வாடிய வயிறு


சுட்டெரிக்கும் வெயில். வயிற்றை கிள்ளிய பசி. நண்பர்களுடன் அலுவலகத்தில் வெளியே வந்தான் கண்ணன். தியாகராய நகரில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக போக்குவரத்து மாற்றம், வெட்டப்பட்ட மரங்கள் என மக்கள் அலைக் கழிக்கப்பட்டு வந்தனர். அதில் கண்ணன் மற்றும் அவனது நண்பர்களும் விதிவிலக்கல்ல. எங்காவது ஒரு ஓட்டலுக்கு சென்று வயிறாற சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு.

அப்படியே அவர்களை நடேசன் பூங்கா அருகிலிருந்த கையேந்தி பவன் பக்கம் கால்கள் கூட்டிச் சென்றன. எங்காவது அமர்ந்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என நண்பர்கள் அடம்பிடிக்க கண்ணதாசம் மெஸ்-க்கு சென்றனர். வெள்ளை வெளேர் அரிசி சாதம், கத்தரிக்காய் குழம்பு, கோஸ் பொரியல், மாங்காய் ஊறுகாய், அப்பளம், ரசம் என பக்குவமாய் சாப்பிட ஆரம்பித்தனர். அப்படியே கண்ணனின் எழுத்தின் மீதான ஆர்வம் குறித்து பேச்சு எழுந்தது.

நண்பர்கள்: எப்படியோ சின்ன சின்னதாய் கதை எழுதி எழுத்தாளர் ஆயிட்டு வர.

கண்ணன்: ஏதோ உங்க புண்ணியத்துல.

நண்பர்கள்: ஆமா கடைசியா ஒரு கதை எழுதினல்ல. அது பேரென்ன?

கண்ணன்: ”வாடிய வயிறு”

நண்பர்கள்: என்னபா. ரொம்ப தமிழ் பேரால இருக்கு. எதைப் பத்தின கதை.

கண்ணன்: பசித்த வயிறுக்கு சோறு போட வேண்டும். யாராவது வந்து பசினு கேட்டா, உடனே சாப்பாடு வாங்கி கொடுக்கணும். பாரதி சொன்னது போல தனி ஒருவனுக்கு உணவில்லை எனில், இந்த உலகத்தையே அழிச்சுடனும். அந்த மாதிரி ஒரு எண்ணம். எல்லாருக்கும் முடிஞ்சதை கொடுத்து உதவணும்பா. இதை மனசுல வச்சு எழுதினேன்.

நண்பர்கள்: இதெல்லாம் எழுத நல்லா தான் இருக்கு. செஞ்சு பாத்தா தான் தெரியும்.

அப்படியே அனைவரும் சாப்பிட்டு முடித்து வெளியே வரத் தொடங்கினர். நண்பர்கள் முன்னே செல்ல அனைவரிடமும் கணக்காய் காசை வாங்கி ஒட்டுமொத்தமாக கடைக்காரரிடம் செட்டில் செய்து கடைசியாக புறப்பட்டான் கண்ணன். வழியில் கை நிறைய கடலை உருண்டை வாங்கி கொண்டு சென்றான். அப்போது கிழிந்த துணியுடன் குளித்து பல நாட்களான நிலையில் முதியவர் ஒருவர் வந்தார்.

கையை தனது வயிற்றில் வைத்து பின்னர் வாய்க்கு கொண்டு போய் சைகையால் உணர்த்தினார். கண்ணன் சட்டென கைகளில் இருந்த கடலை உருண்டையை வாயில் போட்டு குதைக்கி கொண்டு, போ... போ... என்பது போல கூறிவிட்டு வேகமாய் நடந்தான். திரும்பி கூட பார்க்கவில்லை.
Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

1 Comments

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post