருந்த ரொனால்டோ 45வது நிமிடத்தில் ஜோன்ஸிடம் இருந்து பாலை பெற முயற்சிக்கையில், அவர் கீழே விழுந்து விட்டார். அப்போது அவரது வயிற்றில் சிக்கிக் கொண்ட பந்தை வேண்டும் என்றே மீண்டும் மீண்டும் உதைத்தது ரசிகர்களை அதிர வைத்தது. ரொனால்டோவா இப்படி என்று கேள்வி எழுப்பியது. உடனே லிவர்பூல் அணி வீரர்கள் சண்டைக்கு வந்து விட்டனர். ஒருவழியாக சமாதானம் ஏற்பட்டு பிரச்சினை பெரிதாகாமல் முடிந்தது. ரொனால்டோவின் செயலுக்கு ரெட் கார்டு கிடைக்க வேண்டும் என்று லிவர்பூல் ரசிகர்கள் கொந்தளித்து கொண்டிருந்த சூழலில் மஞ்சள் அட்டை கொடுத்து நடுவர் ஏமாற்றமளித்தார்.

இதிலிருந்து மீள்வதற்குள் 45வது நிமிடத்தில் யுனைடெட் அணிக்கு மீண்டும் அதிர்ச்சியூட்டினார் சாலா. முதல் பாதி 0-4 என லிவர்பூல் அணிக்கு கொண்டாட்டமாய் அமைந்தது. இரண்டாவது பாதியில் யுனைடெட் மீண்டு வரும் என்று எதிர்பார்த்தால், ரொனால்டோ அடித்த ஒரேவொரு கோலும் ஆப்சைடு ஆனது. அதேசமயம் 50வது நிமிடத்தில் தனது ஹாட்ரிக் கோலை அடித்து லிவர்பூல் அணியை 0-5 என வெற்றிப் பாதைக்கு முகமது சாலா அழைத்து சென்றார். இந்த ஆட்டம் பல்வேறு சாதனைகளையும் படைத்திருப்பது கூடுதல் சிறப்பு. மான்செஸ்டர் யுனைடெட் உடனான அவே ஆட்டத்தில் ஹாட்ரிக் அடித்த முதல் வீரர் சாலா. தனது சொந்த மைதானத்தில் யுனைடெட் அணி அடையும் மோசமான தோல்விகளில் இதுவும் ஒன்று. பிரீமியர் லீக்கில் அதிக கோல் அடித்த ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை சாலா பெற்றார். லிவர்பூல் அணிக்கு பொறுப்பேற்று வழிநடத்திய 200வது ஆட்டத்தில் பயிற்சியாளர் ஜர்கன் க்ளூப் வெற்றி கண்டார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மொத்தத்தில் இந்த ஆட்டம் தரமான சம்பவம்.

 

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post