பள்ளிக் கல்வித்துறையில் என்ன நடக்கிறது என்பதை தமிழக அரசு பள்ளி ஆசிரியரான எனது நண்பரிடம் அடிக்கடி கேட்பதுண்டு. சமீபத்தில் வாட்ஸ்-அப்பில் வந்த செய்தி குறித்து கேட்க ஆரம்பித்து திமுக அரசு மீதான ஜோடிக்கப்பட்ட பிம்பம் சுக்கு நூறாக உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ந்தேன். நான் கேட்க நினைத்தது இதுதான். இடைநிலை ஆசிரியர்கள் பலரும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வாட்ஸ்-அப் செய்தி ஒன்று கிடைத்தது. அதென்ன சம வேலைக்கு சம ஊதியம்? தற்போது அப்படி ஊதியம் வழங்கப்படுவது இல்லையா? ஏன் என்னாச்சு? எனக் கேட்டேன். அதற்கு பதிலளித்த என் நண்பர், 2008க்கு முன்பு அரசு வேலையில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் அதிகமாக இருக்கும். அதற்கு பின்பு சேர்ந்தவர்களுக்கு ரொம்ப கம்மி.
இடைநிலை ஆசிரியர்களுக்கு Grade Pay ரூ.4,200 என்றிருந்ததை, கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு ரூ.2,800 என மாற்றிவிட்டனர். இதை ஏன் செய்தனர்? என்பதற்கான காரணம் தெரியவில்லை. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையில் ஊதிய முரண் காணப்படுகிறது. குறிப்பாக டெட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் ஆசிரியராக வேலை வாங்கிய இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் குறைவு தான். உதாரணமாக 25 ஆயிரம், 30 ஆயிரம் எங்கிருக்கிறது. 50 ஆயிரம், 60 ஆயிரம் எங்கிருக்கிறது என யோசித்து பாருங்கள். எனவே தான் சம வேலைக்கு சம ஊதியம் என 15 ஆண்டுகளாக ஆசிரியர் சங்கங்கள் போராடி வருகின்றன என விளக்கம் கொடுத்தார். இனி அரசு பள்ளி ஆசிரியராக வேண்டும் என்ற கனவையே கலைத்து விடுவார்கள் போல எனப் பெரிய குண்டை தூக்கி போட்டார்.
ஏனெனில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்ப மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் ஸ்டாலின் அரசு. இவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்து அப்படியே வருடக்கணக்கில் இழுத்து காலத்தை கடத்தி விடப் பார்க்கிறது அரசு என்பது தான் நிதர்சனமாக இருக்கிறது. திமுக அரசு வந்தாலே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சாதகமாக பல்வேறு விஷயங்களை செய்வார்களே. இப்படித்தான் சிறுவயதில் முதலே நான் கேள்விப்பட்டு வந்துள்ளேன். ஆனால் ஸ்டாலின் அரசு வேறுமாதிரியாக இருக்கிறதே? என்று கேட்டேன். அதற்கு, சமீபத்தில் தான் ஒரு நாளிதழில் ”அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒட்டுமொத்த வாக்குகளையும் இழந்த மு.க.ஸ்டாலின்” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளிவந்தது.
அதை பார்க்கவில்லையா? என்று கேட்டார். அடடே தவற விட்டு விட்டோமே என மனதிற்குள் நினைத்து கொண்டேன். உதாரணமாக Part Time Teachers அப்படினு 2011ல் பணியில் சேர்ந்தார்கள். இவர்களை பணி நிரந்தரம் செய்கிறோம்னு சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் சிறு துரும்பை கூட நகர்த்தவில்லை என்றார். அப்படினா அரசு ஊழியர்களுக்கு இந்த திமுக அரசு எதுவுமே செய்யவில்லையா? எனக் கேட்டேன். அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் லிஸ்டை எடுத்து பாருங்கள். ஒன்று கூட நிறைவேறவில்லை என்று வேதனை தெரிவித்தார். இப்படியே போனால் வரும் மக்களவை தேர்தலில் எங்கள் யாருடைய ஓட்டும் திமுகவிற்கு இல்லை என்று ஜாக்டோ-ஜியோ சங்கத்தினர் பேசிக் கொண்டதாக பரபரப்பை கொளுத்தி போட்டார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA ஒவ்வொரு 6 மாதத்திற்கும் உயர்த்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக அரசு அதை முறையாக கடைபிடிப்பதில்லை. ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் பாதி மாத ஊதியத்தை Surrender மூலம் அளித்து வந்தனர். சரண்டர் என்பது EL எனப்படும் 17 நாட்கள் சிறப்பு விடுமுறையை பயன்படுத்தாமல் அப்படியே திரும்ப அளித்து ஊதியமாக மாற்றி கொள்வது. இதையும் நிறுத்தி விட்டார்கள். இதேபோல் பழைய ஓய்வூதியத் திட்டத்தையும் அமல்படுத்தவில்லை. தற்போது ஒவ்வொரு மாத சம்பளத்தில் இருந்தும் 10 சதவீதம் அரசு பிடித்தம் செய்கிறது. அந்த தொகை எங்கே செல்கிறது என யாருக்கும் தெரியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்கள். ஆனால் ஒருமுறை கூட அந்த 10 சதவீதத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் எனச் சொல்லவே இல்லை.
அப்படி பார்த்தால் நாங்கள் ஓய்வு பெறும் போது தருவார்களா? இல்லையா? என்ற கேள்வி எழுகிறது. அதனால் தான் நம்பகத்தன்மை கிடையாது என்கிறோம். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று போராடி வருகிறோம். மாணவிகள் உயர்கல்வி கற்கும் வகையில் மாதம் 1,000 ரூபாய் வழங்கும் வகையில் புதுமைப் பெண் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது. அதுவே பெரிய தவறு தான். ஏனெனில் தாலிக்கு தங்கம் திட்டத்தை மாற்றி தான் மாணவிகள் உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்குகின்றனர். குறைந்தது 3 ஆண்டுகள் பட்டப்படிப்பு படித்தால் 36 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அதுவே தாலிக்கு தங்கம் திட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கமும், ஒரு பவுன் காசும் தருவார்கள். பெரும்பாலும் இளங்கலை படிப்பு வரை தான் மாணவிகள் படிக்கின்றனர். அப்படி பார்த்தால் நமக்கு நஷ்டம் தான் என்றார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி அப்படி செய்கிறார். இப்படி செய்கிறார். பாஜக இப்படி நடக்கிறது என்றெல்லாம் திமுக அரசு விமர்சனம் செய்து வருகிறது. அதை எல்லாம் பேசுறதை விட, நீங்கள் மக்களுக்கு செய்யுங்கள். மக்கள் கட்டாயம் ஓட்டு போடுவார்கள். மக்களே பாஜகவையும், இந்துத்துவாவையும் உள்ளே விட மாட்டார்கள் என்று ஒரு விஷயத்தை போட்டு உடைத்தார். உதாரணமாக கோட்டை வட்டாரமே ஆட்டம் கண்ட விஷயத்தை கேளுங்கள் என புதிர் போட்டார். திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டில் தலைமை செயலக ஊழியர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடத்தப்பட்டது. எப்படி தொழிற்சங்கங்கள் கட்சி சார்பாக செயல்படுகிறதோ? அதேபோல் தான் தலைமை செயலக ஊழியர் சங்கமும். அதில் திமுக வாஷ் அவுட் ஆனது. எல்லாம் அதிமுக தான். அப்போதே திமுக தரப்பு ஆடிப் போய் விட்டதாம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, ஒரு பியூன், ஒரு கிளர்க் கூட நேரில் சென்று பேச முடியுமாம்.
அரசின் திட்டங்கள் குறித்து அவர்கள் தரப்பு சாதக, பாதகங்களை முன்வைப்பார்களாம். ஸ்டாலினிடம் அப்படி போய் யாராலும் பேச முடியவில்லையாம். இதனால் கோட்டையில் எடப்பாடிக்கு கொஞ்சம் மவுசு அதிகம் தான் என்றார். என்ன சொல்றாங்கனா? எத்தனை துறைகள் இருக்கிறது என்று ஸ்டாலினுக்கு இன்னுமே தெரியாதாம். அதிகாரிகள் எழுதிக் கொடுத்ததை படிக்கிறாராம். திட்டத்தை பற்றி எதுவுமே தெரியாதாம். அதுமட்டுமின்றி திமுக மாவட்ட செயலாளர்களுக்கு கட்சி தலைமை ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளதாம். எவ்வளவு செலவு செய்வீர்களோ தெரியாது. வரும் தேர்தலில் அனைத்து தொகுதிகளும் திமுக வசப்பட வேண்டும். சரியாக வேலை செய்யுங்கள் என்று கட்சி தலைமை கறார் காட்டியுள்ளதாம். திமுகவின் முதல் மைனஸ் பாயிண்டே நீட் விலக்கு தான். அவர்கள் என்ன சொன்னார்கள்? ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் விலக்கு என்றார்கள். ஆனால் செய்யவில்லை.
எடப்பாடி பழனிசாமி 10 சதவீத உள் இடஒதுக்கீடு அளித்து அரசாணை பிறப்பித்தார். அவரால் செய்ய முடிந்ததை ஸ்டாலின் கொஞ்சம் உயர்த்தி வழங்கி இருக்கலாமே? இல்லையெனில் மாநில அரசே நீட்டை விலக்கி சட்டம் கொண்டு வரலாமே? இல்லையெனில் எங்க மாநிலத்தில் உள்ள மருத்துவ சீட்கள் எங்க மாநில மாணவர்களுக்கே என்று சட்டம் கொண்டு வரலாமே? எனக் கேள்வி மேல் கேள்விகளை அடுக்கினார். மூத்த பத்திரிகையாளர் மணி பேச்சை கொஞ்சம் கேட்டு பாருங்கள். முன்பெல்லாம் பாஜக, அதிமுகவை கிழி கிழி என்று கிழிப்பார். தற்போது திமுகவிற்கு எதிராக மாறிவிட்டார். தேர்தல் வாக்குறுதிகளே அளிக்காவிட்டால் கூட அதிமுக மீதான அதிருப்தியால் திமுக ஆட்சிக்கு வந்திருக்கும். எதற்காக இப்படி தேவையில்லாத வாக்குறுதிகளை கொடுத்தீர்கள் என்று கேட்கிறார். அதுவும் சரிதானே என்றார்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் 1,000 ரூபாய் வாங்க முடியாமல் எத்தனை ஆயிரம் பேர் தினமும் செய்திகளில் அடிபடுகிறார்கள் எனப் பாருங்கள். இதெல்லாம் திமுகவிற்கான வாக்கு வங்கியை நிச்சயம் பாதிக்கும். இந்த திட்டத்தை அமல்படுத்தினாலும் பிரச்சினை, அமல்படுத்தாவிட்டாலும் பிரச்சினை என்ற இக்கட்டான நிலைக்கு திமுக வந்திருக்கிறது. திமுக அரசு வெறும் அறிக்கை அரசாக தான் இருக்கிறது. கவர்ச்சியாக திட்டங்களை கொண்டு வருவதாக கூறுகிறார்கள். ஆனால் அமல்படுத்துவதை பார்த்தால் வெறும் ஏமாற்றமாகவே இருக்கிறது என்று கூறி முடித்தார். ஒரே ஒரு போன் கால், ஓராயிரம் செய்திகள் என்பார்களே. அது இதுதான் போல.
Tags:
படிப்பினை
அரசு ஊழியர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவில்லை. மிக முக்கியமாக பழைய பென்சன் திட்டம். அதை அமல்படுத்தும் சாத்தியக்கூறுகளே இல்லை என்று அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால் அந்த வாக்குறுதியை எவ்வாறு கொடுத்தார்கள் என்றும், அதை அரசு ஊழியர்கள் எவ்வாறு நம்பி வாக்களித்தார்கள் என்றும் தெரியவில்லை. அதேபோல, பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரவாக்குறுதியும் முக்கியமான ஒன்று. இது அரசுக்கு எதிரான பதிவு அல்ல, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற பதிவு.
உண்மை...