தினேஷ் செல்வா / Dinesh Selva


சென்னையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஊடகம் ஒன்றின் தொடக்க நாளிற்காக இளைஞர் பட்டாளமே இரவு, பகலாக உழைத்துக் கொண்டிருந்தது. அப்போது என்னுடன் சக நண்பராக, ஊடகத்துறையில் எனக்கு முன்னவராக, தனது திராவிட சிந்தனையில் உறுதி கொண்டவராக பிடிப்புடன் காணப்பட்ட இளைஞர் தினேஷ். இவரது பெரியாரிய கொள்கையால் தி.க.தினேஷ் என்றே அனைவரும் அழைக்கத் தொடங்கி விட்டோம். மேற்குறிப்பிட்ட ஊடகத்தின் தொடக்கம் சாதாரணமாக அமைந்து விடவில்லை. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என உணர்ச்சி பெருக்குடன் இளைஞர் பட்டாளத்தை சீற்றத்துடன் அழைத்து சென்றவர் எங்களின் செய்தி ஆசிரியர் ராஜேஷ் சுந்தரம். இவரது ஒவ்வொரு வழிகாட்டுதலையும் நாங்கள் ஆச்சரியத்துடன் கற்று தெளிந்திருக்கிறோம். அதுமட்டுமின்றி எங்கள் செய்தி வெளியீட்டு பிரிவின் தலைவர்கள் பலரும் பல்வேறு விதங்களில் ஆலோசனைகளை வழங்கி எங்களை மெருகேற்றி இருக்கின்றனர். அந்த பட்டாளத்தில் நானும் தினேஷும் ஓர் அங்கமாக இருந்தது எங்களின் வாய்த்த பேறு. ஒவ்வொரு நண்பருக்கும் ஒரு சிறப்புண்டு. அந்த வகையில் தினேஷ் உடனான நட்பு பல்வேறு விதங்களில் இன்றளவும் தொடர்ந்து வந்துள்ளது.


இவருடன் சமகால அரசியலையும், பெரியாரிய சிந்தனைகளையும், பொதுவுடைமை சித்தாத்தங்களையும் பேசிப் பேசி சிந்தனைகளை விரிவாக்கம் செய்து கொண்டே வந்திருக்கிறேன். குறிப்பாக என் சிந்தனை ஓட்டம் தெளிவு பெற தினேஷ் பலமுறை வழிகாட்டி இருக்கிறார். முதல் ஊடகப் பணியின் போது இரவுநேரப் பணியில் வேலை செய்தது, மூத்தவர் துரைராஜ் உடனான சித்தாந்த மோதல்கள், மதிய உணவிற்காக வெளியே சென்றது, CMPC வாராந்திர கூட்டத்தில் கலந்து கொண்டது, 'காக்கா முட்டை’ திரைப்படத்தின் பாராட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றது என நினைவுகளில் நீங்கா இடம்பிடித்தவை ஏராளம். அதுமட்டுமின்றி ராஜிவ் காந்தி கொலை வழக்கு, விடுதலைப் புலிகளுக்கு அடைக்கலம் தந்த அரசியல் பின்னணி, அதிமுகவின் உட்கட்சி பூசல், சசிகலாவின் அரசியல், ரஜினியின் அரசியல் ஏமாற்றம் என பல விஷயங்கள் குறித்து தினேஷுடன் விரிவாக பேசியிருக்கிறேன். என்னுடைய முதல் ஊடகத்தில் தான் எனக்கான சொந்தங்கள் ஏராளம். அவர்களில் பலரை என் திருமணத்திற்கு அழைத்திருந்தேன். அதில் சென்னையில் இருந்து ஆத்தூருக்கு எனக்காக பயணித்த நண்பர்களில் தினேஷும் ஒருவர்.

முன்தினம் இரவே வந்து சேர்ந்துவிட்டார். அவருக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்று சிறிது உரையாடினேன். மறுநாள் திருமண நிகழ்வில் என்னை வாழ்த்தி புத்தகங்களை பரிசாக அளித்தார். அவை இன்றும் தினேஷ் குறித்து நினைவுகளை அளித்துக் கொண்டே இருக்கின்றன. இவரை பார்த்து நான் பொறாமைப்படும் விஷயம் நண்பர்கள் கூட்டம். கல்லூரியில் ஒன்றாக படித்த நண்பர்கள் சிலர் தொடர்ச்சியாக தங்கள் நட்பை இன்றளவும் உறுதி செய்து கொண்டே இருக்கின்றனர். பிறந்த நாள் கொண்டாட்டங்கள், திருமண நிகழ்வுகள், சுற்றுலாவிற்கு செல்வது என பல்வேறு நிகழ்வுகளில் ஒன்றாக கூடியதை அடிக்கடி கவனித்திருக்கிறேன். இதற்கு முற்றிலும் எதிரான நிலையில் இருக்கும் எனக்கு பொறாமை குணம் தோன்றுவது இயல்பு தான். ஒருமுறை இவரது பிறந்த நாளை ஒட்டி வாழ்த்து தெரிவித்தது மறக்க முடியாத நிகழ்வு. தினேஷின் செல்போனில் சரியாக சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இருப்பினும் என் மனம் ஆறவில்லை. தொடர்ந்து முயற்சித்து பிறந்த நாள் வாழ்த்து கூறினேன். நட்பின் வீரியத்தை அது நமக்கு தோன்றும் போதே வெளிப்படுத்தி விட வேண்டும்.

அதைத் தான் நானும் அன்று செய்ததாக தோன்றுகிறது. சமீபத்தில் பெரியார் பிறந்த நாளை ஒட்டி நிகழ்ந்த நீண்ட உரையாடல் என் வாழ்நாளில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம். அதில் பல கேள்விகளுக்கு விடை கிடைத்தது. பெரியாரை எதிர் நிலையில் இருந்து விமர்சிப்பவர்கள் யார்? அவர்களிடம் இருக்கும் ஆதாரம் என்ன? சூழலுக்கு ஏற்ப பிரதிவினை காட்டும் பெரியாரின் இயல்பு, புனிதத்தன்மையை அடித்து நொறுக்கிய விஷயம், பெரியார் பற்றிய அவதூறுகள் என்ன? அவரைப் புரிந்து கொள்ள கற்க வேண்டிய புத்தகங்கள் என ஆழமான அரசியல் புரிதல்களை பெற நேர்ந்தது. இவரது இடைவிடாத புத்தகம் படிக்கும் பழக்கமும், அரசியலை புரிந்து கொள்ளும் விதமும் தான் சிந்தனையை மிகவும் ஆழப்படுத்தி இருக்கக்கூடும் எனத் தோன்றுகிறது. அதுவும் திராவிட சித்தாந்தத்தை எதிர்நிலையில் இருந்து அணுகி, அதன் ஊடாக நேர்மறை சிந்தனைகளை ஊற்றாக வரும்படி பழக்கப்படுத்தி இருக்கிறார். நமது சமகாலத்தில் சித்தாத்த ரீதியாக எதிர் நிலையில் இருப்பவர்களை சமாளிக்க பெரியாரியத்தை, அம்பேத்கரியத்தை, பொதுவுடைமையை ஆழமாக கற்றவர்கள் தேவை. இவர்களின் எழுத்து, பேச்சு, ஓவியம், கலை என ஏதாவது ஒரு திறன் வலிமையாக இந்த சமூகத்தில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அதில் இவர் சற்றே சோம்பல் காட்டுவது என்னைப் போன்றோருக்கு ஏக்கத்தை கூட்டுகிறது. இருப்பினும் என்னால் முடிந்தவரை இவரது சிந்தனைக் களஞ்சியத்தை வசப்படுத்த முயற்சித்துக் கொண்டே இருக்கிறேன்.
Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post