களம் ரெடி... மொத்தம் 32... வெடிக்க தயாரான கத்தார்!


இன்னும் 157 நாட்கள் மட்டுமே. உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காக ஒட்டுமொத்த உலகமும் காத்துக் கொண்டிருக்கிறது. இதற்காக கத்தார் நாடும் மிகத் தீவிரமாக தயாராகி வருகிறது. நான்கு ஆண்டுகள் வேட்கை தீரும் தருணம் வரப் போகிறது. கால்பந்து ரசிகனாக திகட்ட திகட்ட கண்டு ரசிக்கப் போகும் இரண்டாவது உலகக் கோப்பை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்... யூரோ கோப்பை தொடரை போன்ற சிரமங்கள் ஏதும் இந்த தொடரில் இல்லை. போட்டி நடக்கும் நேரத்தை தான் சொல்கிறேன். நள்ளிரவு 12.30 மணிக்கு கொட்ட கொட்ட விழித்திருந்து காத்திருக்க வேண்டாம். தினசரி வேலையை முடித்து விட்டு அல்லது கொஞ்ச நேரம் ஒதுக்கி வைத்துவிட்டு பிற்பகலிலோ அல்லது இரவு வேளையிலோ போட்டிகளை காணலாம். இதைவிட பேரின்பம் ஏது. இந்த முறை உலகக் கோப்பை கால்பந்து தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கப் போகின்றன.

8 குழுக்களாக தலா 4 அணிகளாக பிரிக்கப்பட்டு மோதவுள்ளன. இதில் 29 அணிகள் தேர்வாகி விட, எஞ்சிய 3 அணிகள் எவை என எதிர்பார்ப்பு மேலோங்கி இருந்தது. அதற்கு கடந்த செவ்வாய் கிழமை உடன் விடை கிடைத்துவிட்டது. ஒட்டுமொத்த 32 அணிகளை கொண்ட பட்டியலை வெளியிட்டதும் கால்பந்து ரசிகனாக என்னை மெய்சிலிர்க்க வைத்த தருணங்களும் ஓடோடி வந்தன. உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்படையில், கத்தார் முதல் அணியாக தேர்வு பெற்றுவிட்டது. அதன்பிறகு ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள கால்பந்து கூட்டமைப்பின் கீழ் நடத்தப்படும் உச்சபட்ச தொடரில் வெளிப்படுத்திய செயல்பாடுகளின் அடிப்படையில் பல்வேறு அணிகள் தேர்வாகின.


அதன்பிறகு தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்தன. இறுதியில் AFC எனப்படும் ஆசிய கால்பந்து கூட்டமைப்பில் இருந்து ஆஸ்திரேலியா, ஈரான், ஜப்பான், சவுதி அரேபியா, சவுத் கொரியா ஆகிய அணிகளும், CAF எனப்படும் ஆப்ரிக்க கால்பந்து கூட்டமைப்பில் இருந்து கேமரூன், கானா, மொராக்கா, செனகல், துனிசியா ஆகிய அணிகளும், CONCACAF எனப்படும் வட அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பில் இருந்து கனடா, கோஸ்டா ரிகா, மெக்சிகோ, யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆகிய அணிகளும், CONMEBOL எனப்படும் தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பில் இருந்து அர்ஜென்டினா, பிரேசில், ஈக்வடார், உருகுவே ஆகிய அணிகளும், UEFA எனப்படும் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பில் இருந்து பெல்ஜியம், குரோஷியா, டென்மார்க், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, போலந்து, போர்ச்சுகல், செர்பியா, ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, வேல்ஸ் ஆகிய அணிகளும் தேர்வாகின.

ஆனால் OFC எனப்படும் ஓசோனியா கால்பந்து கூட்டமைப்பில் இருந்து எந்தவொரு அணிகளும் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. என்னுடைய பேவரைட் அணிகள் எல்லாம் ஐரோப்பாவில் தான் இருக்கின்றன. Al Bayt Stadium, Khalifa International Stadium, Al Thumama Stadium, Ahmad bin Ali Stadium, Lusail Iconic Stadium, Stadium 974, Education City Stadium, Al Janoub Stadium என 8 மைதானங்களில் கால்பந்து போட்டிகள் நடக்கின்றன. முன்னதாக ஏப்ரல் 1, 2022 அன்று Hayya Hayya (Better Together) எனப்படும் FIFA World Cup 2022-க்கான Official Sound Track வெளியாகி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்தது. இவ்வளவு கொண்டாட்டமான நிகழ்வின் பின்னணியில் சர்ச்சைகளும் வருத்தங்களும் இல்லாமல் இல்லை. உலகக் கோப்பை தொடருக்கு பல ஆண்டுகளாக தயாராகி வரும் கத்தாரில், கட்டுமானப் பணிகளுக்கு புலம்பெயர் தொழிலாளர்களை அதிக அளவில் பயன்படுத்தியது, தொழிலாளர்கள் பலரை அடிமைகள் போன்று நடத்தியது, கட்டுமானத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள், LGBT உரிமைகள், ரஷ்ய வீரர்கள் பங்கேற்பு, ஏலம் எடுத்ததில் முறைகேடு என கத்தார் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.


உலகின் முன்னணி ஊடகங்களான BBC, The Wall Street Journal, The Guardian, Amnesty International, Daily Mirror உள்ளிட்டவை கத்தார் அரசு மீது சீறிப் பாய்ந்தன. கத்தார் நாட்டை பொறுத்தவரை ஜூன், ஜூலை மாதங்களில் வெயில் வாட்டி வதைக்கும். இந்த சூழலை குளிர் தேசங்களில் இருந்து வீரர்கள் மற்றும் ரசிகர்களால் தாங்க முடியாது. எனவே தான் வெப்பம் பெரிதும் தணிந்து காணப்படும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன் ஒளிபரப்பு உரிமையை இந்தியாவில் Viacom18 எனப்படும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இவர்கள் காட்டில் இனி அடை மழை தான். எப்படியோ FIFA World Cup 2022-க்கான களம் தயாராகிவிட்டது. எதிர்பார்ப்பும் கூடிவிட்டது. நவம்பர் 21,2022-க்காக காத்திருப்போம்...

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post