அப்பா, அம்மா எப்படி இருக்கீங்க. படிப்பிற்காக வெளியே வந்தாலும் என் நினைவுகள் எப்போதும் உங்களை சுற்றி தான். திடீரென சிறு வயது நினைவுகள் வந்து மனதை கிளறிவிட்டு விட்டது. நீங்கள் என் கைகளை பிடித்து கொண்டு நடந்த தருணங்கள். பெங்களூரு மலர் கண்காட்சி முதல் சென்னை மெரினா கடற்கரை வரை நாம் மூன்று பேரும் நிறைய நடந்திருக்கிறோம். அந்த கைகளை மீண்டும் தொட வேண்டும் என மனம் ஏங்குகிறது. நானும், அம்மாவும் Foodies. ஏதாவது ஒரு புதிய ஓட்டலுக்கு சென்று ருசியும், பசியும் போக்க வேண்டும் என்று திட்டம் போட்டு விடுவோம். இதற்காக எங்களை ஏராளமான இடங்களுக்கு அழைத்து சென்று மகிழ்ச்சி கடலில் தள்ளியிருக்கிறீர்கள். அம்மா என்னிடம் கோபப்பட்டதை விட, இரண்டு முறை நீங்கள் அம்மாவிடம் கோபப்பட்டது தான் மனதில் அழுத்தமாக நிற்கிறது. அதுவும் எனக்காக தான்.
அப்போதெல்லாம் அறியா பிள்ளையாக மாறி ஒன்றுமே தெரியாதவன் போல் இருந்து விடுவேன். அந்த கோபத்தை அதன்பிறகு பெரிதாக பார்த்ததே இல்லை. அம்மாவை உங்களுக்கு நிறைய பிடிக்கும். வீட்டில் சின்ன சின்னதாய் உதவிகள் செய்வது, அடிக்கடி வெளியில் அழைத்து செல்வது, பிடித்த உணவை வாங்கி தருவது, சோர்ந்த சமயத்தில் கை, கால்களை பிடித்து விட்டது என எண்ணிலடங்கா நிகழ்வுகள். அம்மாவிற்கு சின்ன வலி வந்தால் கூட, அதிலிருந்து மீண்டு வர நீங்கள் நிறைய மெனக்கெடுவீர்கள். எனக்கு விவரம் தெரிந்த இத்தனை ஆண்டுகளில் உங்களின் காதல் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த காதலை என் வாழ்க்கையிலும் நீங்கள் பார்ப்பீர்கள். தற்போதும் அம்மாவிற்கு ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்வது நெகிழ்ச்சியின் உச்சம். 33வது பிறந்த நாளிற்கு நீங்கள் கொடுத்த சர்ப்ரைஸ் என் வாழ்நாளில் மறக்க முடியாது.
தனக்காக எழுதுங்கள் என்று அம்மா அடம்பிடித்து கேட்டாலும், எனக்காக தான் நிறைய எழுதியிருக்கிறீர்கள். அந்த வகையில் அம்மாவின் இடத்தை கொஞ்சம் தொட்டு விட்டேன் என்று சொல்லலாம். எனக்காக நீங்கள் எழுதிய ”இனியன் அத்தியாயம் ஒன்று” கட்டுரை மறக்க முடியாத அனுபவம். அதை நான் எப்போதும் என்னுடனே வைத்திருக்கிறேன். அதை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் மீண்டும் பிறந்தது போன்ற ஓர் உணர்வு. விடுமுறை நாட்களில் என்னையும், அம்மாவையும் ஊரில் விட்டு விட்டு நீங்கள் மட்டும் சென்னையில் தனியாக இருப்பீர்கள். நீங்கள் வீட்டிலிருந்து புறப்படும் போது என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் பலமுறை தவித்திருக்கிறேன். ”அப்பா இருந்தால் ஜாலியா இருக்கும்பா” என்று அம்மாவிடம் சொன்ன வார்த்தைகள் இன்றும் எனக்குள் வந்து செல்கின்றன. யாரிடமும் தொலைபேசியில் அதிக நேரம் பேசியதே இல்லை.
முதல்முறை உங்களிடம் தான் பேசினேன். 5 நிமிடங்கள், 10 நிமிடங்கள், 15 நிமிடங்கள் என நீண்டு அதிகபட்சம் ஒரு மணி நேரம் வரை நீண்டிருக்கிறது. சிறு வயதில் நீங்கள் எப்போது பார்த்தாலும் லேப்டாப் உடன் அமர்ந்து அலுவலக வேலையில் பிஸியாக இருப்பீர்கள். ”அலுவலகத்திற்காக ஓடாய் தேய்ந்து என்ன தான் சாதிப்பீர்களோ?” என்று அம்மா புலம்பி கொண்டே இருப்பார்கள். விவரம் தெரிந்து நான் கூட உங்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறேன். ஆனால் சமூகத்திற்காக உங்கள் விரல்கள் செய்த வேலையை மதிக்கிறேன். அதில் கொஞ்சம் எங்களுக்காகவும் எழுதியிருக்கிறீர்கள். அவற்றை பொக்கிஷங்களாக எப்போதும் வைத்திருப்பேன். எனக்கு விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த எவ்வளவோ முறை முயற்சித்தீர்கள். ஆனால் எனக்கு தான் பிடிபடவே இல்லை. அதிலும் கால்பந்து விளையாட்டின் தீவிர ரசிகராக Liverpool அணியை பற்றி நீங்கள் அடிக்கடி பேசியிருக்கிறீர்கள்.
மொபைலில் பாட்டு, படம், கிண்டல், கேலி என்று மற்ற குழந்தைகள் நேரத்தை வீணடித்து கொண்டிருக்க, அதே மொபைலில் அறிவியல் பூர்வமாக எதையாவது போட்டு காட்டி என் அறிவு கண்களை திறந்துவிட முயற்சித்தீர்கள். ஒருமுறை உங்கள் பிறந்த நாளுக்கு சட்டை வாங்கிய போது, எனக்கு ஏன் வாங்கவில்லை என்று பேசாமல் கோபித்து கொண்டதை தற்போது நினைக்கும் போது சிரிப்பு தான் வருகிறது. அம்மாவிற்கு நீங்கள் ஆசையாக செய்யும் சின்ன சின்ன விஷயங்களையும் பார்த்து, எனக்கு மட்டும் இல்லையா? என்று கேட்ட சம்பவங்கள் நிறைய உண்டு. அம்மா சின்னதாய் தோடு வாங்கினாலும், எனக்கு எங்கே தோடு? எனக் கேட்டு பல்பு வாங்கியது அட்டகாசத்தின் உச்சம். அப்படியான குறும்புகளை உங்கள் இருவரிடமும் ஏராளமாக செய்து பாடாய் படுத்தி இருக்கிறேன்.
நீங்கள் படிப்பில் புத்திசாலியாக இருந்தாலும், வேலைக்கான பாதையை தேர்வு செய்ததில் பெரும் குழப்பத்தை சந்தித்தீர்கள். ஆனால் காலம் உங்களை சரியான இடத்திற்கு தான் கொண்டு சென்றிருக்கிறது. உங்கள் சிந்தனையில் உருவாகி, மனதில் மெருகேறி, கை விரல்களில் உதிர்க்கும் வார்த்தைகளுக்கு ஈடு இணையே இல்லை. என்னை பொறுத்தவரையில் அவை படிக்க படிக்க உற்சாகத்தை அள்ளி தெளிக்கும் பெருங்கடல். என் ஜெயராம் தாத்தா பள்ளிப்படிப்பு முடித்ததும் வேலைக்கு சென்று விட்டார். ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார் 20 விதமான வேலைகளை பார்த்ததாக நீங்கள் கூறியதுண்டு. ரயில்வே வேலையில் சேர்ந்ததும் நிற்காமல் ஓடிய கால்கள் 60 வயதில் ஓய்வு பெறும் போது தான் நின்றது. அந்த உழைப்பு உங்கள் வழியே எனக்குள்ளும் இருக்கும்.
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களை கொண்டவர் என் ராஜு தாத்தா. ஊருக்கே சோறு போட்ட விவசாயி. அந்த பெருமையும் எனக்குள் இருக்கும். நான் சீக்கிரமே படித்து முடித்து விட்டு வந்து விடுவேன். நல்ல வேலைக்கு செல்வேன். அதன் பிறகாவது உங்கள் கால்கள் ஓய்வு எடுக்கட்டும். அம்மாவின் கைகள் அமைதியை தேடட்டும். நான் பார்த்து கொள்கிறேன். இந்த உலகில் எங்கு சென்றாலும் உங்கள் இருவரையும் அங்கே அழைத்து சென்று உடன் வைத்து கொள்வேன். உங்களுக்கு தேவையானதை பார்த்து பார்த்து செய்வேன். நீங்கள் சுற்றி பார்க்க தவறிய இடங்களுக்கு அழைத்து செல்வேன்.
தற்போது சிறு வயது புலம்பல்களை பெரிதும் குறைத்து கொண்டேன். நீங்கள் காட்டிய செஞ்சட்டை வீரர்களின் வழியில் எண்ண ஓட்டங்களை திருப்பி வருகிறேன். கல்லூரி படிப்பை தாண்டி பொது சமூகத்திற்கான புத்தகங்களை தேடி தேடி படிக்கிறேன். நிறைய மனிதர்களை சந்திக்கிறேன். குறை இல்லாத மனிதர்கள் ஏது? குறும்புகள் இல்லாத பிள்ளைகள் ஏது? என்பார்கள். அந்த வரிசையில் நான் மட்டும் விதிவிலக்கில்லை. நீங்கள் விரும்பிய குணாதிசயங்கள் என்னிடம் இல்லாமல் போகலாம். எதிர்பார்த்த அறிவு கிடைக்காமல் போயிருக்கலாம். ஆனால் இந்த சமூகத்திற்கு பயனுள்ள வகையில் இருப்பேன்.
இப்படிக்கு,
இனியன்.