நாம் வென்றெடுக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன என உணர்ச்சி பிளம்பாய் வீறு கொண்டு எழச் செய்திருக்கிறது. இந்த நாவலை எழுதிய ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின் கைகளுக்கு ஒருமுறையாவது முத்தமிட வேண்டும் என்று மனம் ஏங்கும். தொழிற்சங்கத்தில் இணைந்து நமது வாழ்நாள் பலனை அடைவதற்கான முயற்சியில் இறங்க உத்வேகம் கொடுக்கும். ’தாய்’ நாவலின் முக்கிய கதாபாத்திரம் பாவெல் விலாசவ் என்ற தொழிலாளி. அவர் தொழிலாளர் போராட்டத்தை முன்னெடுத்த போது, அவருடைய தாய் பெலகேயா நீலவ்னா எப்படி உதவியாக இருந்தார் என்பதை மையமாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.
இதில் பாவெலின் தாய் பெலகேயா உடன் தான் பேரறிவாளனின் அற்புதம்மாள் ஒப்பிடப்பட்டிருக்கிறாள். அதில் சிறிதும் தவறில்லை என்றே தோன்றுகிறது. ஒரு தாயின் 31 ஆண்டுகள் போராட்டம் என்பது சாதாரண விஷயமா என்ன? எத்தனை வலிகள், வேதனைகள், போராட்டங்கள், உண்ணாவிரதம், நடைபயணம், சந்திப்புகள், ஆலோசனைகள், சட்டப் போராட்டம் நடத்தப்பட்டிருக்கும் என்று எண்ணிப் பார்த்தால் தலையே சுற்றுகிறது. அற்புதம்மாள் என்றென்றும் கொண்டாடப்பட வேண்டியவர்.
அடுத்த பல தலைமுறைகள் எளிய மனிதர்களுக்கான நீதியை போராடி பெறுவதற்கான வழியை காண்பித்துள்ளார். நானும் ’தாய்’ நாவலை ஒருமுறை படித்திருக்கிறேன். அதன் கடைசி பக்கத்தை என் முகநூல் பக்கத்தில் 2017ல் எழுதினேன். அதில், அவர்கள் அவளை வாசற்புறமாகத் தள்ளிக் கொண்டு சென்றார்கள். அவள் ஒரு கையைப் பிடுங்கி விடுவித்துக் கொண்டு கதவின் கைப்பிடியை எட்டிப் பிடித்தாள். ”இரத்த சமுத்திரமே திரண்டு வந்தாலும் சத்தியத்தை மூழ்கடிக்க முடியாது!” அவர்கள் அவள் கையில் பட்டென்று அறைந்தார்கள்.
”ஏ, முட்டாள்களே! நீங்கள் வீணாக எங்கள் பழியைத் தான் தேடிக் கொள்கிறீர்கள். உங்களது கொடுமைகளெல்லாம் ஒருநாள் உங்கள் தலையிலேயே வந்து விடியப் போகின்றன!” ஒரு போலீஸ்காரன் அவளது தொண்டையைப் பிடித்து அவளது குரல்வளையை நெரித்துத் திணறிடித்தான். ” அதிருஷ்டங்கெட்ட பிறவிகளே!...” என்று அவள் திணறினாள். யாரோ ஓர் உரத்த தேம்பலால் அதற்குப் பதில் அளித்தார்கள்.
1907 ஆண்டு.
ஆனால் இன்றோ...
அற்புதம்மாள் முகத்தில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுக்க, மிகுந்த நன்றிக் கடனுடன் பெருமிதம் கொண்ட தருணமாக பேரறிவாளனுக்கான சட்டப் போராட்டம் இனிதே நிறைவு பெற்றிருக்கிறது.
2022 ஆண்டு.
எளிய மக்களுக்கான நீதி வெல்லட்டும். அதற்காக துணை நிற்போம்.