எங்கள் வீட்டில் நவீரா


மார்ச் 23, 2024. காலை 9.30 மணி. வீட்டை பூட்டி விட்டு அலுவலகம் செய்ய தயாரானேன். நவீரா அம்மா அழைத்தார். உடனே நவீரா அப்பாவும் வந்துவிட்டார். ”டேட் எப்போ...” என்றார். ”ஜூலை, ஆகஸ்ட்டில் கொடுத்திருக்காங்க”. ”பார்க்கலாம். அதுவரைக்கும் நாங்க இங்க இருப்பமானு தெரியல...” என்றார். ”உங்க போன் நம்பர் கொடுங்க...” ”இதுதான் என் நம்பர், சுதாகர்...”என்றார். உடனே மிஸ்டு கால் கொடுத்து, மகேஷ் பாபு என்றேன். இப்படியான ஓர் உரையாடல் சுமார் ஓராண்டிற்கு முன்பு, வேளச்சேரி SR Rishab Flats குடியேறும் போது நடந்திருக்க வேண்டும். நவீராவின் குடும்பம் சரியாக வீட்டை காலி செய்து விட்டு அடுத்த வெளிநாட்டு பயணத் திட்டமிடலுக்காக சொந்த ஊர் புறப்படும் நாளன்று நடந்திருக்கிறது.

எங்கள் SR Rishab Flats-ன் செல்லப் பிள்ளைகளில் ஒருவள் தான் நவீரா. அனைத்து வீட்டு வாண்டுகளும் நவீரா வீட்டில் தான் எப்போதும் விளையாடிக் கொண்டிருப்பர். எங்கள் பிளாட் அதிரும் அளவிற்கு ஆரவாரம் செய்து கொண்டே இருப்பர். எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல். கடந்த ஓராண்டில் ”மாமா, மாமா” என ஓராயிரம் முறை அழைத்திருப்பாள். தினமும் அலுவலகம் விட்டு திரும்பும் போது, மூடிய இரும்பு கதவுகளின் பின்னால் இருந்து கொண்டு அழைக்கும் நவீராவின் குரல் இன்னும் ஒலித்து கொண்டே இருக்கிறது. அவளது வீட்டில் இருந்து ஸ்பெஷலாக எதையாவது வாங்கி வந்து ”இந்தா சாப்பிடு மாமா, சாப்பிடு” எனக் கொடுத்தவை ஏராளம். நவீராவின் ஒவ்வொரு செயலையும் உற்று கவனித்து, ”எவ்வளவு பொறுப்பா இருக்கா பாருபா” எனத் தேவி பலமுறை சுட்டிக் காட்டியிருக்கிறாள். எனக்கு விளையாட யாருமே இல்லை என்ற இனியனின் குமுறலை போக்க வாய்ப்பு கொடுத்தவள் நவீரா.

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துவிட்டாள் போதும். இரவு சாப்பிட்டு முடித்தால் போதும். விடுமுறை நாட்களில் சும்மா இருந்து விட்டால் போதும். ”அம்மா நவீரா வீட்டுக்கு போகட்டுமா, சொல்லு, சொல்லு” எனக் கேட்டு இனியன் பாடாய் படுத்தி விடுவான். இது வெறும் விளையாட்டிற்கான காரணம் மட்டுமல்ல. உள்ளூர இழையோடிய நட்பும் தான். நவீரா எங்கள் வீட்டில் பாடி இருக்கிறாள். ஆடி இருக்கிறாள். விளையாடி இருக்கிறாள். உணவருந்தி இருக்கிறாள். நவீராவை தூக்கி வீட்டை சுற்றி சுற்றி வந்த தருணங்கள் ஏராளம். நவீரா மட்டுமல்ல, தர்ஷன், கிருத்திக், கவின், சுஜித், மகிழினி என வாண்டுகள் அனைவரும் குடும்பத்துடன் எங்காவது சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிக்க வேண்டும் என எங்கள் பிளாட்டில் அனைவரும் விரும்பினர். மழை, வேலை, உடல்நிலை என ஏதாவது ஒன்று தடையாய் வந்து தள்ளி வைத்துக் கொண்டே வந்தது.

ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் கவின் வீட்டு விசேஷம் எங்களை ஒன்றிணைத்தது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதி ஒன்றில் கவினின் பெரியம்மா மகளுக்கு நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். ஒன்றாக உணவருந்தியது. கூடி பேசி சிரித்தது. VJ போட்ட குத்து பாடல்களுக்கு இடைவிடாமல் வாண்டுகள் ஆட்டம் போட்டது. இப்படி ஒவ்வொரு விஷயமும் திகட்ட திகட்ட மகிழ்ச்சியை வாரி தந்தது. அந்த நடனத்தில் சற்றே கூச்சத்துடன் நவீரா செய்த பாவனைகள் கண்ணு படத் தான் வைத்தது. நவீரா உடன் ஒருசில புகைப்படங்கள் தான் எடுத்திருக்கிறோம். ஆனால் அவளது பல கோடி நினைவுகள் ஆழ் மனதில் பதிந்திருக்கின்றன. எங்கள் வீட்டில் ஒரு நவீரா. இப்படியான ஏக்கத்திற்கும் பஞ்சமில்லை.

ஆனால் நவீராவின் குறும்புகளை, அடாவடிகளை, பிடிவாதத்தை, அழுகையை சுட்டிக் காட்டி, ”பாத்துக்கோங்கபா, பொண்ணு வேணும். பொண்ணு வேணும்னு கேட்டீங்கனா, இப்படித் தான்பா இருக்கும். அப்புறம் நீங்களே முடிவு பண்ணிக்கோங்க” என்று நவீரா அம்மா கிண்டலாக சொல்லி எங்கள் ஏக்கத்தை தட்டி வைப்பார். உலகம் சுற்றும் சுட்டிக் குழந்தையாக இருந்தாலும், சென்னையில் எங்களுடனும் சில காலம் இருக்க வேண்டும் எனக் காலம் பணித்திருக்கிறது. நவீரா உடனான நாட்கள் நிச்சயம் எங்களை குளிர வைக்கும். இன்னும் பல தேசங்கள் இவளை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்கட்டும். வானில் பல ஆயிரம் கிலோமீட்டர் பறக்கட்டும். புதுமைப் பெண்ணாய் புதிய அத்தியாயம் எழுதுவாள் நவீரா.
Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post