காய்ச்சல் ஒருபக்கம், ப்ராஜக்ட் மறுபக்கம்


ஜி.கே.ஷெட்டி வித்யாலயா பள்ளியில் ப்ராஜக்ட் டே (Project Day) என்ற நாளிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக இனியனுக்கும் ஒரு ப்ராஜக்ட் கொடுக்கப்பட்டது. ஆங்கிலத்தில் ”Vowels” என்று சொல்வார்களே, அந்த எழுத்துகள், அதைக் கொண்ட வார்த்தைகள் அடங்கிய செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். இப்போ செய்யலாம், அப்போ செய்யலாம் என தள்ளி போட்டுக் கொண்டே வந்து கடைசி நேரத்தில் தான் ப்ராஜக்ட் செய்ய ஆரம்பித்தோம். நான்கு நாட்களுக்கு முன்பு ஆரம்பித்து இரண்டு நாட்களில் செய்து முடித்தோம்.


கற்பனை திறனுக்கு பஞ்சம் ஏற்பட யூ-டியூப் தளம் தான் எங்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. இதை விட்டால் வேறு கதி. பள்ளி ஆசிரியை கூட Reference-க்கு யூ-டியூப் வீடியோ ஒன்றை தான் அனுப்பியிருந்தார்கள். பிளான் இதுதான். மேகத்தில் இருந்து மழைத்துளி விழுவது போன்ற ஒரு காட்சி. மேகம் இருக்கும் இடத்தில் பஞ்சை வாங்கி ஒட்ட வைத்தோம்.


மழைத்துளிக்கு கலர் காகிதம் (Foam Sheet) வாங்கி வந்தோம். முதலில் வெள்ளை நிற சார்ட்டில் தேவையான உருவங்களை வரைந்து அதை கத்தரித்து கொண்டோம். பின்னர் அவற்றை Foam Sheet-ல் வைத்து சரியான வடிவில் வெட்டி எடுத்தோம். Vowels எழுத்துகளை அறிமுகம் செய்ய மேகங்களில் இருந்து மழைத்துளி பொழிவது போல், அதுதொடர்பான வார்த்தைகளுக்கு நாங்களாகவே சில வடிவங்களை தேர்ந்தெடுத்தோம்.


a தொடர்பான வார்த்தைகளுக்கு ’நட்சத்திரம்’

e தொடர்பான வார்த்தைகளுக்கு ’பிறை நிலா’

i தொடர்பான வார்த்தைகளுக்கு ‘மேகங்கள்’

o தொடர்பான வார்த்தைகளுக்கு ‘மழைத்துளி’

u தொடர்பான வார்த்தைகளுக்கு ‘சூரியன்’


இனியனுக்கு நாங்கள் பார்த்து பார்த்து செய்த முதல் மெகா ப்ராஜக்ட் இதுதான். ப்ராஜக்ட் முழுவதும் ரெடியாகி பள்ளியிலும் சமர்பித்தோம். Project Day-க்கு முந்தைய நாள் தான் சிக்கலே. இனியனுக்கு வந்ததே காய்ச்சல். தொட்டு பார்த்தால் அப்படி ஒரு சூடு. வழக்கமாக பெற்றோர்கள் படும் பாடு எங்களுக்கும் வந்தது. குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் Paracetamol 250mg டானிக் தான் கொடுப்போம். ஏற்கனவே இருந்த பாட்டில் தீர்ந்ததால் புதிது வாங்கி வந்தேன். 6 மணி நேரத்திற்கு ஒருமுறை என கொடுத்து கொண்டே இருந்தோம்.


ஆனால் காய்ச்சல் விட்டு விட்டு வந்து ஒருவித பதற்றத்திலேயே வைத்திருந்தது. முந்தைய நாள் இரவு இனியனின் வகுப்பு ஆசிரியைக்கும் போன் போட்டு சொல்லி விட்டோம். கொஞ்ச நேரம் மட்டும் பள்ளியில் இருந்தால் போதும் என்று சொன்னார்கள். இதற்கிடையில் மருத்துவர், புதிதாக ஒரு டானிக் என சிகிச்சைக்கு தயாரானோம். அன்று இரவு அரைகுறை தூக்கம் தான். அடுத்த நாள் ஒருவழியாக தட்டு தடுமாறி பள்ளிக்கு சென்றார் இனியன். உடல் தான் சோர்ந்திருந்தது. மனமோ, உள்ளமோ சிறிதும் சோர்வடையவில்லை.


”Hi This is MD Eniyan” எனக் கூற ஆரம்பித்ததில் இருந்து Vowels-ல் இடம்பெற்றுள்ள எழுத்துகள் மற்றும் அதைக் கொண்ட வார்த்தைகளை முழுமையாக சொல்லி ”Thank You” சொல்வது வரை கிளிப் பிள்ளையாக மாறிப் போனார் இனியன். இதை தொலைவில் இருந்து பார்த்து ரசிக்க நேர்ந்தது. ஆசிரியர்கள், பார்வையாளர்கள், பள்ளி நிர்வாகிகள் என பலரும் வந்து பார்த்து வாழ்த்து மழை பொழிந்தனர். உடனே நம்ம ’தல’ திருவள்ளுவர் சொன்னது தான் நினைவில் தோன்றியது.


குறள்:

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை

என்நோற்றான் கொல்எனும் சொல்


பொருள்:

``ஆகா! இவனைப் பிள்ளையாகப் பெற்றது இவன் தந்தை பெற்ற பெறும் பேறு'', என்று ஒரு மகன் புகழப்படுவது தான், அவன் தன்னுடைய தந்தைக்குச் செய்யக்கூடிய கைம்மாறு எனப்படும்

— மு. கருணாநிதி


நல்ல அனுபவம்...

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

1 Comments

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post