அன்பு / Anbu MBBS MS

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டது. நானும், அன்புவும் அருகருகே அமர்ந்து கொண்டோம். கடந்த கால அனுபவங்கள், அடுத்த என்ன செய்யப் போகிறோம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். சில மணி நேரங்களுக்கு பின் இருவரும் தனித்தனி படுக்கைகளில் படுத்துக் கொண்டோம். இங்கிருந்து நினைவலைகளை பின்னோக்கி நகர்த்துவோம். இந்தப் பயணத்திற்கு முன்னும், பின்னும் எங்கள் இருவருக்கும் இடையிலான நட்பு, நடந்த விஷயங்கள் ஏராளம் உண்டு. எங்களின் நட்பு தேவியாக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பில் தொடங்கியது. நானும், அன்புவில் 6C-ல் சேர்ந்தோம். கணிதத்தில் அன்பு மிகவும் திறமை வாய்ந்தவர். நாங்கள் எல்லோரும் கடினமாக கணக்குகளை போட சற்று நேரம் எடுத்துக் கொண்டிருப்போம். அவர் சில விநாடிகளில் விடை கண்டுபிடித்து விடுவார். அவ்வப்போது விரைவாக கணக்கு போடும் உத்திகளையும் அறிமுகப்படுத்துவார். ஒருமுறை பாளையங்கோட்டையில் இருந்து வந்திருந்த வினாத்தாள்களை கொண்டு எங்களுக்கு தேர்வு நடத்தினர். இதில் கேள்விகள் எதுவும் நேரடியாக இல்லாமல் சுற்றி வளைத்து கேட்டிருந்தனர். ஒட்டுமொத்த வகுப்பும் 35 மதிப்பெண் எடுக்க முடியாமல் தோல்வியடைந்த போது, 70 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த ஒற்றை ஆளாக அன்பு எங்களை பிரம்மிக்க வைத்தார். 12ஆம் வகுப்பில் ஒருமுறை எங்களின் கணக்கு ஆசிரியர் ஒரு கணக்கை கரும்பலகையில் போட்டு கொண்டிருந்தார். அப்போது சரியான விடையை கொண்டு வருவதற்கான வழி தெரியாமல் தவித்த நேரம். உடனே எங்களை முயற்சித்து பார்க்கச் சொன்னார். நாங்களும் செய்து பார்த்துக் கொண்டிருந்தோம்.

அந்த சமயத்தில் ஒட்டுமொத்த வகுப்பறையையும் மிரள வைக்கும் வகையில் ’நான் போட்டுட்டேன் சார்’ என்று சில நிமிடங்களில் கையை தூக்கினார். ஆசிரியர் வேகமாக ஓடிவந்து அன்பு போட்ட கணக்கை வாங்கிப் பார்த்து வியந்தார். இதை எப்படி போட்டீர்கள் என்று விளக்கம் கேட்டார். அன்பு மீது ஆசிரியருக்கு ஏற்பட்ட பொறாமையை அவரது கண்களில் தெளிவாகப் பார்க்க முடிந்தது. இப்படி பள்ளி நாட்களில் பலமுறை அன்பு எங்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். கணித மேதையாக வருவார் என்று கணக்கு போட்டு வைத்திருந்த சூழலில், காலம் வேறு மாதிரியான காட்சிகளை காட்டியது. உடல்நலக்குறைவால் தனது தந்தையின் இறப்பு அன்புவை பெரிதும் வாட்டியது. அந்த சூழலை நினைவூட்டி, ’இப்படியொரு நிலை இனிமேல் யாருக்கும் வரக்கூடாது. எனவே எப்படியாவது நீ மருத்துவராகி விடுபா’ என்று அவருடைய அக்கா தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருப்பார். 12ஆம் வகுப்பு முடித்த சமயத்தில் பொறியியல் படிப்பில் சேர ஆர்வத்துடன் இருந்த அன்புவை மருத்துவம் படிக்க வேண்டும் என்று அக்கா பெரிதும் வலியுறுத்தினார். இதன் விளைவாக கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் இளங்கலை மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். அப்போது நான் ஆசிரியர் பயிற்சி படித்துக் கொண்டிருந்த நேரம். இந்நிலையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் அன்பு தங்கியிருந்த விடுதிக்கு சென்று தங்கியிருக்கிறேன். அந்த சமயத்தில் மருத்துவ நண்பர்களுக்குள் யாருக்கு ’போஸ்டிங்’ என்று பேசிக் கொள்வார்கள். எனக்கோ, போஸ்டிங் என்றால் பணி நியமனம் தானே? என்று கேள்வி எழும். ஆனால் மருத்துவத்திலோ ஷிப்ட் முறையிலான வேலையை இவ்வாறு அழைப்பதாக பின்னர் தெரியவந்தது.

கியர் வைத்த மோட்டார் சைக்கிளை எனக்கு ஓட்டத் தெரியாது. அந்த வாகனத்தை வைத்து தான் கோவையின் பல்வேறு இடங்களுக்கும் அன்பு என்னை அழைத்துச் சென்றார். ஒருசமயம் கோவையில் உள்ள மைதானம் ஒன்றிற்கு அழைத்து சென்று, மோட்டார் சைக்கிளை இயக்க எனக்கு கற்றுக் கொடுத்தார். தட்டுத் தடுமாறி மைதானத்தை சுற்றி வந்தேன். அந்த நிகழ்வு இன்றும் என் நினைவில் இருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் சென்னையின் பிரபல கல்லூரியில் முதுகலை கணினி அறிவியல் பயன்பாட்டியல் படிப்பில் நான் சேர்ந்து படிக்கத் தொடங்கினேன். 2011ல் முதலாமாண்டு நிறைவடைந்து விடுமுறை நாட்களில் இருந்த போது அன்புவிடம் இருந்து அழைப்பு வந்தது. ”முதுகலை மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு டெல்லியில் நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்ள செல்கிறேன். நீயும் வா” என்று என்னை அழைத்தார். இதற்கான ஏற்பாடுகளுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டோம். டெல்லி சென்றடைந்த உடன் அறை ஒன்றை எடுத்து தங்கினோம். கலந்தாய்விற்கு சென்று முதுகலை மருத்துவம் (MS) படிப்பதற்கான கல்லூரியை தேர்வு செய்தாகிவிட்டது. அதன்பிறகு ஊர் சுற்றும் படலம். தலைநகரின் பல்வேறு இடங்களுக்கு நடந்தே சுற்றினோம். வழி தெரியாமல் வேறு எங்காவது சென்று விட்டால் என்ன செய்வது? என்று கேட்டேன். அதற்கு ”என் மொபைலில் ஜிபிஎஸ் வசதி இருக்கிறது” என்று கூறினார். அப்படினா? என்று கேள்வி கேட்டேன். ”நாம் இருக்கும் இடத்தை செயற்கைக்கோள் கண்டறிந்து கொள்ளும். அதை வைத்து கூகுள் மேப்பில் போக வேண்டிய இடத்தை தேடினால் அது நமக்கு வழிகாட்டும்” என்று கூறினார். முதல்முறை ஜிபிஎஸ் பயன்பாடு எனக்கு அன்புவிடம் தான் கிடைத்தது.

டெல்லி மக்களின் வாழ்வியலை ரசித்தது, அரசு அலுவலகங்களை கண்டது, குதிரை வண்டிகளின் ஓட்டம், பூங்காக்கள், விவேகானந்தர் நினைவிடம், இந்தியா கேட், உச்ச நீதிமன்றம், நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை உள்ளிட்ட இடங்களை கண்டோம். மதிய நேரத்தில் சாப்பாடு கிடைக்காமல் ஓட்டல் ஒன்றில் ரொட்டியும், வடநாட்டு கிரேவியும் உண்டதை மறக்கவே முடியாது. பின்னர் பேருந்து மூலம் ஆக்ராவிற்கு புறப்பட்டோம். அங்கு தாஜ்மஹாலை கண்டு ரசித்தோம். ஓரிடத்தில் துணிக் கடை ஒன்றை கவனித்தோம். மூங்கில் சேலைகள் என்று வித்தியாசமான ஆடைகளை கண்டோம். அன்பு தனது அக்காவிற்காக ஒரு சேலை வாங்க, நான் அம்மாவிற்காக சேலை ஒன்றை வாங்கினேன். டெல்லி சுற்றுப்பயணம் முடிந்ததும் ஓட்டல் அறையை காலி செய்ய திட்டமிட்டோம். அப்போது நாங்கள் திட்டமிட்டதை விட  ஒருமணி நேரம் தாமதம் ஆகிவிட்டது. இதற்காக அடுத்த ஒருநாள் வாடகையை ஓட்டல் ஊழியர்கள் கேட்டனர். இதனால் கோபமடைந்த அன்பு அங்கிருந்த மேஜையை தட்டி “I want to talk to the Manager" என்று சத்தம் போட்ட போது நான் அதிர்ந்தே விட்டேன். சில நிமிடங்கள் இந்த வாக்குவாதம் நீடித்தது. அதன்பின்னர், நான் கொடுத்துவிடலாம், விடுங்கள் என்று சமாதானம் செய்ய ஒருவழியாக பிரச்சினை முடிவுக்கு வந்தது. பின் ஏடிஎம்மிற்கு சென்று பணம் எடுத்து வந்து அன்புவிடம் கொடுத்தேன். பணத்தை செட்டில் செய்துவிட்டு மீண்டும் ரயிலேறி சென்னை வந்து சேர்ந்தோம்.

அதன்பிறகு இருவரும் அவரவர் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினோம். MS படித்து முடித்துவிட்டு, தற்போது கள்ளக்குறிச்சி நகரில் தனக்கென்று ஒரு மருத்துவமனையை (அன்பு மருத்துவமனை) கட்டமைத்துக் கொண்டு ’கைராசி டாக்டர்’ என்று பெயர் பெறும் அளவிற்கு உயர்ந்துள்ளார். இந்த கைராசி என்ற வார்த்தையை எனது சக நண்பர்கள் அவரைப் பார்த்து சிகிச்சை பெற்ற பின்னர் கூறியதை கேட்டிருக்கிறேன். கள்ளக்குறிச்சி நகரையே பூர்வீகமாக கொண்ட தோழி ஒருத்தி இதனை அடிக்கடி என்னிடம் கூறியிருக்கிறார். தற்போது கூட எங்கள் நண்பர் கூட்டத்திற்கு மருத்துவ ரீதியாக பல்வேறு உதவிகளை அன்பு செய்து கொண்டிருக்கிறார். அதில் நானும் ஒருவனாக இருப்பதில் எனக்கும் பெருமை. அன்பு தனது திருமணத்திற்கு என்னை அழைத்திருந்தார். ஆனால் பெங்களூருவில் புதிதாக பணியில் சேர்ந்திருந்ததால் என்னை வர இயலவில்லை. இது இருவருக்குமே ஒரு குறையாகவே இருந்து வந்தது. பின்னர் எனது திருமணத்திற்கு தவறாமல் வந்து இருவரின் குறையையும் போக்கும்படி செய்துவிட்டார். அன்புவின் பயணத்தில் அவரது அக்காவின் பங்களிப்பு அளப்பறியது. எங்களையும் அவ்வப்போது விசாரித்து அன்பை வாரி வழங்குவார். அக்கா, மாமா, அவர்களது பிள்ளைகள், மனைவி, மகன், மகள் என அழகிய குடும்பாய் அன்பு பூத்துக் குலுங்கி கொண்டிருக்கிறார். அன்புவின் மருத்துவப் பணி சிறக்க வேண்டும். நற்பெயர் தலைத்தோங்க வேண்டும். தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைத்து மக்களின் மனம் குளிர வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் ஆசை.

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post