கண்ணன் - இந்திரா / Kannan - Indhira

 

குடும்பங்கள் ஒன்று கூடி விழா எடுப்பதில் தான் எத்தனை மகிழ்ச்சி. அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இதில் கிடைக்கும் சின்ன சின்ன விஷயங்களையும் ரசித்து ருசித்து கொண்டாடுவதில் தான், அதன் தனித்துவமே அடங்கி இருக்கிறது. எங்கள் சித்தப்பா கண்ணனின் வீட்டில் மூத்த மகன் கோகுலுக்கு திருமணம் முடிவாகி விட்டது. இதில் சுவாரஸியம் என்னவென்றால் எங்கள் சொந்த ஊருக்கு வெகு அருகில் (மணிவிழுந்தான் தெற்கு) கோவை சித்தப்பா வீட்டிற்கு மருமகள் கிடைத்திருக்கிறாள். உறுதி செய்வதற்காக சமீபத்தில் பெண் வீட்டாருக்கு சென்றிருந்தோம்.


எல்லாம் நல்ல படியாக நடந்து முடிந்தன. இனி அடுத்த மூன்று மாதங்கள் பரபரப்பாக செல்லும். மே மாத இறுதியில் எங்கள் ஊரில் (தேவியாக்குறிச்சி) உள்ள மண்டபத்தில் திருமணம் நடப்பது தான் சுவாரஸியத்தின் உச்சம். ஏனெனில் சித்தப்பா - சித்திக்கு எங்கள் மீது தனிப் பாசம் உண்டு. வாரந்தோறும் தவறாமல் தொலைபேசியில் அழைத்து எங்கள் நலம் விசாரிக்கும் உறவுகளில் முதன்மையானவர்கள். இரண்டு மகன்கள் இருக்கும் வீட்டில் மகளுக்கான வெற்றிடத்தை என் மனைவி தேவிப்பிரியா பூர்த்தி செய்வது நெகிழ்வான விஷயம்.


ஒவ்வொரு விடுமுறை நாட்களிலும் கோவைக்கு சென்று சித்தப்பா - சித்தி வீட்டில் சில நாட்கள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஓடிக் கொண்டே இருக்கும். ஆனால் அதற்கான சரியான சூழல் அமைந்தது அரிது என்று தான் சொல்ல வேண்டும். எங்கள் சித்தப்பா, சித்தியின் புன்னகைக்கு விலை பேச முடியாது. கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுக்கலாம். மெல்லிய குரலில் சிரிப்பலை நிறைந்த முக பாவனை நிறைந்த சித்தப்பா. கணீர் குரலில் தீர்க்கமான முடிவுடன் பேசும் சித்தி. சித்தப்பா - சித்தி என இருவரும் மாறி மாறி கிண்டலடித்து கொள்ளும் தருணங்கள் எங்களை துள்ளலில் ஆழ்த்தி விடும்.


இதைக் கேட்டு ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது. வீட்டு வேலைகளை இழுத்து போட்டு கொண்டு செய்பவர் சித்தப்பா. ஓய்விற்கு பின்னர் சமையல் கட்டில் இவரது ராஜ்யம் தான் என நினைக்கிறேன். மருமகளையும் ஓரங்கட்டி முத்திரை பதித்து விடுவார் என இப்போதே பேசத் தொடங்கி விட்டனர். நொறுக்கு தீனி, பரோட்டா என வெளியில் சாப்பிட விரும்பும் அனைத்தையும் தனது பொற்கரங்களால் வீட்டிலேயே செய்து அசத்தி விடுவார். இவர்கள் குடும்பத்தில் கண்ணன் சித்தப்பா மற்றும் அவரது இரண்டு சகோதரிகள் என மூவரும் ஒரே ஜாடை.


இவ்வளவு நெருக்கத்தை எங்கள் குடும்பத்தில் வேறு யாரிடமும் நான் கண்டதில்லை. இந்த ஜாடை மொத்தம் நான்கு தலைமுறைகளாக தொடர்வதை கவனித்திருக்கிறேன். இவரது தந்தையின் புகைப்படம் முதல் சகோதரி வழி பேத்தி வரை அப்படி ஒரு ஒற்றுமை. Face Appல் நம்முடைய முகத்தை வயதுக்கேற்ப, பாலினத்திற்கேற்ப மாற்றி ரசித்து மகிழும் இனிமையான நேரங்கள் தான் நினைவுக்கு வரும். இவற்றை எல்லாம் பார்க்க பார்க்க எல்லையில்லா மகிழ்ச்சி. கண்ணன் சித்தப்பா பேருந்து நடத்துநராக கேரளாவில் தான் பணியை தொடங்கியிருக்கிறார். அங்கே இவரது நட்பின் கரங்கள் பரந்து விரிந்து காணப்படுகின்றன.


ஏராளமான புதிய உறவுகள். இதை இன்றளவும் அப்படியே தொடர்ந்து கொண்டிருக்கிறார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கேரளா செல்வது, குடும்ப விழாக்களில் தவறாமல் பங்கேற்பது, நட்பை வலுப்படுத்துவது என இருமாநில நல்லுறவிற்கு அச்சாரம் போடும் கோடான கோடி சாமானியர்களில் இவரும் ஒருவர். இவருடன் ஒரு கேரள பயணத்திற்கு திட்டமிட வேண்டும் என்பது நீண்ட நாள் எண்ணம். இன்னும் ஒரு மாதத்தில் அரசு பணியில் இருந்து ஓய்வு. இரண்டு மாதத்தில் மூத்தவருக்கு திருமணம். அதன்பிறகு நீண்ட ஓய்வு. இந்த இடைப்பட்ட நேரத்தில் ஒரு திட்டத்தை அரங்கேற்றி விட வேண்டியது தான். 

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post