காசை பிடுங்கிய திருநங்கைகள்


பெங்களூரு நகரின் சில்லென்ற காற்று. அரை குறையாக முடிந்த இரவு. அதிகாலையில் விறுவிறுவென எழுந்து குளித்து முடித்து புத்தாடை உடுத்தி குடும்பத்தினர் அனைவரும் தயாராகி விட்டோம். கடிகாரம் அதிகாலை 5 மணிக்கு முன்னும், பின்னுமாக நகர காரில் ஏறி ”உழல் RTO” பகுதிக்கு புறப்பட்டோம். சத்தியமூர்த்தியின் புதிய கட்டுமான நிறுவனத்தின் திறப்பு விழா. மூத்தோர் சொல்வது போல கணபதி ஹோமத்துடன் மங்களகரமான தொடக்கம். விருந்தினர்கள் ஒவ்வொருவராக வருகை புரிய இனிப்பும், மகிழ்வும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டோம். திடீரென உள்ளே வந்தது திருநங்கைகளின் கூட்டம். இவர்கள் கடவுளின் பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதை பலமுறை கேட்டிருக்கிறேன்.


சமூகத்தால் ஒதுக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் நிறைய சலுகைகளை வழங்கி கைதூக்கி விட நாளும் செயல்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. இவர்கள் சமூகத்தில் படித்து, வேலைக்கு சென்று நல்ல நிலைமையில் இருப்பவர்களை பார்க்கும் போது ஒருவித மரியாதை தோன்றும். அதுவே பேருந்து, ரயில் நிலையங்களில் காசு கேட்க வரும் போது எரிச்சல் வரும். காசு இல்லை என்று சொன்னால் வசை மாறி பொழிவது, உடலோடு உடல் உரசுவது போல் வந்து நெருக்கம் காட்டுவது, மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவது போன்ற விஷயங்கள் கோபத்தை கொப்பளிக்க வைக்கும். அன்றைய தினமும் அப்படித்தான் மனதில் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.


புதிதாக அலுவலகம் திறந்திருப்பதால் சன்மானம் கேட்க வந்திருந்தார்கள். இது ஆங்காங்கே பார்க்கும் வழக்கமான விஷயம் தான். நம்மிடம் வரும் போது தான் பகீரென்று இருக்கும். அதுவும் அவர்கள் கேட்கும் தொகையை தந்தே தீர வேண்டும் என்று கறார் காட்டுவது தான் பிரச்சினை. எவ்வளவு கேட்டார்கள் தெரியுமா? 5,200 ரூபாய். அடேங்கப்ப்ப்ப்ப்ப்ப்பா... இப்படித்தான் அங்கிருந்த அனைவருக்கும் மனதில் தோன்றியது. ஏங்க கணபதி ஹோமம் செய்வதற்கு நாங்கள் அழைத்து வந்த ஐயர் கூட அவ்வளவு கேட்கவில்லை. நீங்களாக பார்த்து கொடுங்கள் என்று தான் சொன்னார். அப்படி இப்படி என்று போட்டு சுமார் 3 ஆயிரம் ரூபாய் தந்திருப்போம். திருநங்கைகள் கோஷ்டி 5,200 ரூபாய் கொடுத்தே ஆக வேண்டும் என்று நின்று கொண்டனர்.


எங்கள் பர்ஸ் காலி என்று திறந்து கூட காண்பித்தோம். அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எங்கள் எதிர்கால வாழ்விற்காக புதிதாக ஒரு அடியை எடுத்து வைக்கும் போது அனைவரும் வந்து வாழ்த்த வேண்டும் என்று தான் நினைப்போம். அன்பளிப்பு ஏதேனும் கொடுங்கள். தானம் கொடுங்கள் என்று கேட்டால் நிச்சயம் தர தயாராக இருக்கிறோம். அது யாராக இருந்தாலும் சரி. எங்கள் சக்திக்கு உட்பட்டு, வருமானத்திற்கு உட்பட்டு முடிந்ததை தருவோம். மனதார வாழ்த்தி விட்டு போங்கள். அதற்காக நாங்கள் கேட்கும் தொகையை கொடுத்தே ஆக வேண்டும் என்றால் இதென்ன பகல் கொள்ளை போலிருக்கிறது? ஆம். நாங்கள் பணம் தரவில்லை என்றால் அவர்கள் சமூகத்தை சேர்ந்த அனைவரையும் அழைத்து வந்து தகராறு செய்வோம் என்று அடாவடி செய்தனர்.


நிமிடங்கள் நகர நகர பதற்றம் தான் அதிகமானது. கையில் பணம் இல்லை என்றால் கூகுள் பே செய்யுங்கள். போன் பே செய்யுங்கள் என்று அதிகாரம் வேறு. ஒவ்வொரு மனிதனின் சக்திக்கும், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அதை புரிந்து நடந்து கொள்வது தானே சக மனிதனின் பண்பு. ஒருவழியாக கறாராக இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு தான் புறப்பட்டார்கள். சில நிமிடங்களுக்கு எங்கள் நிம்மதி போனது. விஷயம் இன்னும் முடியவில்லை. இவர்களை போல இன்னும் சில கோஷ்டிகள் இருக்கிறார்கள். அவர்களும் வருவார்களாம். இப்படி ஆடி மாத விசேஷம், பண்டிகை காலம் என அவ்வப்போது வருவார்களாம்.


வரும் போதெல்லாம் அன்பளிப்பு என்ற பெயரில் பகல் கொள்ளைக்கு நாங்களே துணை போக வேண்டும் என்றால் எப்படி? இவர்களுக்கு துணையாக உள்ளூர் ஆட்டோக்காரர்கள் இருக்கின்றனர். இவர்கள் தான் புதிதாக எங்கு விசேஷம் நடந்தாலும், அந்த தகவலை சொல்லி கூட்டி வந்து மொத்தமாய் கறக்க செய்து கமிஷன் வாங்கி சென்று விடுகின்றனர். இந்த கோஷ்டிக்கு உள்ளூர் போலீஸ்காரர்கள் உடந்தையாக இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இல்லையெனில் இவர்களுக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்திருக்கும். அதுவும் மிரட்டும் தொனியில், மேலே வந்து உரசிக் கொண்டு, ஆடைகளை பிடித்து இழுத்துக் கொண்டு. சொல்லி மாளவில்லை மனக்கசப்பை. சக மனிதனின் சங்கடங்களை புரிந்து கொள்ள முயலுங்கள் சக மனிதர்களே (திருநங்கைகள்).

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post