மீண்டும் சத்யா


நம் வாழ்நாளில் சிலர் அடிக்கடி வந்து நட்பு பாராட்டுவதை பார்த்திருப்போம். ஆனால் ஒரே பெயர் வெவ்வேறு வடிவங்களில் வருவது சற்று வித்தியாசமான அனுபவம். அந்த வகையில் ’சத்யா’ என்ற பெயர் பலமுறை வெவ்வேறு வடிவங்களில் என்னை பின்தொடர்ந்து வந்துள்ளது.

முதல்முறை ’சத்யா’ என்ற பெயர் கமல் நடித்த படத்தின் வாயிலாக அறிமுகமானது. வேலையின்றி சுற்றி திரியும் இளைஞர் ஒருவர் சமூக அநீதிகளை கண்டு கொதித்தெழுவார். ஒருகட்டத்தில் அரசியல்வாதிக்கு அடியாளாக மாறி அவரது வாழ்க்கை எப்படி தடம் புரண்டது. அதற்கு இறுதியாக எப்படி முற்றுப்புள்ளி வைக்கிறார் என்று கதை செல்லும். இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்த படம். அதில் வரும் “போட்டா படியுது படியுது, துணிஞ்சவன் கேட்டா விடியுது விடியுது” என்ற பாடல் கல்லூரி நாட்களில் அடிக்கடி உணர்ச்சியை தூண்டும் வகையில் இருக்கும். ஆனால் “நீதியை காப்பதற்கு தீக்குளிப்போம்” என்ற வரிகள் அபத்தமாக தோன்றும். முடிந்தவரை போராடுவோம் என்பது தானே எந்தவொரு சூழலுக்கும் சரியானதாக இருக்கும். அதற்கு உயிர் தியாகம் செய்வது என்பதை என் மனம் ஏற்க மறுக்கும்.
அடுத்ததாக பள்ளி நாட்களில் என்னுடன் படித்த சக மாணவியாக, தோழியாக இருந்தவர் சத்யா. உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, எங்கள் வகுப்பில் மாணவர்கள் தவறு செய்தால் அடிப்பதற்காக மூங்கில் குச்சி வாங்கி வைத்திருப்போம். இதற்காக மாணவர்கள் அனைவரும் சிறிய தொகையை அளித்து வகுப்பறைக்கு என்று பணம் சேர்த்து வைத்திருப்போம். அந்த குச்சியை பிற வகுப்பினர் அடிக்கடி கடன் வாங்கிச் சென்றுவிடுவர். சிலமுறை குச்சி உடைந்து, பிளந்து பயனற்ற நிலையில் திரும்பி வரும். இவ்வாறு நடக்காமல் முன்கூட்டியே வாங்கி வருவதற்கு வகுப்பு தலைவனாக நான் சென்றிருக்கிறேன். ஆனால் என்னை சமாளித்து குச்சியை தராமல் திருப்பி அனுப்பி வைத்துவிடுவர். அப்போது இங்கு யார் பேச்சால் வல்லவர் என்று, எங்கள் ஆசிரியர் பட்டியல் போடுவார். அவர்களில் ஒருவராக சத்யா இருப்பார். எந்த ஆசிரியராக இருந்தாலும் பிடிவாதமாக நின்று, பேசி காரியத்தை சாதித்துவிடுவார். இவரைப் பார்த்தே மற்ற வகுப்பு ஆசிரியர்கள், ’இந்தா உங்க மூங்கில் குச்சி’ என்று திருப்பி தந்துவிடுவர். ஒருமுறை பாளையங்கோட்டை வினாத்தாளை வைத்து எங்கள் வகுப்பில் தேர்வு நடத்தப்பட்டது. அதில் கணிதத் தேர்வில் 30 மதிப்பெண் எடுத்து தோல்வியடைந்தேன். அப்போது சத்யாவும், சக தோழிகளும் பேசி ஆசிரியரை 35 மதிப்பெண் போட வைத்து என்னை தேர்ச்சி பெற வைத்தனர். தற்போது நாங்கள் படித்த அதே பள்ளியில் அரசு ஆசிரியராக சிறப்பான முறையில் சத்யா பணியாற்றி கொண்டிருக்கிறார். இந்த வாய்ப்பு எத்தகைய பெரும் பேறு. ஊருக்கு செல்லும் போதெல்லாம் இவருடன் சிறிய அளவிலான உரையாடல்கள் இன்றும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.
அதே பள்ளி நாட்களில் என்னை விட 7-8 ஆண்டுகள் இளையவராக, நான் படித்து வந்த டியூசன் நடக்கும் இடத்தில் வழிப்போக்கராக அறிமுகமானவர் சத்யா. தினமும் மாலை வேளையில் சொசைட்டிக்கு பால் ஊற்றுவதற்காக செல்வார். அந்த நேரத்தில் தான் எங்களுக்கும் டியூசனும் நடந்து கொண்டிருக்கும். அப்போது அவ்வழியே செல்லும் சத்யா, திடீரென வகுப்பிற்குள் வந்து பயம்காட்டி செல்வார். பின்னர் ஆசிரியர் உத்தரவுப்படி அவரை விரட்டி பிடிக்கச் செல்வோம். ஆனால் பிடிபட மாட்டார். பின்னாளில் எனக்கு நெருங்கிய தங்கையாக மாறினார். அதன்பிறகு நடந்த சந்திப்புகளின் போது எங்களின் உரையாடல்கள் நீள ஆரம்பித்தன. ஊர் திருவிழாக்களின் போது அவரைத் தேடுவேன். முதன்முதலில் 'உனக்கு ஏதாவது வாங்கி தரட்டுமா பாப்பா?’ என்று கேட்ட நபர் இவர் தான். ஆனால் எதுவும் வேண்டாம் என்று மறுத்துவிடுவார். சிறிய விளையாட்டு பொருட்கள் முதல் தின்பண்டங்கள் வரை எதையாவது வாங்கித் தரட்டுமா? என்று எனது கெஞ்சல்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன.
எங்கள் ஊர் தொடக்கப் பள்ளியில் கோடை விடுமுறையின் போது ஒருமாத காலம் ஆங்கிலமும், கணிதமும் கற்றுத் தரும் சிறப்பு வகுப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது ஆசிரியர் பயிற்சி படித்து முடித்திருந்த என்னை அந்தப் பள்ளி ஆசிரியர்கள் கண்டுகொண்டனர். வெற்றிகரமாக ஒருமாத காலம் பயிற்சியை அளித்தேன். அதன்பிறகு மாணவர்கள் மீதான ஆர்வம் அதிகரித்தது. ஓய்வுநேரத்தை நானே உருவாக்கிக் கொண்டு பள்ளிக்கு சென்றுவிடுவேன். ஒருசமயம் அந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது சேர்க்கைக்காக வந்திருந்த ஒரு சிறுமியின் பெயர் சத்யா. ஒன்றாம் வகுப்பிற்கு சென்று பாடம் நடத்தும் போது சத்யாவின் மீது எப்போதும் ஓர் ஈர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். அவரை கலகலப்பாக வைத்திருக்க எதையாவது நகைப்பான விஷயங்களை செய்வேன். அது சத்யாவை மட்டுமல்ல ஒட்டுமொத்த வகுப்பறையையும் குலுங்க வைக்கும். பள்ளி ஓய்வு நேரங்களில் சத்யாவுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவது, நொண்டி விளையாடுவது, புளிப்பு மிட்டாய் சாப்பிடுவது, புத்தகம் படிப்பது என எங்கள் அன்பின் கரங்கள் இறுக்கமாகின. பின்னர் எங்கள் வீட்டில் டியூசன் எடுத்த போது சத்யாவின் அக்கா ரூபா என்னிடம் படிக்க வந்தார். அவருடன் எப்போதாவது சத்யாவும் வருவார். அப்போதெல்லாம் சிறிய சிறிய பரிசுகள் அளிப்பதை மறக்காமல் செய்திருக்கிறேன். ஊர் திருவிழாவின் போது ஒருமுறை எனது செல்போனில் இருவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அந்தப் படத்தை பிரேம் போட்டு அவரது வீட்டிற்கே சென்று பிறந்த நாள் பரிசாக அளித்திருக்கிறேன். எங்களின் படம் அவர்கள் வீட்டு தொலைக்காட்சியின் மீது பல வருடங்கள் அப்படியே இருந்தது இன்றும் நெஞ்சை குளிர வைக்கும் நினைவுகள்.
டியூசன் நாட்களில் மாணவர்களுக்கு பாடத்தையும் தாண்டி, கதைகள், பொது அறிவு, அன்றாட செய்திகள் என பலவற்றை பேசியிருக்கிறேன். அதில் நானே சில சிறிய கதைகளை எழுதி அவர்கள் முன்பு படித்திருக்கிறேன். அவற்றில் சற்றே பெரிய கதையாக இருந்தவை இரண்டு. அதில் ஒருகதை நேற்று இரவு உறக்கத்திற்கு முன்பு திடீரென நினைவுக்கு வந்தது. அந்த கதையை யாரோ ஒரு மாணவரிடம் கொடுத்துவிட்டேன் என்று நினைவு. அவர் யாரென்று தெரியவில்லை. ஆனாலும் கதையின் சாராம்சம் கொஞ்சம் நினைவிருக்கிறது. சேலம் 7 ஆர்ட்ஸ் கல்லூரியில் இளங்கலை கணிதம் படிக்கச் சென்ற போது, காலை நேர ரயில் பயணம் மறக்க முடியாத அனுபவம். அப்போது சேலம் டவுன் ரயில் நிலையத்தில் நாடோடிகளின் கூட்டம் அவ்வப்போது கூடாரம் போட்டிருக்கும். அங்கு வசித்து வந்த சிறுமி அடிக்கடி ரயில் நிலையத்திற்குள் வந்து தனது நாய்க் குட்டியுடன் விளையாடிக் கொண்டிருப்பாள். கல்லூரி வகுப்பு முடிந்த பல சமயங்களில் டவுன் ரயில் நிலையத்தில் அமர்ந்து பலவற்றை சிந்தித்திருக்கிறேன். அப்போது என் கவனத்திற்கு அந்த சிறுமி வந்தார். அடுத்த சில நாட்களில் சிறுமியிடம் தொடர்ச்சியாக நான் கவனித்த விஷயங்கள் புதிய கதைக்கு அச்சாரம் போட்டன. அப்போதைய எனது அனுபவங்கள், சிந்தனை ஓட்டத்தை வைத்து கதையை எழுதியிருந்தேன். அதற்கு நான் வைத்த பெயர் “சத்யா”. இந்த கதையை மீட்டுருவாக்கம் செய்யும் எண்ணம் தற்போது தோன்றியுள்ளது. சிறிய முன்னுரையை மட்டும் அளிக்கிறேன். பாரதியின் தீவிர பற்றாளனாக கல்லூரிக்குள் நுழையும் இளைஞன். டவுன் ரயில் நிலையத்தில் சிறுமியை கண்டு அவருடன் நட்பை ஏற்படுத்திக் கொள்கிறார். இந்த அன்பு உச்சம் தொடும் போது சிறுமி காணாமல் போய் விடுகிறார். அதன்பிறகு என்ன நடந்தது என்று கதை நீளும். இதில் எனக்குள் இருக்கும் தங்கை பாசத்தை கொட்டித் தீர்த்திருப்பேன். இந்த கதையை மீட்டுருவாக்கம் செய்யும் பணி அவ்வளவு எளிதானது அல்ல. சில மாதங்கள் பிடிக்கும் என நினைக்கிறேன். முயன்று பார்க்கிறேன்.
தற்போது சகோதரராகவும், சகோதரியாகவும் மீண்டும் இரண்டு 'சத்யா'க்கள். இதில் சகோதரருடன் ஏற்கனவே அன்பை பகிர்ந்து கொண்ட நிலையில், சகோதரி உடனான அன்பிற்காக சென்னை என்னை அழைத்துள்ளது.
Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post