மிரட்டிய பாளையங்கோட்டை


பள்ளிக்கால நினைவுகள் என்றாலே தனி சுகம் தான். அதிலும் நான் படித்த காலத்தில் எங்கள் ஊர்ப் பள்ளியும், அதன் தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும், மாணவர்களும் தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள். தேவியாக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி. தற்போது இந்தப் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக உயர்ந்து நிற்கிறது . 90களில் தொடங்கி 2000ன் இறுதி வரை எங்கள் பள்ளிக்கு பெரிய அளவில் மவுசு உண்டு. ஆத்தூர், தலைவாசல் சுற்றுவட்டாரத்தில் நல்லொழுக்கமும், சிறந்த கல்வியும் கற்றுத் தரும் பள்ளிகளில் முதன்மையானதாக திகழ்ந்தது. 5 கிலோமீட்டர் சுற்றளவில் ஓர் உயர்நிலைப்பள்ளி இருக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை. அப்படியொரு சூழல் இருந்த போதும் 15 கிலோமீட்டர் தூரம் கடந்து வந்து எங்கள் பள்ளியில் படித்தவர்களும் இருக்கிறார்கள். அந்தளவிற்கு பெயர் பெற்று விளங்கியது. இதற்கு எங்கள் தலைமை ஆசிரியர்களும், வகுப்பு ஆசிரியர்களும் தான் காரணம். இந்தப் பள்ளியில் எனக்கான நினைவுகள் ஓராயிரம் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றுள் சட்டென நினைவுக்கு வந்ததை இங்கே பகிர விரும்புகிறேன். எங்கள் ஊர்ப் பள்ளியில் 1998ஆம் ஆண்டு 6ஆம் வகுப்பில் சேர்ந்தேன். அப்போது எங்கள் தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் அவர்கள். எப்போதும் வெள்ளை நிற உடையில் கம்பீரமாக வலம் வருபவர். எல்லையை காக்கும் ராணுவ வீரரைப் போல் எங்கள் பள்ளியை சிறக்க வைத்துக் கொண்டிருந்தார். அவரைப் போன்ற தோரணையில் இருக்க வேண்டும் என்று நான் பலமுறை எண்ணியது உண்டு. 6ஆம் வகுப்பு சி பிரிவில் அமர்த்தப்பட்டேன். எங்கள் வகுப்பு ஆசிரியரான கணேசன் அவர்கள், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய இரு பாடங்களையும் நடத்தி வந்தார்.

ஒவ்வொரு பாடம் நடத்தி முடித்தவுடன் ஒரு மதிப்பெண், இரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் கேள்விகள் என தனித்தனியாக பாட வாரியாக ஆசிரியர்கள் தேர்வு நடத்துவர். அது தினசரியாகவோ அல்லது வாரம் ஒருமுறையாகவோ இருக்கக்கூடும். இதையடுத்து மாதாந்திர தேர்வுகள் நடத்தப்படும். இவை அனைத்திலும் படு சுட்டியாய் விளங்கிய எனக்கு, ஒட்டுமொத்தமாக ஆட்டம் காட்டிய தேர்வு ஒன்று உண்டு. எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பள்ளிக்கூடமே அந்தப் பெயரை கேட்டால் அச்சப்படும். கலங்கும். போச்சு எல்லாம் முடிந்தது என்று சொல்லத் தோன்றும். எப்படியும் தேர்ச்சி பெறப் போவதில்லை என்ற நினைவு தான் பெரும்பாலும் வரும். இந்த தேர்வை கேள்வித்தாள் தயாரிக்கப்பட்ட ஊரை அடிப்படையாகக் கொண்டு தான் அழைத்தோம். வழக்கமான கேள்வித்தாளை காட்டிலும் வித்தியாசமான வண்ணத்தில் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும். ஆனால் அதன் கேள்விகள் பல கிலோமீட்டர் தூரம் மூச்சிறைக்க எங்களை ஓட வைக்கும். இவ்வளவு பிரம்மாண்டம் கொடுக்கும் அந்த தேர்வு வேறெதுவும் இல்லை, “பாளையங்கோட்டை” கேள்வித்தாள்களைக் கொண்டு நடத்தப்பட்ட தேர்வு தான். இங்கிருந்து கேள்வித்தாள் தயாரிக்கப்பட்டு தமிழகத்தின் பல பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு மாதாந்திர அல்லது அலகுத் தேர்வுகள் நடத்தப்படும். 90களில் தமிழக அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் ”பாளையங்கோட்டை” கேள்வித்தாள்களை கேள்விப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வழக்கமாக ஒவ்வொரு பாடத்தின் இறுதியில் இருக்கும் கேள்விகளைப் போன்று, நேரடி கேள்விகளுக்கு பதிலளித்து தான் எங்களுக்கு பழக்கம்.
ஆனால் பாளையங்கோட்டை கேள்வித்தாளில் எல்லாவற்றையும் சுற்றிவிட்டிருப்பார்கள். ஒரு மதிப்பெண் வினாக்களில் இருந்து ஐந்து மதிப்பெண் வினாக்கள் வரை எல்லாமே மிகவும் கடினமாக இருக்கும். எந்தவொரு கேள்விக்கும் இதுதான் பதில் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. மனம் தடுமாறிக் கொண்டே இருக்கும். தெரிந்த கேள்விகள் ஒன்றிரண்டு தான் காணப்படும். மற்ற கேள்விகள் அனைத்தும், ஒருவேளை வேறு வகுப்புகளில் இருந்து கேட்டு விட்டார்களோ? என்று ஆசிரியரிடம் போய் கேட்கத் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. எங்களுக்கு கற்பிக்கப்பட்டது அந்தளவிற்கு தான். அதற்காக ஆசிரியரை குறைசொல்லி விட முடியாது. அவர்களையே திணறடிக்கும் கேள்விகள் கூட சில சமயம் இருக்கும். தேர்வு முடிந்து எங்களிடம் விடைத்தாள் கொடுக்கும் போது, மொத்த வகுப்பும் மயான அமைதியுடன் இருக்கும். பெரும்பாலும் சிலர் மட்டும் தான் தேர்ச்சி பெற்றிருப்பர். அதுவும் ஓரிலக்க எண்ணிக்கையில் தான். இப்படிப்பட்ட கேள்விகளை தயாரிக்கும் அந்த ஆசிரியர்களை நேரில் பார்க்க மாட்டோமா? அவர்களிடம் எங்கள் உள்ளக் குமுறல்களை அள்ளி இறைக்க மாட்டோமா? என்றெல்லாம் நினைக்கத் தோன்றும். அப்படியொரு தேர்வை 6ஆம் வகுப்பில் இருந்தே எழுதத் தொடங்கிவிட்டோம். அரையாண்டுத் தேர்விற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ நடத்தப்பட்ட தேர்வு என்று நினைக்கிறேன். பாளையங்கோட்டையில் இருந்து வந்திருந்த 6ஆம் வகுப்பு கணித்தேர்விற்கான கேள்வித்தாள். அதை நீண்ட நேரம் திருப்பி திருப்பி பார்த்தோம். பதிலளிக்க முடியாமல் திணறினோம். ஒருவழியாக முடிந்தவரை பதிலளித்தோம்.
அடுத்த சில நாட்களில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு கணேசன் ஆசிரியர் எங்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கினார். வகுப்பறைக்கு வெளியே மரத்தடியில் அனைவரும் அமர்ந்திருந்தோம். என்னுடைய விடைத்தாள் வந்தது. 100க்கு 30 மதிப்பெண்கள். 35 மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி. இல்லையெனில் தேர்ச்சியில்லை. அதுவும் நான் படித்த வகுப்புகளில் முதல்முறை தேர்ச்சி பெறவில்லை. வகுப்பில் ஒரேவொரு நபர் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர் தான் எங்கள் நண்பர் அன்பு. 100க்கு 76 மதிப்பெண் என்று நினைக்கிறேன். 12ஆம் வகுப்பு வரை கணக்கில் படு சுட்டியாய் விளங்கிய இவர், பின்னாளில் மருத்துவம் படித்து கள்ளக்குறிச்சி நகரில் புகழ்பெற்ற மருத்துவராக தடம்பதித்தது வேறு கதை. என்னுடைய விடைத்தாளை வைத்துக் கொண்டு என்னை அழைத்து ஆசிரியர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மாணவிகள் சிலர் ஆசிரியரிடம் வந்தனர். ”என்ன சார் இது! இப்படி கேள்வி கேட்டால் எங்களால் எப்படி பதிலளிக்க முடியும்” என்றவாறு புலம்பிக் கொண்டிருந்தனர். அப்போது என்னுடைய மதிப்பெண்ணை அவர்கள் பார்த்தனர். ”இந்த பையனே இவ்வளவு தானா?” என்று வாயடைத்து போயினர்.
உடனே கணேசன் ஆசிரியரிடம், “சார், அதான் பக்கத்தில் வந்துவிட்டாரே. இன்னும் 5 மதிப்பெண் போட்டால் தேர்ச்சி. பார்த்து போட்டு விடுங்கள் சார்” என்றனர். ஆனால் ஆசிரியர் பிடி கொடுக்கவில்லை. இதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். அடுத்தடுத்த தேர்வுகள் நல்ல மதிப்பெண் எடுக்க உதவியாக இருக்கும் என்றார். ஆனால் சக மாணவிகள் விடவில்லை. ”அதெல்லாம் நல்லா மதிப்பெண் வாங்கிடுவோம் சார். இந்த பையனுக்கு பாஸ் போடுங்க சார்” என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர். நீண்ட போராட்டம் முடிவுக்கு வந்தது. அங்கே, இங்கே என ஒருவழியாக மதிப்பெண்களை போட்டு, 35க்கு கொண்டு வந்துவிட்டார். ஆமாம்! நான் தேர்ச்சி பெற்றுவிட்டேன். இந்த சில நிமிடங்கள் தேர்ச்சியின்மை தான், என் வாழ்நாள் முழுமைக்கும். அதன்பிறகு எதிலும் தேர்ச்சி பெறாமல் இருந்ததில்லை. எனக்காக பேசிய சக மாணவிகள் சத்யா, ஆனந்த குமாரி, அங்கம்மாள் உள்ளிட்டோர் என்று நினைக்கிறேன். அதில் சத்யாவிற்கு தனிச்சிறப்பு உண்டு. அந்தப் பள்ளியில் படித்து அதே பள்ளிக்கு ஆசிரியராக பணி நியமனம் பெற்றிருக்கிறார். எத்தனை பேருக்கு வாய்க்கும் இப்படியொரு கொடுப்பனை. சமீபத்தில் இவருடனான உரையாடலின் போது என் மனதில் கிளர்ந்தெழுந்த நினைவுகள் இவை.
Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post