ஆரிய மாயை - அறிஞர் அண்ணா


திராவிடம் குறிச்ச சர்ச்சை கொளுத்தப்படும் போதெல்லாம் சட்டென நினைவிற்கு வருவது ஆரியம் தான். ”கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி எங்கள் தமிழ்க்குடி” என ’புறப்பொருள் வெண்பா மாலை’ இலக்கண நூல் கூறுகிறது. இந்த நூல் எழுதப்பட்டது 9ஆம் நூற்றாண்டு. ஆனால் அதற்கு 5,000 ஆண்டுகளுக்கு முன்பே ஆரியம் நமது மண்ணில் நுழைந்து விட்டது. கைபர் மற்றும் போலன் ஆகிய கணவாய் வழியே இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியர்களால் புகுத்தப்பட்டது தான் ஆரியம். இந்த ஆரியர்கள் கூட்டத்தை தான் பிராமணர்கள் என்கின்றனர்.


ஆரியர்கள் வருகைக்கு முன்னால் இங்கே திராவிடர்கள் தான் பரந்து விரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்களிடம் மதம் இல்லை, சாதி இல்லை, சடங்குகள் இல்லை, மூடப் பழக்கங்கள் இல்லை. அற்புதமான நாகரிக வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்தனர். உலகிற்கே நாகரிகத்தை கற்பித்தவர்கள் என்று கூட சொல்லலாம். ஆனால் ஆரியர்கள் வந்து தான் நாகரிகமற்ற திராவிடர்களை திருத்தி நாகரிக மனிதர்களாக மாற்றினர் என்று பொய்யும், புரட்டும் பல்வேறு வகைகளில் பரப்பப்பட்டு வந்துள்ளன. இதை ஆதாரங்களுடன் வெளுத்து வாங்கியிருக்கிறார் அறிஞர் அண்ணா. இந்த நூலிற்கு தான் ”ஆரிய மாயை” என்று பெயர் வைத்துள்ளனர்.


அண்ணாவின் வார்த்தைகளில் கூற வேண்டுமெனில், இது மாற்றாரின் எதிர்ப்பு உரைகளுக்கு மறுப்புரை தர உதவும் என்பதில் சந்தேகமில்லை. ஆரியத்தை உயர்த்தி பிடிக்கும் வகையில் சனாதன புரட்டும், இந்துத்துவா வெறியும் தற்கால அரசியலில் கலந்து கிடக்கின்றன. இதிலிருந்து நாட்டை காக்க, வருங்கால சமுதாயம் சரியான அரசியல் பாதையில் பயணிக்க ஆரிய மாயையில் இருந்து விடபட வேண்டும். அதற்கு அண்ணாவின் இந்த நூல் நிச்சயம் வழிநடத்தும். பிரெஞ்சு பாதிரியான ’ஆபி டியூபா’ என்பவர் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு பயணித்து பிராமணர்களின் வாழ்க்கை முறையை பற்றி 1807ல் நூலாக எழுதி வெளியிட்டிருக்கிறார்.


அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் சில இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன. இதுபோல ஏராளமான உதாரணங்கள், ஆதாரங்கள் சுட்டி காட்டப்பட்டுள்ளன. கி.மு 5000 முதல் கி.பி 600 வரையிலான காலகட்டம் எப்படி இருந்தது? ஆரியம் எப்படி படிப்படியாக கலந்தது? திராவிடர்கள் எப்படி அடிமையானர்கள்? சுயமரியாதை எப்படி காணாமல் போனது? போன்ற விஷயங்களுக்கு பதில் கிடைக்கிறது. குறிப்பாக நாலு வர்ணம் தமிழர்கள் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டு, சாதிய உட்பிரிவுகள் சமநிலை வாழ்வை உடைத்தெறிந்த பின்னணியை தெளிவாக அறியலாம். மேலும் 1920கள், 40களில் நடந்த சில வழக்குகளும் உதாரணமாய் காட்டப்பட்டுள்ளன.


திராவிட பெண்ணை மணந்த பிராமணருக்கு குழந்தைகள் பிறக்கின்றனர். ஆனால் அவர்களால் சொத்திற்கு உரிமை கொண்டாட முடியாத நிலை. இவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு போட்டால் பிராமணர் அல்லாத நீதிபதி ஒரு தீர்ப்பையும், பிராமணரான நீதிபதி வேறு மாதிரியான தீர்ப்பையும் அளிக்கிறார். இதனால் அவர்கள் தந்தையின் சொத்திற்கு உரிமை கொண்டாட முடியாமல் போய் விடுகிறது. எனவே ஆரியர் - திராவிடர் வேற்றுமைகள் தற்போது எங்கே இருக்கிறது. எல்லாம் கலந்து விட்டது. பிரித்து பார்க்க முடியாது என்ற பொய் பாஷைகள் கூறுவோருக்கு, இந்த உதாரணங்கள் சவுக்கடியாக இருக்கும். ஆரிய மாயை நூலில் இருந்து சில வரிகளை இங்கே அப்படியே தருகிறேன். இதுதான் இந்த ஒட்டுமொத்த நூலின் சாராம்சமும் என்று கூட சொல்லலாம்.


”ஆதிகாலத்தில் திராவிடர்கள் சாதி பேதமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். பின்னர் திராவிட நாட்டில் வந்து குடியேறி திராவிட மன்னர்களின் தயவை பெற்றனர் ஆரியர். இவர்களில் சிலர் அந்த மன்னர்களுக்கு குருவானார்கள். அதன் பின்னர் தான் தமிழ்நாட்டில் ஆரிய நாகரிகம் பரவத் தொடங்கியது. ஆரிய மதமும், தெய்வங்களும், ஆச்சாரங்களும், சாதி வித்தியாசங்களும் தமிழ்நாட்டில் வேரூன்றி விட்டன”.


இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், வட இந்தியாவில் பரவி கிடந்த ஆரியர்களால், தென்னிந்தியாவில் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை. அந்த சமயத்தில் காஞ்சிபுரத்தை கி.பி 300 முதல் 700 வரை ஆண்ட பல்லவ மன்னர்கள் தான் வம்படியாக அழைத்து வந்துள்ளனர். வடநாட்டில் இருந்து பிராமணர்களை கூட்டம் கூட்டமாக அழைத்து வந்து தமிழகத்தில் பல இடங்களில் குடியமர்த்தி உள்ளனர். அவர்களுக்கு பல கிராமங்களை காணிக்கையாகவும் கொடுத்துள்ளனர்.


எனவே தெற்கில் வடமொழியும், நாலு வேதமும் கலந்ததில் பல்லவர்களும் பங்காற்றி இருக்கிறார்கள். மேலும் இலக்கியங்களிலும் ஆரியத்தை வீரியத்தை செலுத்தி, தாங்கள் எந்த அளவிற்கு மேலானவர்கள் என்பதை காட்டி கொள்ள பலமான ஆதாரங்களை உருவாக்கி வைத்திருக்கின்றனர். ராமனும், கிருஷ்ணனும் ஆரியக் கடவுள்கள். ராமன் திராவிடர்களை வென்று தென்னகத்திலும், இலங்கையிலும் ஆரியர்களின் ஆதிக்கத்தை ஏற்படுத்தியவன் என்பதை உணர வேண்டும்.


தற்கால அரசியல் சூழல் ஆயுதப் புரட்சிக்கு நம்மை அழைத்து செல்லவில்லை. சிந்தாத்த புரட்சிக்கு தள்ளியிருக்கிறது. அதிலும் ஆரிய துவேஷத்தை அவ்வளவு எளிதில் அடித்து நொறுக்கி விட முடியாது. அதற்கு சரியான ஆதாரங்கள் வேண்டும். ஆழமான புரிதல் வேண்டும். விரிவான அலசல் வேண்டும். அதற்கு அறிஞர் அண்ணா இன்றும் நம்முடன் நிற்கிறார் அவரது எழுத்துக்கள் மூலம்.

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post