பிரபு / Prabhu


சென்னையில் புதுமலர் போல பூத்துக் குலுங்கிய செய்தித் தொலைக்காட்சியில் இளைஞர் பட்டாளத்துடன் நானும் ஓர் அங்கமாக களிப்பில் ஆழ்ந்திருந்தேன். சுமார் இரண்டு வருடங்களை எட்டவிருந்த சூழலில் நண்பர் வாழ்முனி-யிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது தான், அவர் தேசிய அளவில் பிரபலமான ஊடகத்தின் தமிழ் இணைய பதிப்பில் வேலைக்கு சேர்ந்திருந்தார். அந்தப் பணியில் தான் மிகவும் திருப்திகரமாக உணர்வதாகவும், நீயும் வந்தால் நிறைய கற்றுக் கொள்ளலாம் என்றும் கூறி அழைத்தார். அவர் வழி உள் நுழைந்த எனக்கு புதியவராக அறிமுகமானவர் தான் பிரபு. எப்போதும் தாடியும் சகிதமுமாக காட்சியளிப்பார். புதிய நிறுவனத்தில் சேர்ந்ததும் ஒருவாரம் காலம் சென்னையில் பயிற்சி. அதன்பிறகு பெங்களூரு சென்றுவிட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தனர். அந்த ஒருவாரமும் பிரபு அருகில் அமர்ந்து நிறைய விஷயங்களை கவனித்திருக்கிறேன், கற்றிருக்கிறேன். அப்போதைய எங்களுடைய ’தல’ சற்று கறார் பேர் வழி. அதனாலேயே அலுவலகத்தில் நாங்கள் அனைவரும் பள்ளிக்கூட வகுப்பறை போன்று கப் சிப் என்று தான் அமர்ந்திருப்போம். எல்லாம் குறுந்தகவல் சகிதமாகத் தான் உரையாடல்.

அவ்வளவு இறுக்கமான சூழலிலும் பிரபுவின் குறுந்தகவல் உரையாடல்கள் துள்ளல் போட வைக்கும். சமயோகித கவுன்ட்டரில் வல்லவர் என்று தான் சொல்லத் தோன்றும். மதிய உணவு சாப்பிடும் போது ஒன்றாக செல்ல முடியாது. யாராவது ஒருவர் செய்திகளை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது எங்கள் ’தல’ உத்தரவு. அதனால் பிரபு சென்று வந்த பிறகோ அல்லது அவருக்கு முன்னதாகவோ நான் சென்றுவிடுவேன். அருகிலிருக்கும் உணவகம், டீக்கடை, பேருந்து வசதி, எங்கள் நிறுவனத்தில் வேலையின் போக்கு எல்லாவற்றிலும் எனக்கு வழிகாட்டி இருக்கிறார். ஒருமுறை இரவு நேரம் எங்கள் ’தல’ கிளம்பிய தருணத்தில் நான், செந்தில், பிரபு மூவரும் ஒன்றாக டீக்கடைக்கு சென்றோம். அங்கு தனது குடும்பம், பணி அனுபவம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது பிரபு சொன்ன ஒரு விஷயம் இன்றும் என் நினைவில் இருக்கிறது. “தல கெடுபிடிகளை பார்த்து வேறு எதுவும் யோசனைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். இதுவொரு நல்ல நிறுவனம். தேசிய அளவில் நல்ல பெயர் பெற்றது. உங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

அவசரப்பட்டு வேறு எங்கும் சென்றுவிட வேண்டாம்” என்று கூறினார். அவர் விருப்பப்படியே ஐந்து ஆண்டுகளை கடந்து, இன்றும் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வருவது எங்கோ ஒத்துப் போவதை பார்க்க முடிகிறது. பயிற்சி முடித்துவிட்டு பெங்களூரு சென்று அலுவலகப் பணியில் என்னை ஐக்கியமாக்கிக் கொண்டேன். இந்த சூழலில் எங்கள் அணியில் இருந்த நண்பர்கள் Hangouts-ல் Group ஒன்றை ஆரம்பித்து அரட்டை மேல் அரட்டை அடித்திருக்கிறோம். அதேசமயம் எங்கள் பணியை பாதிக்காத வகையில் கவனமாக இருந்து கொண்டோம். அவ்வப்போது பணி நிமித்தமாக பிரபுவை அழைக்க நேர்ந்தது. ஆனால் சமூகம் சார்ந்து உரையாட பெரிதாக வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ளவில்லை. பிரபு Blog ஒன்றில் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டிருந்ததாய் நியாபகம். அந்த விஷயங்களை படித்து தெரிந்து கொள்ள நான் ஆர்வமாக இருப்பேன். சிலமுறை உங்கள் Blog லிங்க் அனுப்புங்க என்று கேட்டிருக்கிறேன். அதன்வழி அவரை நோக்கும் போது திராவிட அரசியல் மீது தீராத காதலும், தமிழக, தேசிய அளவிலான அரசியலில் ஆழமான பார்வையும் கொண்டிருந்ததை அறிய முடிந்தது.

அரசியல் அறிவு பெரிதாய் இல்லாத போது, பிரபுவிடம் இருந்து நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்ததில் ஆச்சரியம் இருக்க முடியாது. இந்த விஷயங்கள் அவருடனான உரையாடலை அதிகப்படுத்தும் எண்ணத்தை விதைத்தது. ஆனால் ’தல’ கெடுபிடி மற்றும் அழுத்தம் பிரபுவை வேறு விதமான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு கொண்டு சென்றதோ என்று எண்ணத் தோன்றியது. அலுவலகத்தில் இருந்து பிரபு வெளியேறியது சக ஊழியரான செந்தில் சொல்லித் தான் தெரியவந்தது. இது எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஒருவித ஏமாற்றத்தை அளித்தது. அதன்பிறகு பிரபு உடன் எந்தவொரு தொடர்பும் இல்லை. மீண்டும் வாழ்முனி கூறித் தான் எங்கள் நிறுவனத்தில் பிரபு மீண்டும் பணியில் சேரப் போகிறார் என்று தெரியவந்தது. மிகுந்த மகிழ்ச்சி. அவர் பணியில் சேர்ந்த நாளில் ’தல’ எங்கே? என்று குறுந்தகவல் அனுப்பி அவரை பாடாய்படுத்தி விட்டேன். ”சும்மா இருய்யா, அவங்க பக்கத்துல தான் இருக்காங்க” என்று கூறி என்னை ஓட விட்டார். தற்போது மேலும் ஒரு உற்சாகமான செய்தி. என் பார்வையில் சமூகம், அரசியல் சார்ந்து சிந்திக்கும் பிரபுவிடம் என்னை அழைத்து செல்ல காலமும் கனிந்துவிட்டது.

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

1 Comments

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post