பசி லேசாக வயிற்றை கிள்ளியது. செல்போனில் பார்த்தால் அதிகாலை 4.45 மணி. ஈரோடு பேருந்து நிலையத்தை அப்படியே சுற்றி வந்தேன். ஆங்காங்கே குவிந்து கிடந்த குப்பைக் கூளங்களும், உடைந்து சிதறிக் காணப்பட்ட சுற்றுச் சுவர்களும் அறுவறுப்பை ஏற்படுத்தின. தடுப்புகள் சுற்றிலும் அமைத்து பணிகள் பாதி வரை நடந்திருப்பதை போல தெரிந்தது. சுருக்கமாக சொன்னால் ஈரோடு புத்துயிர் பெறுவதற்காக காத்திருக்கிறது. நடந்து செல்கையில் வந்த ஆவின் பாலகத்தில் டீ சாப்பிட்டேன். ஒத்தக்குதிரைக்கு செல்ல வேண்டும். கோபி செல்லும் பேருந்தில் கேட்டால், ”சத்தி பேருந்தில் போங்க. பிரைவேட் பஸ் வரும்” என்று திருப்பி விட்டார்கள். காத்திருந்தேன்.
சத்தி செல்லும் ஆண்டாள் பெயர் கொண்ட பிரைவேட் பஸ் வந்தது. எத்தனை மணிக்கு கிளம்பும் என்று கேட்டேன். 5 மணி என்று ஓட்டுநர் பதிலளித்தார். கொஞ்சம் நடந்து விட்டு பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். மெல்ல பேருந்து நிலையத்திற்குள் வலம் வந்துவிட்டு வேகமாய் சீறிப் பாயத் தொடங்கியது. மேடு பள்ளமுமாய் காணப்பட்ட ஈரோட்டின் சாலைகளில் தள்ளாடி, தள்ளாடி என்னை அழைத்து சென்றது அந்த பேருந்து. அடேங்கப்பா... என்னா ஆட்டம்? நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படியொரு துள்ளல் பயணம். சுமார் 50 நிமிடங்கள் பயணித்து ஒத்தகுதிரை நிறுத்தத்தில் இறங்கினேன். கல்லூரி எங்கிருக்கிறது என்று விசாரித்துவிட்டு மெல்ல நடந்தேன்.
100 எண்ணுவதற்குள் வந்துவிட்டது. நான் தான் கல்லூரிக்கு முதல் ஆள் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு முன்னாள் ஒருவர் வாட்ச்மேனிடம் ஹால் டிக்கெட்டை காட்டி, ”போட்டோ ஒட்ட வேண்டுமா? எப்படிங்கனா சொல்லுங்கனா? என கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். நான் சென்றதும் நானும் TET தேர்விற்கு தான் வந்திருப்பதாய் அறிமுகம் செய்து கொண்டேன். வெகுளித்தனமான பேச்சு. படபடவென்று உதிர்ந்த வார்த்தைகள். தமிழ் மட்டுமே தெரிந்த சிந்தனை. ஆங்கிலமா அப்படினா? என்று கேட்கும் அளவிற்கு மட்டுமே அறிவு. பெயர் நந்தகுமார். 2006ல் ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்து விட்டு சில ஆண்டுகள் ஆசிரியராக தனியார் பள்ளியில் வேலை பார்த்துள்ளார்.
அதன்பிறகு எதுவும் செட் ஆகவில்லை. சொந்தமாக டீக்கடை ஒன்றை ஆரம்பித்து பிழைப்பு நடத்தி வருகிறார். திருமணம், குழந்தைகள் என்று ஆகிவிட்டதால் சுமை கூடிவிட்டது. சொந்த காலில் நிற்க இப்படி ஏதாவது ஒன்றை பிடித்து கரை சேர வேண்டியதை தவிர வேறு வழியில்லை. அடுத்து அவர் கேட்ட கேள்விகள் தான் என்னை அதிர வைத்தன. சிரிப்பதா? இல்லை பரிதாபப்படுவதா? என்றே தெரியவில்லை. ”ஏனுங்கனா? இன்னிக்கு எக்ஸாம் எழுதும் எல்லாரையும் அவங்களே பாஸ் போட்டு விட்டிருவாங்கள்ல?” அப்படிலாம் எதும் இல்லங்க என்றேன். ”இல்லங்கனா, இல்லங்கனா. நான் அப்படித்தான் கேள்விப்பட்டேன். வேணா பாருங்க. நிச்சயம் போட்டு விட்ருவாங்க” என்றார். ஒருவழியாக அவருக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கையில் மேலும் இருவர் வந்தனர்.
பெயரை கேட்கவில்லை. சென்னை பெரும்பாக்கம் சின்மயா பள்ளியில் Vice Principalஆக இருப்பதாக ஒருவர் கூறினார். மற்றொருவர் ஆசிரியர் பணியை தற்காலிகமாக ஓரங்கட்டி வைத்துவிட்டு தேர்விற்கு தயாராகி வந்ததாக தெரிவித்தார். TET தேர்வின் பேப்பர் 1ஐ விட பேப்பர் 2ல் எழுதி பாஸ் ஆகிவிட வேண்டும் என்று தான் பலரும் ஆர்வமுடம் கூறியதை கேட்க முடிந்தது. இதற்கிடையில் புத்துணர்ச்சி பெறுவதில் சில நிமிடங்கள் கழிய புதிதாக ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. ஆள் பார்க்க பல்க்காக இருந்தார். பெயர் மதியழகன். சிஐடி போலீசில் காவலராக இருந்திருக்கிறார். மஃப்டியில் சென்று Informer போன்று வேலை பார்க்க வேண்டுமாம். துப்பு துலக்கி உயர் அதிகாரியிடம் வந்து தினசரி தகவல் சொல்ல வேண்டுமாம். ஒரு விஷயத்தில் இக்கட்டான நிலையில் மாட்டிக் கொள்ள, போதும்டா சாமி என்று ராஜினாமா செய்துவிட்டு வந்துவிட்டார்.
தற்போது TET பேப்பர் 1ல் தேர்ச்சி பெற முயற்சித்து வருவதாக கூறினார். நேரம் ஆனதும் வரிசையில் நிற்க சொன்னார்கள். அப்போது என்னுடன் ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்த மோகன்ராஜ், பெரியண்ணன் ஆகிய நண்பர்களை பார்த்தேன். பல வருடங்களுக்கு பின்னர் பார்த்ததால் ஆச்சரியம். என்ன செய்கிறீர்கள்? எப்படி போகிறது வாழ்க்கை? என கருத்து பரிமாற்றம் நடக்க வரிசையும் மெல்ல நகர்ந்தது. அப்போது மோகன் என்ற தேவியாக்குறிச்சி தாகூர் மேல்நிலைப்பள்ளியில் என்னுடன் படித்த நண்பரை பார்க்க முடிந்தது. ஆனால் அவர் வேறு பிரிவில் படித்தவர். அதனால் அப்போது பெரிதாக அறிமுகம் இல்லை. முகம் மட்டும் நன்றாக நினைவில் இருக்கிறது. கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக சில ஆண்டுகள் இருந்திருக்கிறார்.
அட்மிஷன் பிடித்து தர வேண்டும் என்ற டார்ச்சரால் வேலையை விட்டு வந்துவிட்டார். தற்போது விவசாயம், குடும்பம் என வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறதாம். எங்கள் வரிசையில் இளைஞர்கள் மட்டுமல்ல. 50 வயதை கடந்த முதியவர்களையும் பார்க்க முடிந்தது. இந்த வயதிலும் முயற்சிக்கிறார்களே? என்ற ஆச்சரியம் ஏற்பட்டது. எத்தனை எத்தனை மனிதர்கள். எத்தனை வியப்பான வாழ்க்கை என்று எண்ணத் தோன்றியது. ஒருவழியாக தேர்வறைக்குள் சென்றுவிட்டேன். தேர்வு தொடங்க பல நிமிடங்கள் இருந்தன. சென்னையில் இருந்து வந்த நீண்ட பயணத்தின் அசதியால் கன்னத்தில் கைவைத்தபடியே தூங்கினேன். அப்பப்போ முழித்து பார்த்துக் கொண்டேன். ஒவ்வொரு அறிவுரையாக அதிகாரிகள் வழங்க சரியாக 9 மணிக்கு ஆன்லைன் தேர்வு தொடங்கியது. கொஞ்சமாய் கணக்கு போட வரும். அந்த கேள்விகளை முதலில் எதிர்பார்த்தேன். முந்திக் கொண்டு வந்து ஆங்கிலம் என்னை தடுமாற வைத்தது.
* Proverb, பெருஞ்சித்தரனார் எழுதிய நூல்கள், சங்க இலக்கியங்களில் வந்த அடிகளை குறிப்பிட்டு, நற்றிணையா? குறுந்தொகையா? புறநானூறா? தொல்காப்பியமா? போன்ற கேள்விகள் வந்தன.
* ஊடகத்தில் காட்சிப்படுத்தப்படும் எந்த செயல்கள் மூலம் தீய பழக்கங்கள் தொற்றிக் கொள்கின்றன?
a) பிறர் மீது அன்பு காட்டுவது
b) ஒரு தனி நபர் 10 பேரை அடித்து நொறுக்குவது
c) அவசர நேரத்தில் சமயோசிதமாக செயல்படுவது
d) பிரச்சினை வந்தால் சுவற்றில் வேகமாக குத்துவது
பதில்கள்:
1 - a & b
2 - b & c
3 - c & d
4 - a & d
இப்படி பொருந்தாத விடைகளை அளித்து குழப்பி விட்டு விட்டனர். ஆங்கிலத்தில் Superlative degree தொடர்பான வார்த்தைகளுடன் இதில் எது சரி? என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது.
* பூமியின் ஆரம் என்ன? சரிவகத்தில் இணையற்ற பக்கங்கள் சமமாக இருந்தால் அதன் பெயர்? குறிப்பிட்ட விகிதத் தொடர்ச்சியில் எண்களின் வரிசையை கொடுத்து விட்டு அதில் விடுபட்ட x-ன் மதிப்பு என்ன? படங்களில் விடுபட்ட பகுதியில் எது இடம்பெறும்? Yours Lovingly என்று கடிதத்தில் முடிப்பதற்கு ஆங்கிலத்தில் எப்படி கூறுவர்? உளவியல் சார்ந்த, குழந்தைகள் மனநலம் தொடர்பான பல கேள்விகள் இடம்பெற்றிருந்தன. ஒருசில கணக்குகளுக்கு விடை சரியில்லாதது போல் இருந்தது. ஆனால் எதையும் உறுதியாக கூற முடியவில்லை. கடைசி அரை மணி நேரம் இருக்கும் போது சிஸ்டம் அப்படியே நின்றுவிட்டது.
கேள்வி, பதில் பகுதியில் இருந்து வெளியே வந்துவிட்டது. அறையில் இருந்த அனைவரும் ஷாக்காகி விட்டனர். நல்ல வேளையாக அதிலிருந்த நேரம் மட்டும் ஓடவில்லை. தேர்வு தொடங்கியதில் இருந்து நேரம் குறைந்து கொண்டே வரும் Timer-ஐ தான் சொல்கிறேன். பூஜ்ஜியம் வந்தவுடன் லாக்காகி தேர்வு முடிவுக்கு வந்துவிடுமே அதேதான். அதிகாரிகள் பலர் வந்து என்ன ஆச்சு? என்ன ஆச்சு? என மாறி மாறி பேசிக் கொண்டனர். அதில் ஒருவர் மலையாளி. இருவர் இந்தி வாலாக்கள். என்னது இங்கும் வடக்கின் ஆதிக்கமா? மனதுக்குள் ஒரு புலம்பல். பின்னர் பிரச்சினை தானாகவே சரியாகி விட்டதாக தெரிந்தது. நான் குறித்த நேரத்திற்கு சில நிமிடங்கள் முன்பாக முடித்துவிட்டேன். போதிய பயிற்சி எடுக்காமல் செல்பவர்களுக்கு இத்தகைய தேர்வுகள் எப்போதும் கடினம் தான். Luck வரும் என்று சிலர் சொல்லலாம். அதன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஒரு சின்ன முயற்சியை செய்திருக்கிறேன். அதற்காகவெல்லாம் பெரிதாக ஆசைப்பட முடியாது. வாழ்க்கையில் இன்னும் சுவாரஸியங்கள் இருக்கின்றன. காத்திருப்போம்.
Tags:
பயணம்