முதல்முறை ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அம்மாவை விட்டு விட்டு என்னுடன் புறப்பட்டான் இனியன். என்னுடைய அலுவலக நண்பர் செந்திலின் மகள் வர்னிஷாவின் பிறந்த நாள். போரூரில் இருந்த அவருடைய வீட்டிற்கு புறப்பட்டோம். போரூர் ஏரி வரை வழி தெரியும் என்பதால் அதன்பிறகு கூகுள் மேப் போட்டுக் கொள்ளலாம் என்று ஜோராக கிளம்பினோம். வழி நெடுகிலும் இடைவிடாத பேச்சு தான். இனியனுக்கும் சலிக்கவில்லை. எனக்கும் அப்படித்தான். எங்கே போகிறோம்? அங்கு யாரெல்லாம் இருப்பார்கள்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்ன தருவார்கள்? நாம் எப்படி பேச வேண்டும்? என்ற கேள்விகளும், பதில்களும் எங்களுக்குள் பரிமாறப்பட்டன.
வழியில் கண்ட மெட்ரோ ரயில் பணிகள், பிரம்மாண்ட கட்டிடங்கள், போர் நினைவு சின்னம், ஏரி, சாலையோர தடுப்புச் சுவர் என அடுத்தடுத்து கேள்விக் கணைகள் என் மீது வந்து விழுந்தன. சலைக்காமல் ஒவ்வொன்றுக்கும் பதில் கூறினேன். ஒருவழியாக தட்டுத் தடுமாறி செந்திலின் வீட்டை அடைந்தோம். எங்களின் நட்பு வட்டாரம் ஏற்கனவே அங்கு வந்து சேர்ந்திருந்தது. செந்தில் எங்களை இன்முகத்துடன் வரவேற்றார். வர்னிஷாவிற்கு இனியன் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல, அப்படியே நாங்கள் வாங்கி வந்திருந்த சிறிய அன்பளிப்பையும் கொடுத்தார். அதன்பிறகு கேக் வெட்டி அனைவரும் வாழ்த்து கூற போட்டோஷூட் தொடங்கியது. நான் வர்னிஷாவை தூக்கிக் கொள்ள, செந்தில் இனியனை தூக்கிக் கொள்ள மறக்க முடியாத நினைவாக ஒரு புகைப்படம் உருவானது. அப்போது அறிவழகன் சார் இனியனிடம் பேசினார்.
நீங்க தான் இனியனா? என் பெயர் என்ன தெரியுமா? எனக்கும் அழகான தமிழ் பெயர் தான் என்றார். ஆனால் இனியன் பேச கூச்சப்பட்டுக் கொண்டு என்னிடம் அட்டை போல் ஒட்டிக் கொண்டான். பின்னர் மொட்டை மாடிக்கு சென்று பிரியாணி விருந்தில் ஐக்கியமானோம். அப்போதும் அறிவழகன் சார் இனியனை அழைத்தார். ஆனால் என்னை கெட்டியாக பிடித்துக் கொண்டு அவரிடம் செல்லவே இல்லை. அப்படியே ஒரு பக்கமாக போடப்பட்டிருந்த நாற்காலியில் நானும், இனியனும் அமர்ந்து கொண்டோம். நான் பிரியாணி சாதத்தையும், சிக்கன் பீஸையும் கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விட்டேன். அப்போதும் எங்களின் உரையாடல் நீண்டது. இதையடுத்து எனது நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து இனியனிடம் பேசத் தொடங்கினர்.
வேலாயுதன்: இனியன் நீங்க தானா? உங்கப்பா “இப்படியொரு”, ”ஜாக்பாட்”, ”சர்ப்ரைஸ்”னு போட்டு நியூஸ் அடிக்கிறாருடா. அப்புறம் வீட்டுல அப்பா எப்படி? என்று கேட்க, அப்பா நைட்டு தான் வருவாரு என்று இனியன் பதிலளிக்க நண்பர்கள் கூட்டம் சிரிப்பலையில் மூழ்கியது. உங்க அப்பா 5 மணிக்கே ஆபிஸ்ல இருந்து கிளம்பிடுவாருடா. இதை உங்க அம்மா கிட்ட சொல்லு என்று பலரும் போட்டுக் கொடுத்தனர்.
திவாகர்: அப்பா வீட்டுல எப்படி இருப்பார்? என்று கேட்டார். அதன்பின்னர் ரொம்ப ஆக்ரோஷமா, சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு துள்ளுறானே தம்பி என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டார்.
ஜோசப்: அப்பா பையனா நீ? இங்க வா? என்று கூப்பிட்டுக் கொண்டே இருந்தார். இடையிடையே சிறிய கொஞ்சலையும் காட்டினார். இறுதியாக படிக்கட்டில் கீழே இறங்கி சென்ற போது பத்திரமாக நடந்து வர வேண்டும் என்று சில அறிவுரைகளை கூறியவாறே எங்களை வழியனுப்பி வைத்தார்.
அறிவழகன்: எங்க வீட்டுக்கு வறீயா? இங்க வாங்க, எங்ககிட்ட பேச மாட்டீங்களா? மகேஷ் உங்களுக்கு சிறந்த அப்பா, மகன் விருது கொடுக்கலாம் என்று கூறி பெருமிதத்தில் ஆழ்த்தினார். அப்படியே, என் பையனும் இப்படித்தான் இருந்தான். இப்பதான் மாறிட்டான் என்று பழைய நினைவுகளில் மூழ்கத் தொடங்கினார்.
ஸ்டீபன்: என்ன மகேஷ்? 5 மணிக்கெல்லாம் கிளம்பிட்றீங்களே? பையன் இப்படி சொல்றானே? என்று தன் பங்கிற்கு வார்த்தைகளை உதிர்த்தார். என் பையனையும் கூட்டிட்டு வந்திருக்கலாம். வரும் போது அழுதான் என்று கொஞ்சம் விசனப்பட்டுக் கொண்டார்.
விக்னேஷ்: என்னடா தம்பி கொஞ்சம் ஓவர் ஆக்டீவா இருக்கியே? என்று சிறிய உரையாடலுடன் நிறைவு செய்து கொண்டார்.
கோவிந்த்: அப்பா பையன் போல. பேசுவதில் இருந்தே தெரிகிறது. நல்லா சாப்பிடட்டும் என்று சிக்கன் பீஸை அள்ளி வைத்தார். அவனை பேச விடுங்க என்று கூறி இனியனின் பேச்சை கவனத்துடன் கேட்டுக் கொண்டே இருந்தார். வீட்டுக்கு போய் அம்மாகிட்ட சொல்லு. அப்பா 5 மணிக்கு கிளம்பிடுவார். அப்புறம் ஏன் லேட்டு? என்று தன் பங்கிற்கு கொளுத்திப் போட்டார்.
பாஹன்யா: இங்க வாடா, உன் பெயர் என்ன? பேச மாட்டீங்களா? மறக்காம வீட்டுல போய் அம்மாகிட்ட சொல்லு என்று 5 மணி மேட்டரை அழுத்தமாக சொல்லிவிட்டு புறப்பட்டார்.
ஜெயச்சந்திரன்: கடைசியில் தான் இவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்க பையனா? ஹாய் டா, எப்படி இருக்கீங்க? என்று விசாரித்து விட்டு கிளம்பினார்.
பிரியதர்ஷினி: ஹாய் டா தம்பி. உங்க பெயர் என்ன? அப்ப தான் கேக் தருவாங்க என்று கண்டிஷன் போட்டு பேச வைக்க முயற்சித்தார். ஆனால் பலன் அளிக்கவில்லை.
செந்தில் வீட்டு பிறந்த நாள் கொண்டாட்டம் இனியனுக்கு புதிய அனுபவம். அவனது செயல்பாடுகள் மேம்பட இப்படியான நிகழ்வுகள் அவசியம் என்று நினைக்கிறேன். புதிய உறவுகள், நிறைய கலந்துரையாடல்கள், ஆழமான சிந்தனைகள், எதிர்பாராத பயணங்கள் என இனியனின் வாழ்க்கைப் பயணம் சுவாரஸியத்தில் ஆர்ப்பரிக்க வேண்டும். இந்த சமூகத்திற்கு ஏற்ப தன்னை தானே செதுக்கிக் கொள்ள வேண்டும். இந்த பிறந்த நாள் நிகழ்வு மற்றொரு சுவாரஸியத்தை அளித்திருக்கிறது. என்னையும், இனியனையும் உள்ளடக்கி அறிவழகன் சார் தன்னுடைய Blog-ல் பதிவொன்றை இட எல்லையில்லா ஆனந்தத்தில் திளைக்க ஆரம்பித்துவிட்டேன். அந்தப் பதிவின் சுட்டி இங்கே... https://arivoos.blogspot.com/2022/08/blog-post_14.html
Super magesh... Great experience
Thanks Senthil