விடிந்தும் களையாத நீண்ட உறக்கத்தை களைத்துக் கொண்டு தேவி என்னை தொலைபேசியில் அழைத்தாள். ”சீக்கிரமே எக்ஸாம் ஹாலுக்கு போயிடுங்க. மறக்காம சாப்பிட்ருங்க.” என்றாள்.
நானோ காலை 5.30 மணிக்கே எழுந்துவிட்டேன்...
சிறிதாக உடலை பின்னியிருந்த களைப்பை கிழித்தெறிந்து விட்டு விறுவிறுவென தயாரானேன். வேளச்சேரியில் இருந்து சாந்தோம். இருசக்கர வாகனம் சீறிப் பாய்ந்தது. உதவிக்கு கூகுள் மேப் சகோதரனை அழைத்தேன். கச்சிதமாய் தேர்வு அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனியார் பள்ளிக்கே கொண்டு போய் விட்டு விட்டார். ஓரிரு பெண்கள் மட்டும் வெளியில் நின்றிருந்தனர். வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். நேரம் ஆக ஆக தேர்வர்களும் வரத் தொடங்கினர்.
அதற்குள் காலை உணவை முடித்து விடு என வயிறு தட்டியது. கால்கள் திசை தேடி நடந்தன. உள்ளே நடக்க நடக்க மயிலாப்பூர் பகுதியை கண்டேன். அந்த வழியே வந்த வாண்டுகளிடம் உணவகம் இருக்கிறதா? என்பதை கேட்டு உறுதி செய்து கொண்டேன். அதன்பின்னர் வேகம் இன்னும் கூடியது. நிதானமாக அமர்ந்து 4 இட்லி, ஒரு மசால் வடையை கொறித்தேன். மீண்டும் தேர்வு அறைக்கு திரும்பினேன். அதற்குள் அந்த சாலையெங்கும் தேர்வர்களின் கூட்டம். அதில் தாய்மார்கள் அதிகம் இருப்பதை பார்க்க முடிந்தது. அங்கொன்றும், இங்கொன்றுமாக ஆண்கள் இருந்தனர். அதற்குள் தேவியிடம் இருந்து இரண்டாவது அழைப்பு வந்தது. பள்ளிக்கு வெளியே நின்று தொலைபேசியில் பேசினேன்.
புதிதாய் பூத்த மலர் மீதான ஏக்கத்தை கொட்டித் தீர்த்தாள். மகரந்ததாள் இருக்கிறது. அடுத்து சூலகம் தான் வேண்டும். ஆனால் மீண்டும் ஒரு மகரந்தம் தான் வருகிறது. இதை ஏற்க மனம் மறுக்கிறது. கொஞ்சம் கஷ்டமாகவும் இருப்பதாக கூறினாள். மேலும் குறித்து கொடுத்த தேதியிலும் உடன்பாடு இல்லை. நட்சத்திரம், ராசி என்று புலம்பினாள். எல்லாவற்றுக்கும் நல்ல நேரம் பார்த்திருப்பதாய் கூறினாள். இதுபோன்ற விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லாததால் உன் விருப்பம் என்பதாய் விட்டுவிட்டேன்.
8.30 மணி ஆனதும் உள்ளே அனுமதித்தனர்...
முழு உடல் பரிசோதனை, ஹால் டிக்கெட், அடையாள அட்டை சரிபார்த்தல் ஆகிய மூன்றும் ஒவ்வொன்றாய் நடந்தன. அப்போது நான் சார்ந்த ஊடகத் துறையில் இருந்து ஒரு நபர். நன்கு பழக்கப்பட்ட முகம். பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர். அவரிடம் மெதுவாய் பேச்சு கொடுத்தேன். படிப்பு, வேலை, நண்பர்கள் வட்டம், தேர்விற்கு முன் தயாரிப்பு என சில விஷயங்களை பேசினோம். அதற்குள் நேரமாகி விட்டது.
9.30 மணிக்கு மேல் தேர்வறைக்கு சென்றேன்...
தேர்வை நினைத்து சிறிதும் பதற்றமில்லை. தேவி வெசனப்பட்ட விஷயங்கள் தான் மனக் கண்களில் வந்து ஓடின. முதலில் ஓ.எம்.ஆர் தாள், அதன்பிறகு கேள்வித்தாள். பூர்த்தி செய்ய வேண்டியவற்றை சரியாக செய்துவிட்டு பதிலளிக்க ஆரம்பித்தேன். தேர்வு என்றால் அதற்கு தயாராகி இருக்க வேண்டும். குறைந்தபட்ச முன் தயாரிப்பு இருப்பது அவசியம். இது எதுவும் இல்லாமல் சென்றால் என்ன நடக்கும் என்பதற்கு நான் தான் உதாரணம். முதல் இரண்டு பக்கங்கள் எதுவுமே தெரியவில்லை.
நேராக கணக்கு பகுதியை திறந்தேன். சில கணக்குகளை போட்டேன். அதிலும் திணறல் தான். முதல் அரை மணி நேரம் முடிந்தது என்றார்கள். மனம் விழித்து கொண்டது. சட்டென கடைசி பக்கத்தை திருப்பி அங்கிருந்து தொடங்கினேன். முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய இடத்தில் இருந்து ஆரம்பம். நெருக்கடி நிலையை பிறப்பிக்கும் சரத்து 352 முதல் முதலாம் நந்திவர்மன் வரை சமூக அறிவியல் பகுதியில் எல்லாரும் மிரட்டினார்கள். கொஞ்சம் முன்னாள் சென்றால் மின்தடை, சோடியம் குளோரைடு, சூஃபிலி, நியூட்டன் என அறிவியலும் பாடாய் படுத்தியது. அடிப்படையான சூத்திரங்களே சிந்தனை ஓட்டத்திற்கு வராமல் தவிக்க விட்டது. பிபனோசி எண்களும், சரிவகமும், Sin 0 -வும் மூளையை துவைத்து எடுத்தன.
இன்னும் கொஞ்சம் முன்னே சென்றால் idioms, Phrasal verbs, diphthong என விழிக்க வைத்தது. அடுத்து என் தாய் தமிழ். இனிக்க இனிக்க பேசலாம். மனதில் இருப்பதை தேன் தமிழில் எழுதி தீர்க்கலாம். ஆனால் இலக்கணமும், இலக்கியமும் தெரியாமல் கேள்விகளை கையாளவே முடியாது. அப்படியான நிலை தான். பதிலே தெரியவில்லை என்றாலும் கேள்விகள் இனிக்க இனிக்க திகட்டின. இதற்கிடையில் தேவியின் வெசனம் அவ்வப்போது கேள்வித்தாளில் காட்சிகளாக விரிந்தன.
1.30 மணிக்கு தேர்வு முடிந்தது...
ஒட்டுமொத்தமாக ஆசிரியர் நியமனத் தேர்வு எப்படியிருந்தது? ரொம்ப கஷ்டம். பதில் தயாராகி விட்டது. வண்டியை எடுத்து கொண்டு கிளம்பினேன். வந்தது வந்தாச்சு, இன்னும் கொஞ்ச தூரம் போனால் மெரினா கடற்கரை.
கடல் காற்று வேறு தென்றலாய் தீண்டியது. வா வா என்று அழைத்தது. வண்டியை திருப்பினேன். பட்டினம்பாக்கம் கடற்கரைக்கு சென்று அலைகளுக்கு ஒரு வணக்கம் போட்டு விட்டு சாலையோர கடையில் மீன் குழம்பு, சோறு, சுறா புட்டு என ஒரு வெட்டு வெட்டினேன். பின் அடையாறு பூங்காவில் ஒரு சில மணித்துளிகள், மத்திய கைலாஷ் பழைய வீட்டை ஒரு நோட்டம், அப்படியே கானகம், வேளச்சேரி வழித்தடம் என வீட்டை அடைந்தேன். வாழ்வில் எத்தனையோ கனவுகள். அவை அனைத்தும் நாம் நினைப்பது போல் நடப்பதில்லை. கிடைத்ததை கொண்டாடி பழகி கொள்வோம் என்று அடிக்கடி நினைப்பதுண்டு. இதை மீண்டும் ஒருமுறை நினைவூட்டியது இந்த நாள்.
Tags:
படிப்பினை