மீண்டு வா நண்பனே!!!


மாலை 6 மணி இருக்கும். முனியாண்டி வழக்கமாக செல்லும் பூங்காவிற்குள் நுழைந்தான். எப்போதும் மாலை 5 மணியளவில் அலுவலகப் பணி முடிந்துவிடும். அதன்பிறகு நண்பர்களுடன் தங்கியிருக்கும் அறைக்கு சென்றுவிடுவான். சில சமயங்களில் பூங்கா, கடற்கரை, அறிவுசார் கூட்டங்கள் உள்ளிட்டவற்றிற்கு செல்வான். இன்று பூங்காவிற்கு செல்லும் எண்ணத்தால் கால்கள் இங்கு அழைத்து வந்திருக்கின்றன. தனக்கு பிடித்தமான நீண்ட பெஞ்சில் முனியாண்டி அமர்ந்தான். அப்படியே தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து புத்தகத்தை எடுத்தான். அட்டைப் பக்கத்தில் இருந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் முகம் பெரிதும் ஈர்த்தது. சிற்றின்ப உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு கிடந்த தன்னை மீட்டெடுத்ததில் பாரதிக்கு ஒரு பங்கு இருப்பதை அவனால் மறுக்க முடியாது. மனதில் பெருமிதத்துடன் புத்தகத்தின் பக்கங்களை புரட்டினான். ”பாரதியின் கவிதைகள்”. எந்த பக்கத்தை திறந்தாலும் புத்துணர்ச்சி பிறக்கும். பேரின்பம் பரவசப்படுத்தும். வீரம் செறிக்கும். இந்த புத்தகத்தை பலமுறை படித்தாகி விட்டது. இருப்பினும் மனம் சலிக்கவில்லை. இந்த முறை எதேச்சையாக ஒரு பக்கத்தை திறந்தான்.

”தேடிச் சோறு நிதந்தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ?”

இந்த வரிகளை மிகவும் மன உறுதியுடனும், உத்வேகத்துடன் படித்தான். இதேபோல் மேலும் சில பக்கங்கள், கவிதைகள் என நிமிடங்கள் நீண்டன. பின்னர் புத்தகத்தை மூடிவிட்டு, அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது ஒரு சிறுவனையும், சிறுமியையும் கவனிக்க நேர்ந்தது. அவர்கள் கைகோர்த்தபடி நடந்து சென்றனர். ’அண்ணா அதுல ஏறி சர்க்கஸ் விடலாமா?’ என்று சிறுமி கேட்க, ’ம்ம் போலாம்டா பாப்பா’ என்றான் அந்த சிறுவன். அப்போது தான் புரிந்தது அவர்கள் இருவரும் உடன்பிறந்தவர்களாக இருக்கக்கூடும் என்று. தனது தங்கையை பத்திரமாக அழைத்து சென்று படியில் மெதுவாக ஏற வைத்து, உச்சியில் அமர வைத்தான். பின்னர் முன்பக்கமாக வந்து சர்க்கஸின் கீழ்ப்பகுதியில் கைவைத்தபடியே, ’நீ வாடா பாப்பா, நான் பிடித்துக் கொள்கிறேன்’ என்கிறான். மேலிருந்து சறுக்கிக் கொண்டு வந்த சிறுமி, அந்த சிறுவனின் கைகளில் பத்திரமாக பொருந்திக் கொண்டாள். இருவரும் புன்னகைத்த படியே எழுந்து நடந்தனர். ’வாடா பாப்பா அங்க போய் விளையாடலாம்’ என்று சிறுவன் அழைக்கிறான்.

’அண்ணா, அண்ணா! ஒரேவொரு வாட்டி ப்ளீஸ்’ என்கிறாள். அண்ணன், தங்கையின் சிறுபிள்ளைத்தனம் அப்படியே நீண்டு கொண்டே செல்கிறது. இந்த காட்சி முனியாண்டியின் மனதில் இனிமையாக பதிவாகி கொண்டிருந்தது. முனியாண்டிக்கு ’தங்கை’ என்றால் கொள்ளை பிரியம். ஆனால் வீட்டிற்கு ஒரே பிள்ளை. சிறு வயதில் தன்னுடைய கிராமத்தில் அண்டை வீடுகளில் சண்டை போட்டுக் கொள்ளும் போதும், வயல் வெளிகளில் விளையாடும் போதும் அண்ணன், தங்கை உறவை பார்த்து பார்த்து ஏக்கம் அடைந்திருக்கிறான். ’எனக்கு ஏன் ஒரு தங்கச்சியை கொடுக்காமல் விட்டுட்டீங்க’ என்று பெற்றோரிடம் பலமுறை கேட்டிருக்கிறான். அவர்களும் நேரத்திற்கு ஏற்ப ஒரு பதிலை சொல்லி சமாளித்து வந்தனர். குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியும், தங்களிடம் இருந்த பிரச்சினைகளும் முனியாண்டிக்கு சொன்னால் புரியாது என்று தவிர்த்து விடுவர். தனது கிராமத்தில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்து, மாவட்டத் தலைநகரில் இருந்த அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை கணிதம் பயின்றான்.

----------

திடீரென லேசான தூறல் வந்தது. கடந்த கால நினைவுகளில் இருந்து மீண்டு வந்த முனியாண்டி, தனது செல்போனை எடுத்து நேரத்தை பார்த்தான். 6.40 ஆகியிருந்தது. உடனே அருகிலிருந்த கூடாரத்திற்குள் மக்களோடு மக்களாக போய் நின்று கொண்டான். அவனுக்கு அருகில் அந்த அண்ணனும், தங்கையும் வந்து நின்றனர். ’அண்ணா, இன்னைக்கு தேன் மிட்டாய் வாங்கி தரேனு அம்மா சொன்னாங்க. சீக்கிரமா போனா தான் வாங்கித் தருவாங்க. இல்லனா நேரமாகிடுச்சி. நாளைக்குனு சொல்லிடுவாங்க’ என்றாள். ’போலாம்டா பாப்பா. மழை கொஞ்சம் அதிகமாக வருது. நின்னதும் வேகமாக போயிடலாம்’ என்றான். இருவரும் புன்னகை செய்தபடியே தங்களின் வலது கைகளை ஒன்றோடு ஒன்று அடித்து ஒலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இவற்றை கவனித்த முனியாண்டிக்கு மனதில் மீண்டும் பழைய நினைவுகள் வரத் தொடங்கின. படித்து முடித்துவிட்டு வேலை தேடும் படலம். சென்னையில் மீடியாவில் பணிபுரிந்து வந்த நண்பனின் அறையில் சில மாதங்கள் தங்கி, படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்குமா என்று தேடி வந்தான். அப்போது நண்பர் ஒருவர் அளித்த தகவலின் மூலம் புதிதாக தொடங்கவுள்ள செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் வேலைவாய்ப்பு இருப்பதாக தெரியவந்தது. இதற்கான எழுத்துத்தேர்வை முனியாண்டி சிறப்பாக எழுதினான். அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நேர்காணலில் செய்தித் தொலைக்காட்சியின் தலைவர் ராஜேஷ் அவர்கள் கேள்விகளை கேட்டார். அதிலும் சிறப்பாக பதிலளித்து வேலைக்கு தேர்வாகிவிட்டான். இந்த தொலைக்காட்சி முழுவதும் இளைஞர் பட்டாளத்துடன் தொடங்கப்பட்டது. அவர்களுடன் சேர்ந்து கொண்டாட்டமாக வேலையை தொடங்கினான்.

ஊடகத்துறைக்கு புத்துயிர் ஊட்டியதை போல செய்தித் தொலைக்காட்சியின் நேரலை தொடங்கியது. புதிது புதிதாக ஊழியர்கள் சேர்ந்து கொண்டே இருந்தனர். அவர்களில் ஒருவராக சங்கீதாவை முனியாண்டி கண்டுகொண்டான். வயதில் இளையவள் என்பதால் இயல்பாகவே ’அண்ணா’ என்று அழைக்கத் தொடங்கினாள். அலுவலகத்தின் மற்ற இளையவர்கள் முனியாண்டியை ’சார்’ என்றே அழைத்து வந்தனர். இதனால் பெரிதாக உணர்ச்சி வசப்படும் சூழல் எழவில்லை. சங்கீதா ஒவ்வொரு முறை ’அண்ணா’ என்று அழைக்கும் போதும் சற்று உணர்ச்சிவசப்பட நேர்ந்தது. தனது ஏக்கம் தீர்ந்து கொண்டிருப்பதாக உணர்ந்தான். சங்கீதா உடனான நட்பு என்பது மாதங்களாகி, அது பின்னர் வருடங்களாக ஓடின. இந்த இடைப்பட்ட காலத்தில் தனக்குள் இருந்த ’தங்கை’க்கான ஏக்கத்தை சங்கீதாவிடம் முனியாண்டி கூறியிருக்கிறான். சங்கீதாவிற்கு உடன் பிறந்த சகோதரி மட்டுமே. தன்னையும் அரவணைக்க ’அண்ணன்’ என்ற உறவில்லை என்ற ஏக்கம் இருந்தது. ஆனால் முனியாண்டிக்கு இருந்தது போல் அதீத உணர்வு இல்லை. ஒவ்வொரு முறை சாப்பிடப் போகும் போதும், சங்கீதாவிடம் சொல்லிவிட்டு தான் செல்வான். முடிந்தவரை அவளையும் சாப்பிட அழைத்துச் செல்வான். விடுதியில் தங்கியிருந்ததால் அங்கிருந்தே மதிய உணவு கொண்டு வந்திருப்பாள் சங்கீதா. அதை பலமுறை பகிர்ந்து உண்டிருக்கின்றனர். இருப்பினும் தன்னுடைய பங்கால் சங்கீதா உண்பது குறைந்துவிடும் என்பதால், கடைக்கு சென்று சாப்பிடுவதாக தட்டிக் கழித்து சென்றுவிடுவான். தான் பார்க்கும் எந்தவொரு விஷயத்தையும் சங்கீதா உடன் பகிராமல் இருந்ததே இல்லை.

சங்கீதாவும் தனது குடும்ப பின்னணி, படிப்பு, கடந்து வந்த வாழ்க்கை, சென்னையில் இருக்கும் உறவுகள் என பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறாள். சங்கீதா பேசாத நேரங்களில் முனியாண்டிக்கு எந்த வேலையும் ஓடாது. எப்போது பேசுவாள், தான் கண்ட சிறு சிறு விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருப்பான். சென்னையில் தங்கியிருந்த இரண்டு வருட வாழ்க்கையில் சங்கீதாவை தன் குடும்ப உறவாக, உடன்பிறப்பாக முனியாண்டி பார்த்து வந்தான். சங்கீதாவும் அப்படியே. இருப்பினும் அந்தளவிற்கு உணர்ச்சி வசப்பட மாட்டாள். சற்று பக்குவமடைந்த நபராக இருந்து வந்தாள். இந்நிலையில் முனியாண்டியின் பலவீனமே ’சங்கீதா’ தான் என்ற நிலை உருவானது. தனது பக்குவமடையாத செயல்பாடுகளால் எல்லா விஷயங்களுக்கும் சங்கீதாவை முனியாண்டி எதிர்பார்த்தான். இது மனரீதியாகவும், வேலை ரீதியாகவும் முனியாண்டிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. அலுவலகத்தில் மேலதிகாரிகள் திட்டுவது, பெற்றோரிடம் சரிவர பேசாமல் இருப்பது என நிலைமை மோசமடைந்தது. இதனைக் கவனித்த சங்கீதா, இனியும் காலம் தாழ்த்தக்கூடாது என்று தீர்மானித்தாள். கொஞ்சம் அறிவுரை சொல்லி பார்த்தாள். ஆனால் முனியாண்டியின் சிந்தனையில் எதுவும் பதியவில்லை. இந்த சூழலில் சங்கீதா அதிரடியான முடிவு ஒன்றை எடுத்தாள். இது வலிகள் நிறைந்தது தான். ஆனால் வேறு வழியில்லை என்று நினைத்துக் கொண்டாள். ஒருமுறை திரைப்படம் பார்க்க தனது நண்பருடன் முனியாண்டி திரையரங்கிற்கு சென்றிருந்தான். இதுபற்றி சங்கீதாவிடம் தெரிவிக்காமல் விட்டுவிட்டோமே என்று கருதி, பேருந்து ஏறும் போது தொலைபேசியில் அழைத்தான். எடுக்கவில்லை.

திரையரங்கு வாசலுக்கு வந்தாகிவிட்டது. அப்போது அழைத்தும் தொலைபேசியை எடுக்கவில்லை. படம் தொடங்கியது. குறுந்தகவல் அனுப்பி பார்த்தான். பதிலில்லை. படத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. விடாமல் குறுந்தகவல் அனுப்பிக் கொண்டே இருந்தான். சில நிமிடங்களில் திரும்பி வர வேண்டிய பதில், இம்முறை பல மணி நேரமாகியும் வரவே இல்லை. அடுத்த நாள் அலுவலகம் வந்த போது, சங்கீதா முகம் கொடுத்தே பேசவில்லை. புதிதாக ஒருவரை பார்ப்பதை போல் முனியாண்டியை பார்த்தாள். அவனுக்கு புரியவே இல்லை. அவன் சைகையால் கேட்டுப் பார்த்தான். அருகில் சென்று கேட்டுப் பார்த்தான். செல்லும் வழியில் குறுக்கிட்டு கேட்டு பார்த்தான். எதற்கும் பதிலில்லை. இந்த வலி முனியாண்டிக்கு தாங்க முடியாத ஒன்றாக மாறியது. இதற்கு முன்பு இப்படியொரு வலியை அனுபவித்ததே இல்லை. நாட்கள் வாரங்களாகின. வலி அதிகரித்ததே தவிர சிறிதும் குறையவில்லை. சொந்த ஊருக்கு திரும்பி பெற்றோரிடம் நேரம் கழித்து பார்த்தான். அப்போதும் மனம் ஆறவில்லை. ஒருமுறை சங்கீதாவின் தோழியிடம் கேட்டுப் பார்த்தேன். ’ஏன் என்னிடம் பேசுவதில்லை?’ என்று கேட்டு வரச் சொன்னான். அதற்கு பதில் கிடைத்தது. 'முனியாண்டி அண்ணன் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறார். குழந்தை போல நடந்து கொள்கிறார். வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிந்து கொள்ள மறுக்கிறார். அளவுக்கு மீறிய நெருக்கம் இந்த உலகில் எந்த உறவுக்கும் இல்லை. எனக்கும் குடும்பம் இருக்கிறது. நாளை திருமணம் ஆகும். அப்போது இவரது அளவுக்கு மீறிய அன்பு பெரும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். இருவரின் வாழ்வும் நன்றாக இருக்க நான் செய்தது தான் சரி. அவர் மாற வேண்டும். பக்குவமடைய வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். ’அதற்காக இப்படியா? ஒரே அடியாக முடித்துக் கொள்வது?’ என்று வருந்தினான்.

----------

திடீரென மக்கள் பேசிக்கொண்டே பூங்காவில் இருந்து வெளியேறத் தொடங்கினர். அந்த சலசலப்பு முனியாண்டியை மீட்டுக் கொண்டு வந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான். மழை நின்றுவிட்டது. செல்போனை பார்க்கையில் மணி 7.20 ஆகி இருந்தது. அப்படியே பூங்காவிற்குள் மெல்ல நடக்கத் தொடங்கினான். தங்கை என்ற உறவை மனம் முழுவதும் நிறைத்து வைத்திருந்தது எத்தனை பெரிய வலியை உண்டாக்கி விட்டது என்று மனதிற்குள் தோன்றியது. மிச்சமிருந்த நினைவுகள் முனியாண்டியை அழைத்தன. தங்கையாக நினைத்துக் கொண்டிருந்த சங்கீதா செய்த செயல் தன்னை மிகவும் வாட்டியதை எண்ணி கலங்கியிருந்தான். இந்த விஷயத்தை யாரிடம் கொட்டித் தீர்ப்பது என்றே தெரியவில்லை. ஏனெனில் தன்னுடைய உணர்வுகள் மற்றவர்களுக்கு சிறியதாய் தோன்றலாம். அலட்சியப்படுத்தும் சூழல் வரலாம். எள்ளி நகையாடி விடலாம் என்றெண்ணி தயக்கம் காட்டி வந்தான். அப்போது அதே நிறுவனத்தில் மூத்தவராய் ரமேஷ் அண்ணன் வேலை செய்து வந்தார். அவரிடம் வேலை தொடர்பாக பல விஷயங்களில் சந்தேகம் கேட்டிருக்கிறான். மிகவும் அன்பாக பழகுவார். சூழலுக்கு ஏற்ப நிதானமாக செயல்படக் கூடியவர். அவரிடம் சென்று விஷயத்தை கூறி புலம்பினான். அவர், ’உணர்ச்சிகளுக்கு எப்போதும் அடிமையாகி விடக்கூடாது. உன்னுடைய ஆளுமைக்குள் தான் உணர்ச்சிகள் இருக்க வேண்டும். எந்த உறவுக்கும் எல்லையுண்டு. அதிலும் பணிச்சூழலில் இப்படியான உறவை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. வேலை என்றால் அதில் மட்டும் தான் கவனம் செலுத்த வேண்டும். இதற்கு உறுதுணையாக நிற்பவர்களிடம் நட்புடன் பழகு. நட்பின் கரங்கள் எதுவரை நீளுமோ? அதுவரை செல்.

இந்த சமூகம் கறைபடிந்து சீர்படுத்த ஆட்களின்றி கிடக்கிறது. அதற்கான வேலைகளுக்கு ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கின்றனர். அவர்களுக்கு போய் கைகொடு. நீ வேண்டும் என்று நினைப்பது சிற்றின்பம். சமூகம் என்ற பெருவெளியை பார். அதனை சீர்படுத்த இறங்கி வேலை செய்யும் போது கிடைக்குமே அதுதான் உண்மையான இன்பம். பேரின்பம்’ என்று அறிவுரை கூறினார். ’இந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை வைத்துக் கொள்ள. முழுதாய் படித்துப் பார். பாரதி யாருக்காக எழுதினார். பாடினார். நடந்தார். பயணித்தார் என்றெல்லாம் சிந்தித்துப் பார். அவர் மட்டும் குடும்பத்திற்காக வாழ்ந்திருந்தால், சுயநலம் பார்த்திருந்தால் தமிழகத்திற்கு ஒரு மகாகவி கிடைத்திருப்பாரா? விடுதலை வேட்கையை தூண்டும் பாடல்கள் வந்திருக்குமா? கொஞ்சம் எண்ணிப் பார். இவர் ஒரு உதாரணம் தான். இவரைப் போல் நிறைய கவிஞர்கள், சீர்திருத்தவாதிகள், போராளிகள் இருக்கின்றனர். அவர்களை எல்லாம் படி. புத்தகங்கள் மீது காதல் கொள். எல்லாம் சரியாகிவிடும்’ என்று கூறினார். முனியாண்டிக்கு தொடக்கம் சற்று கடினமாகத் தான் இருந்தது. பாரதி கவிதைகளில் இருந்து படிக்கத் தொடங்கினான். புத்தகங்கள் புதிய உலகை காட்டின. முனியாண்டியை சீர்படுத்த ஆரம்பித்தன. வெறும் குடும்பம், வேலை, நண்பர்கள் என்று மட்டும் இருந்தால் போதாது. அதையும் தாண்டி பொதுநல எண்ணத்துடன் இந்த உலகை அணுக வேண்டும் என்று தெளிவு பெற்றான். சிந்தனைகள் விரிந்தன. சமூக நலனுக்கான தேடல் தொடங்கியது. தன்னை முழுவதுமாக சீர்படுத்திக் கொள்ள சுமார் ஆறு மாத காலம் ஆகிவிட்டது. ரமேஷ் அண்ணா கொடுத்த அந்த முதல் புத்தகம் தான், தற்போது கையில் இருக்கிறது. திடீரென 'மணி 8 ஆகிடுச்சு. எல்லாரும் கிளம்புங்க’ என்று பூங்காவின் காவலர் பேசும் வார்த்தைகள் காதில் விழுந்தன. உடனே நிஜ உலகிற்கு முனியாண்டி திரும்பினான். இரவின் குளர்ச்சியில் பாரதி கவிதைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டு வேகமாக நடந்தான்.

----------

நன்றி அம்மு
🏞
Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post