சொட்டான் போட்ட நாக்கும், ரெட் வெல்வட் ஐஸ்கிரீமும்...


சிறுவயதில் குச்சி ஐஸ் வாங்கி சாப்பிட்டது தான் முதல் ஜில் ஜில் அனுபவம். அதன்பிறகு கப் ஐஸ், கோன் ஐஸ் என காலத்திற்கு ஏற்ப ஐஸ்கிரீமும் புதுவடிவம் பெற்றன. இதன் வரலாறோ, பூர்வீகமோ எதுவும் தெரியாது. ஆனாலும் ஐஸ் வண்டி சத்தம் பாம்... பாம்... என்று கேட்டால் நாக்கு சொட்டான் போட ஆரம்பித்துவிடும். வீட்டில் யார் இருந்தாலும், ”ஒன்னே ஒன்னு வாங்கிக் கொடுங்களேன். ஆசையா கேக்குறேன்” என்று கேட்டு விடுவோம். வளர்ந்து பெரியவனாகி விட்ட சூழலில் வெண்ணிலா, சாக்கோபார், ஸ்ட்ராபெரி, பட்டர்ஸ்காட்ச், சாக்லைட் என புதுமையான ஃபிளேவர்களில் கோன் ஐஸ்கள் வந்து மனதை அலைபாய வைத்த வண்ணம் இருக்கின்றன.

வீட்டில் குடும்பத்துடன் அமர்ந்து டிவி பார்க்கும் போது கூட, Arun, Amul, Kwality Wall's, Mother Dairy, Baskin robbins, Magnum என உள்ளூர் முதல் வெளிநாட்டு ஐஸ்கிரீம்கள் வரை விளம்பரத்தை காட்டி நாக்கில் சொட்டான் போட வைத்துவிடுவர். அதுவும் எங்கள் இனியனை பற்றி சொல்லவே வேண்டாம். எல்லா குழந்தைகளையும் போல எங்கள் மேல் கட்டிப் புரண்டு, பெரிய ஆட்டம் போட்டு, முத்தம் கொடுத்து, கொஞ்சி பேசி ”என் செல்ல அப்பா இல்ல. ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடலாம்பா” எனக் கேட்டு சமாதானம் ஆகும் வரை விடமாட்டார். அவரை மகிழ்விக்கும் வகையில் நேற்று ஒரு நிகழ்வு நடந்தது. வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தோம்.


ஏதாவது ஸ்நாக்ஸ் வாங்கி கொடுத்தே ஆக வேண்டும் என்று இனியன் ஒரே அடம். போகும் வழியில் பார்த்துக் கொள்ளலாம் என்று அழைத்து சென்றேன். அப்போது வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் அருகே KFC-யை தொடர்ந்து “Scooped Ice Cream Bar" என்ற கடை வந்தது. வண்டியை நிறுத்தினேன். உள்ளே நுழைந்தோம். அதன்பிறகு அசுர வேட்டை தான். மெனு கார்டை பார்த்து Red Velvet Ice Cream பெரிய சைஸ் கப்பில் ஆர்டர் செய்தோம். அடுத்த சில நிமிடங்கள் எங்களால் பொறுத்திருக்க முடியவில்லை. எப்போது வரும், வரும் என்ற ஆவல். அந்த தருணமும் வந்தது. சிவப்பு நிறத்தில் மேலே தூவப்பட்ட ரோஜா மலர்கள் போல, தேனும், அமுதும் குழைத்து அதை பொன் கிண்ணத்தில் கொண்டு வந்ததை போல உணர்வு. காணக் கிடைக்காத சுகம்.


இப்படியெல்லாம் ஒரு விஷயம் இருக்கிறதா என்பதே தெரியாமல் வாழ்ந்து விட்டோமே என்ற உணர்வு. ஆளுக்கொரு ஸ்பூனை எடுத்தோம். ஒரு கிண்ணத்தில் அடிதடி சண்டை நடக்காத குறை தான். பனிப் பிரதேசத்தில் உலவ விட்டதை போன்ற சூழல், நாக்கில் தேவாமிர்தம் சாப்பிட்டது போன்றொரு சுவை, தொண்டையில் வழுக்கிக் கொண்டு ஓடிய ஐஸ், வயிற்றில் பால் வார்த்ததை போல அனுபவம். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படி ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து ரசித்து ருசித்து ருசித்து வாழ்வது தானே வாழ்க்கை. அந்த கடையின் உட்புறம் ஐஸ்கிரீம் குறித்த சில சுவாரஸிய தகவல்களும் இடம்பெற்றிருந்தன. சுவையும், அறிவும் சேர்ந்து அளிக்கும் புத்துணர்ச்சியே தனி ரகம் தான். வரலாற்றை படித்து தெரிந்து கொள்ளுங்கள். ரெட் வெல்வட் ஐஸ்கிரீமை சுவைத்து அறிந்து கொள்ளுங்கள்.

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post