ஒவ்வொரு மனிதனுக்கும் சிறுவயது பள்ளிப் பருவ அனுபவங்கள் மிக மிக அவசியமான ஒன்று. அது ஆக்கப்பூர்வமாக, கற்றலை எளிதாக மகிழ்வாக கற்றுக் கொடுக்கக் கூடிய வகையில் இருக்க வேண்டும். அதுவே திட்டுகள் வாங்குவது, தேவையில்லாமல் அடிப்பது, மன இறுக்கமான சூழல், பாரமாக தோன்றும் பாடத் திட்டங்கள் போன்ற விஷயங்கள் இருந்தால் பள்ளிக்கு செல்லவே தோன்றாது. குழந்தைகள் செய்யும் சிறு சிறு தவறுகளையும் மன்னிக்க பழக வேண்டும். நல்வழியில் அவர்கள் வீறுநடை போட ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
அந்த சின்னஞ்சிறு மனதில் கடுகளவேனும் காயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு ஒட்டுமொத்த சமூகமும் பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக இருவரின் கைகளில் தான் இருக்கிறது. ஒன்று பெற்றோர்கள். மற்றொன்று ஆசிரியர்கள். எங்கள் இனியன் பள்ளி செல்ல தொடங்கிவிட்டான். கொரோனாவிற்கு பிறகான சூழலில் வெற்றிகரமாக முதல் மாதத்தை நிறைவு செய்யப் போகிறான்.
ஆனால் ஆசிரியரின் கண்டிப்பு, யாரிடமும் பெரிதாய் ஒன்றிப் போகாத இறுக்கமான சூழல், பள்ளிக்கு லீவு போட்டுக் கொள்ளலாம் என்று கேட்கும் வார்த்தைகள். இவையெல்லாம் எங்களை பெரிதும் கலங்க வைக்கின்றன. இப்போதெல்லாம் ஓரளவு உலக விஷயங்கள் அறிந்து கொண்ட பெரிய பிள்ளைகளே தவறான முடிவுகளை எடுத்து வருகின்றன. இப்படியான சூழலில் பிஞ்சுகள் என்ன செய்யும். புற உலகின் தாக்கம் ஏதேனும் ஒரு வகையில் பிஞ்சுகளையும் தாக்கி விடுகின்றன. இதனால் சற்றும் எதிர்பார்க்காத தடித்த வார்த்தைகள் வெளிவந்து விடுகின்றன.
பிஞ்சுகளே, எங்களின் எதிர்காலமே...
கலங்காதீர்கள். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். எத்தனை துயரங்கள் வந்தாலும் துடைத்தெறிந்து தூக்கி விட காத்திருக்கிறோம். உங்கள் கஷ்டங்களில் பங்கு போட்டு சுமையை குறைக்க எங்கள் வாழ்க்கையையே அர்ப்பணிக்க தயாராக உள்ளோம். இந்த வாழ்வு நமக்கானது. முடிந்தவரை கற்று, மன தைரியம் வளர்த்து, எல்லோருக்குமான வாழ்க்கையை வாழத் தயாராவோம். அதற்கு வழிகாட்ட நாங்கள் இருக்கிறோம். எங்கள் கைகளை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்.
Tags:
இனியன்