புரட்சியாளர் லெனினின் எழுத்துகளால் புகழாரம் சூட்டப்பட்ட ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி தலைவர் லீப்னெஹ்ட் எழுதிய சிறப்பான புத்தகம். இவர் கார்ல் மார்க்ஸ், ஃபிரடெரிக் ஏங்கல்ஸ் உடன் நெருங்கி பழகியது அதைவிட சிறப்பு.
சுரண்டும் சிலந்திக்கும் சுரண்டப்படும் ஈக்கும் இடையில் நடைபெறும் நிகழ்வுகளை மிகவும் எளிய நடையில் விளக்கியிருக்கிறார். ”நாம் தனித்து நிற்கும் வரை நம்மை கட்டியிருக்கும் வலைப் பின்னல்களை கிழித்து எறிய பலமற்று இருப்போம். ஒன்றுபடுவோம். நமக்கு விலங்குகள் இடும் சங்கிலியை உடைத்தெறிவோம். நமது பகைவர்களை அவர்களின் பதுங்கு இடங்களிலிருந்து விரட்டி அடிப்போம்” என உத்வேகம் ஊட்டுகிறது. இது மார்க்ஸ் சொன்ன ”உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்” என்ற மாபெரும் எழுச்சி முழக்கத்தை நினைவு கூர்கிறது.
மிகச்சிறிய புத்தகம். அற்புதமான அனுபவம். ”மூலதனம்” - உலகின் தலைசிறந்த புத்தகங்களில் ஒன்றாக கொண்டாடப்படும் இதன் சாராம்சத்தை ஒருசில நிமிடங்களில் நெஞ்சில் ஆழப் பதித்து விட்டதோ என்ற எண்ணம்.
மாக்ஸிம் கார்க்கியின் ”தாய்” நாவலின் இறுதியில் மகன் பாவெலின் போராட்டத்தை தாய் பெலகேயா நீலவ்னா கையிலெடுப்பார். ஆனால் அது சட்டென நிகழ்ந்து விடாது. மகனின் கருத்துகளால் ஈர்க்கப்படுவாள். உண்மை நிலவரத்தை புரிந்து கொள்வாள். புரட்சியாளர்களுக்கு உதவி செய்வாள். போராட்டக் களமே தீர்வு என மிகத் தீவிரமாக இறங்கி விடுவாள். இந்த படிப்பினைகளை லீப்னெஹ்ட்டின் ”சிலந்தியும் ஈயும்” கண் முன்னே கொண்டு வருகிறது.
எங்கும் அறிவின் பிரகாச ஒளியை பரப்புவோம்.
Tags:
புத்தகங்கள்