எங்கள் வீட்டு இளவரசிக்கு கல்யாணம்

"சுற்றத்தார் கூடி மங்கள வாழ்த்து சொல்லி, கண்களின் ஓரம் நீர்த்துளிகள் பெருக்கெடுக்க இனிதே வழியனுப்பி வைத்து, புதுப் பெண்ணாய் புகுந்த வீட்டிற்குள் நுழைந்திருக்கிறாள் சந்தியா".


தயங்கி தயங்கி நின்ற என்னையும் சான்றோராக்கி ஆசிர்வதிக்க வைத்து, ஒருபடி மேலே உயர்த்திய பெருமை சந்தியாவையே சேரும். நான் தூவிய மலர்களும், மஞ்சள் அரிசியும் உங்கள் வாழ்வில் இன்பமும், மன நிறைவையும் அள்ளி தரட்டும். சந்தியா ஏக்கத்துடன் காத்திருந்த நாட்கள் போயே போய்விட்டது. இவள் கட்டி ஆள, இன்னும் பொறுப்பாய் நடந்து கொள்ள காலம் பணித்திருக்கிறது. அங்கே இன்னொரு வீட்டில் மகாராணியாய் ஆள இடம் கிடைத்திருந்தாலும், இங்கே எங்கள் வீட்டில் என்றும் இளவரசி தான்.


பாரதி கண்ட புதுமைப் பெண்கள் நிறைய பிறக்க வேண்டும் என்பது என் ஆசை. "நான்கு சுவர்களை உடைத்து எறிந்து, பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்" என்று கூறுங்கள் என்பார் பாரதி. அப்படியான பெண்ணாக தான் சந்தியாவை பார்த்திருக்கிறேன். தேவியை கைப்பிடிக்க நான் காத்திருந்த தருணம். தாமாக முன்வந்து என்னிடம் அறிமுகம் செய்து கொண்டவள் சந்தியா. உடல்நலம், சாப்பாடு, வேலை, பயணம், வாழ்க்கை எனப் பல்வேறு குறுஞ்செய்தி பரிமாற்றங்கள் எங்களுக்குள் நடந்துள்ளன. எனக்குள் இருந்த உடன்பிறப்பிற்கான ஏக்கம் தீர்ந்த தருணங்களில் அதுவும் ஒன்று. ஒவ்வொரு முறையும் மாறாத அதே புன்னகை, அதே உபசரிப்பு, அதே பொறுப்புணர்வு எனப் பட்டியலிடும் பண்பிற்கெல்லாம் சொந்தக்காரி.


பெங்களூருவில் நானும், தேவியும் முதல்முறை குடியேறிய போது சந்தியா, வசுந்தரா, சத்தியமூர்த்தி என மூவரும் ஒன்றாய் வந்து எங்களை மகிழ்வித்த தருணங்கள் வாழ்வில் பத்திரமாய் சேகரித்து வைக்க வேண்டிய பொக்கிஷங்கள். பெங்களூருவில் 2, சென்னையில் 2 என நாங்கள் இதுவரை வசித்த 4 வீட்டிற்கும் வந்து எங்கள் வாழ்வில் நெருக்கமாய் பின்னிப் பிணைந்தவர் சந்தியா. தன்னை சுற்றி நடக்கும் சின்ன சின்ன விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து கேள்வி எழுப்பி அவற்றை புரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவள். எல்லாவற்றுக்கும் மகுடம் சூட்டும் வகையில் சந்தியாவிடம் இருக்கும் விஷயம் சமையல். தேவி பாராட்டிய சமையற்கலை வல்லுநர்களில் இவரும் ஒருவர் என்றால் பார்த்து கொள்ளுங்கள். பிரியாணி ஸ்பெஷலிஸ்ட்.


எங்களை மகிழ்வித்ததை போல புகுந்த வீட்டையும் மகிழ்விக்க தற்போது புறப்பட்டிருக்கிறாள். பெண் அழைப்பிற்கு விநாயகபுரம் கோயில் வாசலில் நாங்கள் அனைவரும் மன நிறைவுடன் நின்று கொண்டிருந்தோம். அப்போது சந்தியாவின் முகத்தில் இருந்து தவிப்பிற்கு ஆயிரம் அர்த்தங்கள் சொல்லலாம். அந்த நேரத்திற்கே உரிய பரிதவிப்பு. தேற்றுவதற்கு இங்கே சகோதரிகள் இருக்கிறார்கள். சகோதரர்கள் இருக்கிறோம். அம்மாக்கள் உள்ளனர். அப்பாக்கள் இருக்கின்றனர். மாமாக்கள் உள்ளனர். அத்தைகள் இருக்கின்றனர். நாங்கள் எல்லோரும் இருக்கிறோம். நீங்கள் வாழ்வாங்கு வாழப் போகும் வீட்டிலும் அப்படியான நபர்கள் கிடைப்பார்கள். ஐந்து விரல்களை உள்ளங்கைக்குள் அடக்கி ”தைரியமாக இருங்கள்” என்று நான் காட்டிய சைகை உங்களை பலமாக பற்றிக் கொள்ளட்டும்.


நீங்கள் சிறிதும் கலங்கக் கூடாது. புது வீடும், புது வாழ்வும் உங்களை மென்மேலும் உயர்த்தும். செல்லுமிடமெங்கும் வாழ்த்து மழை பொழியும். காலம் உங்களுக்கான மன உறுதியை அளிக்கும். எங்களின் ஆயிரம் கோடி வாழ்த்து மழையில் நம்பிக்கையுடன் புது வாழ்வை தொடங்குங்கள். இன்னும் பல சந்ததிகளை இனிதே பார்ப்பீர்கள். இனி இணையர் கார்த்திக்கு தான் பொறுப்பு அதிகம். எங்கள் வீட்டு இளவரசி முகத்தில் பூக்கும் புன்னகையும், பூரிப்பில் நிரம்பிடும் மனமும் சாத்தியப்படப் போவது உங்களால் தான். 


வாழ்த்துகிறோம். நீடூழி... நீடூடி...


* நீடூழி (இந்த உலகம் இருக்கும் வரை நெடுங்காலம் மகிழ்ச்சியாக இருத்தல்)

* நீடூடி (நெடுங்காலம் வாழ்வதற்கான வாய்ப்பை உருவாக்குதல்)

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post