”கல்லிலே கலைவண்ணம் கண்டான், இரு கண் பார்வை மறைந்தாலும் காணும் வகை தந்தான், பெண்ணொன்று ஆணொன்று செய்தான், அவர் பேச்சையும் மூச்சையும் பார்வையில் வைத்தான்” என்ற பாடல் வரிகளை நம் வாழ்நாளில் கேட்டிருக்கக் கூடும். 'குமுதம்’ என்ற பழைய தமிழ் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள். இந்த வரிகளை மெய்ப்பித்து காட்டிக் கொண்டிருப்பவர்கள் தான் சிற்பிகள். அந்த சிற்பிகளில் ஒருவராக தனித்துவ கலைஞனாக விளங்குபவர் தான் எனது நண்பர் தணிகாசலம். எங்கள் தேவியாக்குறிச்சி கிராமத்தில் ”ஸ்ரீகணபதி கலைக்கூடம்” என்ற பெயரில் கூடம் வைத்து சிற்பங்கள் செய்து வரும் வேலையை செய்து வருகிறார். என்னுடன் 8ஆம் வகுப்பு வரை படித்தவர். அதன்பிறகு படிப்பின் மீது நாட்டம் வரவில்லை. அப்போதே ஓவியம் வரைவதில் ஆர்வத்துடன் திகழ்ந்தார். இது அவரது மூதாதையர்கள் வழிவந்த திறமை என்று சொன்னால் அது மிகையல்ல. ஆம் நான்கு தலைமுறைகளாக சிற்பக் கலையில் கைதேர்ந்தவர்களாக விளங்குகின்றனர். இவரது முப்பாட்டன் ஆலமுத்து உடையார். பாட்டன் செங்கலை உடையார். தந்தையார் சின்னசாமி. மகன் தணிகாசலம்.
இவர்கள் சுவர் ஓவியங்களிலும், சிற்பக் கலையிலும் வல்லவர்களாக திகழ்ந்து வருகின்றனர். முதலில் மண்ணில் சிற்பம் செய்து வந்தனர். அதன்பிறகு சுண்ணாம்பில் சிலை, தற்போது சிமெண்ட்டில் சிலை என்ற மூன்று பரிணாமங்களாக மாற்றம் அடைந்திருக்கின்றனர். சிலை செய்வதற்காக மட்டும் மொத்தம் 7 பூஜைகள் செய்கின்றனர். சிலை அமையவுள்ள இடத்தில் பூமி பூஜை, சிலை செய்யும் இடத்தில் உயிர்க்கள பூஜை, ஏற்றிச் செல்லும் போது பூஜை, கண் திறக்கும் போது பூஜை, கும்ப பூஜை என வரிசை கட்டி நிற்கின்றன. செய்யும் தொழிலை எந்தளவிற்கு நேசிக்கிறார்கள் என்பதற்கு இவற்றை உதாரணமாக கூறலாம். தணிகாசலத்தின் பாட்டனார் செங்கமலை உடையார் இறந்தவர்களுக்கும் சிலை செய்து வந்திருக்கிறார். இவரது கைவண்ணம் தேவியாக்குறிச்சி கிராமத்தில் திருவள்ளூர், மகாத்மா காந்தி, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் என பல்வேறு உருவங்களாக கம்பீரமாக நின்று கொண்டிருக்கின்றன. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, இறந்தவர்களின் சிலை செய்யும் வழக்கம் என்னுடம் முடிந்து போகட்டும். நீங்கள் கடவுளுக்கு தொண்டு செய்யும் பணியை மட்டும் தொடருங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அதனை தவறாமல் பின் தொடர்ந்து வரும் தணிகாசலத்தின் சந்ததியினர் கோயில் கட்டுவது, சாமி சிலைகள் செய்வது என பணிகளை தொடர்ந்து கொண்டிருக்கின்றனர். 8ஆம் வகுப்பிற்கு மேல் படிப்பின் மீதான ஆர்வம் குறைந்துவிட்டது. அதற்காக படிப்பு வரவில்லை என்று சொல்லிவிட முடியாது. நல்ல ஞாபகச் சக்தி உடையவர். சிறுவயது முதலே தனது தாத்தா உடன் சென்று கோயில் திருப்பணிகளையும், சிலை செய்யும் முறைகளையும் உன்னிப்பாக கவனித்து வந்த தணிகாசலத்திற்கு, அதன்மீதான ஆர்வம் பன்மடங்காக பெருகியிருந்தது. படிப்பு போதும். சிற்பங்களுக்கு உயிர் கொடுக்கப் போகிறேன் என்று பிடிவாதமாக கிளம்பியிருக்கிறார். முதலில் உள்ளூர் கோயில்களில் சிறிய சிறிய சிலைகளை செய்து வந்தார். அப்படியே தனது மூதாதையர்கள், நட்பு வட்டாரத்தின் மூலம் அக்கம்பக்கத்து ஊர்களிலும் வாய்ப்பு கிடைத்தது. கோயில் என்றால் அடித்தளம் போட்டு கொடுத்துவிட்டால் போதும். தனது சகாக்களுடன் களமிறங்கி கீழிருந்து கோபுரம் வரை சிறப்பான வேலைப்பாடுகளுடன் கட்டி முடிக்கக் கூடியவர். அதிலிருக்கும் நுணுக்கங்கள் தான் ஆச்சரியமூட்டக் கூடியவை.
எல்லாம் மரபுவழியாக அவருக்குள் புதைந்து கிடக்கும் அதிசயங்கள். ஓர் ஊரில் சிலைகள் செய்யும் சமூகத்தின் முதன்மை பிரதிநிதியாக இருப்பவரை ’சபதியார்’ என்று அழைக்கின்றனர். அந்த வகையில் தணிகாசலமும் ஒரு சபதியார் தான். சிற்பக் கலைகள் குறித்து நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதற்காக தமிழக அரசின் சபதியாரிடம் விண்ணப்பித்து சிற்பங்கள் செய்வதற்காக சில புத்தகங்களை வரவழைத்துள்ளனர். அதைக் காண காண காட்சிகள் விரிகின்றன. பல பிரமிப்பூட்டும் விஷயங்கள் நம்முன் வந்து போகின்றன. இவ்வாறு பல்வேறு அனுபவங்கள் வாயிலாக சிலை செய்வதில் தன்னிகரற்ற கலைஞராக தணிகாசலம் விளங்குகிறார். சிறந்த சிற்பங்கள் செய்ததற்காக ஏராளமான விருதுகளை இவருக்கு அள்ளிக் கொடுக்கலாம். ஆனால் அதிலிருக்கும் நடைமுறைகளை சரியாக தெரிந்து வைக்காத காரணத்தால் பல பாராட்டுகளையும், விருதுகளையும் தணிகாசலம் தவறவிட்டு விட்டார் என்று தான் கூற வேண்டும். தான் செய்த சிற்பங்கள் நிற்கும் கோயில்களின் முறையான அழைப்பிதழ், அதிகாரப்பூர்வ ஒப்புதல் எனப் பலவற்றை சேகரித்து முறையாக விண்ணப்பிக்க வேண்டுமாம்.
இவற்றை சேகரித்து வைக்காததால் பல வாய்ப்புகளை தவறவிட்டு விட்டார். ஒருவேளை விருதிற்கான படிநிலைகளை சரியாக செய்திருந்தால் ஏதேனும் ஓரிடத்தில் விருது கிடைத்திருக்கும் என்பது எனது எண்ணம். இவர் கட்டியதிலேயே வீரகனூர் கோயிலில் அமைந்துள்ள குதிரை தான் மிகப்பெரியது. கோயில்களில் கொல்லிமலை முருகன் கோயில் தான் பிரம்மாண்டம் நிறைந்தது. மகாபலிபுரத்தில் உள்ள சிற்பக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றால் அரசின் டெண்டர்களை எடுத்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் தணிகாசலம் கூறியது கவனிக்கத்தக்கது. சேலம் மாவட்டத்தில் தொடங்கி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், சென்னை என 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஏராளமான சிலைகள், கோயில்களை கட்டுவதில் முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தப் பணியில் சுமார் 25 ஆண்டுகால அனுபவத்துடன் திகழ்கிறார். பள்ளிப் படிப்பின் போது இவரது சகோதரி விபத்தில் ஒன்றில் இறந்துவிட, தனி மரமாய் ஆனார். இதனால் தன் குடும்பத்தை விருட்சமாக வளர்ந்து நிற்க செய்ய வேண்டும் என்று நினைத்திருக்கிறார். ஜெயப்பிரியா, ஜெயசூர்யா, ஜெயப்பிரியாமணி என மூன்று பிள்ளைகள். இவர்களது வாழ்வில் வெற்றி கிட்ட வேண்டும் என்பதற்காகவே ஜெயம் என்ற சொல்லாடலை பயன்படுத்தி இருக்கிறார். இவர் எண்ணம் போலவே வாழ்விலும் ஜெயம் உண்டாகட்டும்.
Tags:
நான் படித்த மனிதர்கள்