இன்னும் 100 நாட்கள் தான்... அப்படியே ஒரு சர்ப்ரைஸ்...

 


ஊரில் தேர் திருவிழாவை பெரிதாக எதிர்பார்த்திருந்த காலம் போய், ஆன்லைனில் சர்வதேச விளையாட்டுக்களை ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் காலத்திற்கு மாறிவிட்டோம். சிறுவயதில் தெருவில் ஆடத் தொடங்கி அப்படியே ஊர் மைதானம், பள்ளி மைதானம், கல்லூரி மைதானம் என நீண்டு கொண்டே சென்றது கிரிக்கெட். ஆனால் கால்பந்து அப்படியல்ல. நன்கு வளர்ந்து விவரம் தெரிந்தும் விளையாடிக் கூட பார்த்திராத ஒன்று.


கேரள சகாக்கள் உடனான நட்பால் சற்றும் எதிர்பாராமல் உள்ளுக்குள் புகுந்த ஆர்வம். கடந்த 2018ஆம் ஆண்டு ஃபிபா உலகக் கோப்பையில் கால்பந்து மீதான காதல் தொடங்கியது. தற்போது வெற்றிகரமாக நான்காம் ஆண்டை நிறைவு செய்யப் போகிறது. இந்த இடைப்பட்ட காலங்களில் கிடைத்த கால்பந்து அனுபவத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் வரப் போகிறது 2022 ஃபிபா கால்பந்து உலகக்கோப்பை திருவிழா. இந்த முறை கத்தாரில்.


கோடைக் காலத்தில் கத்தார் நாட்டின் வெப்பத்தை தாங்க முடியாது என்பதை கருத்தில் கொண்டு குளிர்காலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 21 என தொடக்க விழாவிற்கு தேதி குறிக்கப்பட்டிருந்தது. ஆனால் திடீர் மாற்றமாய் ஒருநாள் முன்கூட்டியே தொடங்க ஃபிபா அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. அதற்கேற்ப போட்டி அட்டவணையும் மாற்றி வெளியிடப்பட்டுள்ளது.


புதிய மாற்றத்தின் படி, அல் பைட் மைதானத்தில் நவம்பர் 20 இரவு 7 மணிக்கு நடக்கும் முதல் போட்டியில் கத்தார் அணியும், ஈக்வடார் அணியும் மோதுகின்றன. இதனால் காத்திருப்பு ஒருநாள் குறைந்திருக்கிறது. மொத்தம் 32 அணிகள் 8 குழுக்களாக பிரிந்து விளையாடவுள்ளன. இதில் பிடித்த அணி என்று குறிப்பிட்ட சொல்லும் அளவிற்கு யாரும் இல்லை. கால்பந்தை நேசித்து விளையாடும் அனைவருமே என் கதாநாயர்கள் தான். அதில் உச்சம் தொடுபவர் தனியிடம் பிடிக்கிறார். கோடிக்கணக்கான ரசிகர்கள் மனதையும் வெல்கிறார். எனவே அடுத்து வரும் நாட்களில் ஒவ்வொரு அணியாக படிப்போம். திறமைகளை அடையாளம் காண்போம். காலால் உதைத்து ஆடும் கால்பந்தை இங்கே எழுத்துகளால் கோர்த்து கொண்டாடுவோம்.


All the best Qatar...

#FIFAWC2022

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post