நட்பு எல்லா காலங்களிலும் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. சிறுவயது, பள்ளிப்படிப்பு, கல்லூரிப் படிப்பு, வேலை என ஒவ்வொரு இடத்திலும் நட்பின் மலர்கள் பூத்துக் குலுங்கும். எல்லா காலங்களில் கிடைத்த நட்பையும் நாம் அரவணைத்து கொண்டே செல்வது சற்று சிரமம். எனக்கோ மிக மிக சிரமம். பெரும்பாலும் நானிருக்கும் நான்கு சுவர்களுக்குள் தான் உலகம் என்று வாழ்ந்திருக்கிறேன். பொதுநலம் என்ற எண்ணம் என்னுள் விதைக்கப்பட்ட போது தான், பிறருடன் கூடி வாழ வேண்டும் என்பது எத்தனை அவசியம் என உணர்ந்திருக்கிறேன். அப்படி எனக்கான குறுகிய வட்டத்திற்குள் ஓடி வந்து இறுகப் பற்றி கொண்டவர்கள் தான் இவர்கள். எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருவர் மேல் ஒருவர் மிகுந்த அக்கறை கொண்டோம். கூடினோம். ஓடினோம். ஆடினோம். இனி நிஜத்திற்குள் செல்வோம். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 2010ஆம் ஆண்டு MCA படிப்பில் சேர்ந்தேன். வயது வித்தியாசம் காரணமாக சக வயது நட்பு கானல் நீராகி நான்கு ஆண்டுகளாகி இருந்தன. அப்படியொரு தருணத்தில் நான் நுழைந்த அண்ணா பல்கலைக்கழகம் இளமை துள்ளலை அள்ளித் தந்தது. திரைப்படங்களில் கேள்விப்பட்ட கல்லூரி சாலையை அங்கு தான் கண்டு கொண்டேன். இளசுகள் சிறகடித்து பறந்து கொண்டே கற்றலில் பிரம்மாண்டங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். அங்கே எனது வகுப்பு தோழர்களாக அறிமுகம் ஆனவர்கள் தான் தண்டபானி & சுபாஷ் சந்திர போஸ். இவர்களுடனான நட்பு இறுகியது நாங்கள் மூவரும் வேலைக்கு சென்ற தருணத்தில் தான். கல்லூரி காலத்தில் தண்டபானியின் அறைக்கு சென்றிருக்கிறேன். அங்கே அவருடன் ஒட்டிக் கொண்டிருந்தவர் தான் சுபாஷ் சந்திர போஸ்.
எங்கள் மூவரையும் ஒன்றுசேர வைக்கும் விஷயம் திரைப்படங்கள் மட்டுமே. தண்டபானி Coding செய்யும் அளவிற்கு எங்களால் செய்ய முடியாது. அதில் அவருக்கு இருந்த ஆழ்ந்த ஈடுபாடு தான், இன்று IOS இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய மென்பொருள்களை உருவாக்கும் வல்லுநராக உயர்ந்திருக்கிறார். அதற்காக கல்லூரி காலத்திலேயே சிறப்பாக படித்தவர் என்று சொல்லிவிட முடியாது. மொத்தம் 14 அரியர் வைத்து பின்னர் படிப்படியாக தேர்ச்சி பெற்றவர். எனக்கோ கணினி அறிவியல் பெரிதாக மனதிற்குள் பதியவில்லை. இதனை ஓரளவு கற்றாலும் செய்திகளின் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்தேன். WikiUpdates என்ற பெயரில் சக நண்பர்களுக்கு அன்றாட செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தேன். எங்கள் மூவரில் எந்தவொரு கவலையும் இன்றி இருந்தவர் சுபாஷ் சந்திர போஸ் தான். படிப்பின் மீது ஓரளவு மட்டுமே ஈடுபாடு. ஆனால் அதன் அடிப்படையாக புரிந்து கொள்வதில் ஆர்வமிருக்காது. மொத்தம் 30 அரியர் வைத்து பின்னர் படிப்படியாக எழுதி தேர்ச்சி பெற்றவர். பி.இ படித்த பெண் ஒருவரை சுபாஷ் சந்திர போஸ் சுற்றி சுற்றி வந்த கதையை எங்களால் மறக்கவே முடியாது. அவருக்கு ”லட்டு” என்று பெயர் வைத்து சக நண்பர்களையும் சும்மா இருக்க விடமாட்டார். வாருங்கள் காட்டுகிறேன் என்று இழுத்துச் சென்றுவிடுவார். எங்களின் கல்லூரி கேண்டீன் தவிர்க்க முடியாத இடம். கல்லூரியில் நாங்கள் சீனியராக இருப்போம். எங்களின் வகுப்பு தனியாக ஒரு கட்டிடத்திற்குள் முடங்கிவிடும். அண்ணா பல்கலைக்கழகம் என்றாலே பி.இ இளங்கலை பொறியியல் படிப்பிற்கு தான் பிரபலமானது. வசதி படைத்தவர்கள் முதல் இடஒதுக்கீட்டில் வாய்ப்பு கிடைத்தவர்கள் வரை பலரும் அங்கே படிப்பர்.
இவர்கள் அனைவரும் சங்கமிக்கும் இடமாக இருந்தது கேண்டீன். அதில் பலரை நாங்கள் அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பிற ஆண்டுகளில் படிப்பவர்கள், வேறு துறை படிப்பை சேர்ந்தவர்கள் என பலருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டோம். அதேபோல் கல்லூரி மைதானம். நான் சிலமுறை கிரிக்கெட் ஆடியிருக்கிறேன். தண்டபானியும், சுபாஷ் சந்திர போஸும் மைதானத்தில் அடிக்கடி ஆட்ட நாயகர்கள் ஆகிவிடுவார்கள். கல்லூரி படிப்பு முடிந்ததும் வேலை தேடும் படலம். நாங்கள் மூவரும் ஆளுக்கொரு திசையில் வேலை தேடிக் கொண்டோம். கையில் காசு இல்லை. செய்வதற்கு வேலை இல்லை. அடுத்து என் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் நின்ற போது, நானிருக்கிறேன் என்று தன் அறைக்கு அழைத்துக் கொண்டவர் தண்டபானி. அதன்பிறகு எனக்காக நிறைய செய்திருக்கிறார். 2016ஆம் ஆண்டு என் நண்பனின் நண்பர் ஏதோவொரு குற்றத்தால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை ஜாமீனில் எடுக்க என்னிடம் பணம் கேட்டனர். என்னிடம் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டேன். அடுத்ததாக நான் கேட்டது தண்டபானியிடம் தான். அவர் எதுவும் கேட்கவில்லை. தன்னால் இயன்ற பல ஆயிரம் ரூபாயை அள்ளிக் கொடுத்தார். பின் எனக்கு ஊடகம் ஒன்றில் வேலை கிடைக்க வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை பிறந்தது. ஏடிஎம்-களில் நிரப்பப்படும் பணத்தை நிர்வகிக்கும் பிரபல நிறுவனத்தில் சுபாஷ் சந்திர போஸிற்கு வேலை கிடைத்தது. தண்டபானி ஏற்கனவே மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். நாங்கள் வேளச்சேரி செக் போஸ்டில் இருந்த அறை ஒன்றில் தங்கியிருந்தோம். இங்கு தான் எங்களின் கொண்டாட்டமே. வாழ்நாளில் மறக்க இயலாத ஒரு நினைவுச்சின்னம் வேளச்சேரி செக்போஸ்ட் அறை.
ஒன்றாக தூங்கி, ஒன்றாக எழுந்து, ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாக ஊர் சுற்றி, ஒன்றாக படம் பார்த்து என நிறைய செய்திருக்கிறோம். நானும், தண்டபானியும் சேர்ந்து கொண்டு சுபாஷ் சந்திர போஸிற்கு எப்போதும் விளையாட்டுக் காட்டிக் கொண்டே இருப்போம். அவரை கீழே தள்ளி, மேலே ஏறி குதிப்பது, தரையில் உருட்டுவது, அவர் சட்டைக்குள் ஏதேனும் ஒரு பொருளை எடுத்துப் போட்டு விடுவது, தண்ணீரை மொண்டு வந்து ஊற்றுவது, நன்றாக அடி வெளுப்பது என கலவரமாய் பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. சுபாஷ் சந்திர போஸின் பேஸ்புக் அக்கவுண்ட்டில் இருந்து சக மாணவி ஒருவருக்கு ”ஐ லவ் யூ” மெசேஜ் டைப் செய்துவிட்டு அதற்கு Enter கொடுக்கலாமா? வேண்டாமா? என விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கும் போது மற்றொரு நண்பரை அழைத்து திடீரென Enter கொடுத்து சுபாஷ் சந்திர போஸை பல மாதங்கள் புலம்ப வைத்தது எங்கள் விளையாட்டின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும். எங்கள் அறைக்கு பக்கத்தில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பை பார்த்து, ஆளுக்கொரு மாடியை எடுத்துக் கொண்டு அங்கேயே தங்கிவிடுவோம் என்று பல கதைகள் பேசியிருக்கிறோம். இதில் தனிச்சிறப்பு என்னவென்றால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நட்பு இடைவிடாமல் தொடர்ந்து கொண்டிருப்பது தான். இன்னும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அக்கறை சிறிதும் குறையவில்லை என்பது மற்றுமொரு சிறப்பு. எனக்கும் சுபாஷ் சந்திர போஸிற்கும் எந்நேரமும் உதவி செய்ய தண்டபானி தயாராக இருப்பார். இப்போதும் இருக்கிறார். தன்னால் இயன்ற நல்லதை செய்ய வரிந்து கட்டிக் கொண்டு செய்ய சுபாஷ் சந்திர போஸும் தயாராக இருப்பார். தற்போதும் இருக்கிறார். எங்களின் எதிர்கால வாழ்க்கையை எப்படியெல்லாம் ஒன்றாக செலவிடுவது என்று சில திட்டங்களையும் நாங்கள் போட்டு வைத்திருக்கிறோம். எங்கள் மூவரின் நட்பிற்கு மட்டும் எல்லையே கிடையாது.
Tags:
நான் படித்த மனிதர்கள்