ஆத்தூரில் இருந்து பெங்களூருவிற்கு மாலை நேரப் பயணம். வழியில் தர்மபுரியில் இருந்து 37 கிலோமீட்டர் தூரத்தில் காவேரிப்பட்டினம் என்ற ஊர் வந்தது. கார் ஜன்னல் வழியே எட்டி பார்க்கையில் இரவின் நிழல் சூழப்பட்டிருந்தது. அப்போது, “இந்த ஊரில் மீன் நன்றாக இருக்கும் மாமா. சாப்பிட்டு விட்டு செல்லலாம்” என்றார் சத்யா. அவர் விருப்பப்படி நாங்களும் இசைந்து கொண்டோம். அருகருகே அமைந்திருந்த தகர மேற்கூரை பொருத்தப்பட்டிருந்த இரண்டு கடைகளுக்கு அருகே எங்களின் கார் நின்றது. உள்ளே சென்று அமர்ந்தோம். எங்களுக்காகவே காத்திருந்த ஒரு மேஜை மற்றும் நான்கு இருக்கைகளை பகிர்ந்து கொண்டோம். விறகு கட்டைகளால் எரியூட்டப்பட்டிருந்த அடுப்பில் மசாலா தடவிய மீன்கள் வெந்து கொண்டிருந்தன. எல்லாம் ஒரே மாதிரியாக காட்சி அளித்தன. ”இங்கு ஒரே வகை மீன் தான் கிடைக்குமா?” என்று சத்யாவிடம் கேட்டேன்.
”ஆம் மாமா, இவையெல்லாம் ஜிலேபி மீன்கள். இங்குள்ள ஏரியில் இருந்து பிடித்து வருகிறார்கள். சுவை மிக நன்றாக இருக்கும். இந்த மீன்களுக்காகவே பலரும் இங்கே வருகை தருவர். சிலர் வீடுகளில் பொறித்திக் கொள்ளவும் வாங்கிச் செல்வர். இந்த கடைகளில் சோறும், மீன் குழம்பும் சுவையாக இருக்கும்” என்றார் சத்யா. உடனே கடைக்காரரிடம் சொல்ல, அடுத்த சில நிமிடங்களில் எங்கள் மேஜையை சோறும், மீன் குழம்பும் அலங்கரித்தன. ஒரே தட்டில் மீன் சோற்றை பிசைந்து மூவரும் சுவைத்தோம். சற்றே காரமாக நன்றாக இருந்தது. அடுத்ததாக ஜிலேபி மீன்களுக்காக காத்திருந்தோம். ஒவ்வொன்றாக வரத் தொடங்கின. உடல் முழுக்க காரம் செரிக்க உள்ளே பஞ்சு போன்ற மென்மையான உடல் பகுதி. சுவைக்க சுவைக்க தொண்டையில் வழுக்கி கொண்டு ஓடியது. இன்னும் ஒன்று சாப்பிட்டால் நன்றாக இருக்குமே என்ற ஆசை. எங்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து அடுத்தடுத்து மூன்று மீன்கள் ஓடி வந்தன.
எல்லாவற்றையும் ஒரு கை பார்த்து விட்டோம். இனியனுக்கு மீன் என்றால் கொள்ளைப் பிரியம். அதிலும் பொறித்த மீன் என்றால் அளவில்லா மகிழ்ச்சி. மணிக் கணக்கில் சுவைத்து ராகம் பாடிய படியே இருப்பார். மீன்களை பார்த்தவுடன் இனியனின் கண்கள் விரிந்து, நாக்கில் சொட்டாம் போடும் ஒலி அலாதியானது. ”ப்ளீஸ், இன்னொரு முறை” என்று கேட்கத் தோன்றும். வழக்கமாக பொறித்த மீன்களின் வாய்ப்பகுதி எலும்பாக இருக்கும். அதை லேசாக உறிஞ்சி விட்டு அப்படியே வைத்து விடுவோம். ஆனால் இனியன் அப்படியல்ல. மீனின் தலை முதல் கால் வரை கடித்து சுவைத்து உள்ளே இறக்கி விடுவார். அன்று ஜிலேபி மீனின் ரசிகனாகி போனார் இனியன். சேலம் - பெங்களூரு சாலையில் காவேரிப்பட்டினம் ஊரை மறந்து விடாதீர்கள். ஜிலேபி மீனை சுவைக்க கையில் காசுடன் சென்று விடுங்கள். ஏனெனில் அருகில் ஏடிஎம்களோ, கடையில் டிஜிட்டல் பரிவர்த்தனை வசதிகளோ இல்லை என்று தெரிகிறது. மீன் பிரியர்கள் தயாராகிக் கொள்ளவும்.