ஏழாம் வகுப்பு படிக்கும் போது ஒருநாள் என் தந்தை வேலை முடிந்து மாலை வீடு திரும்பிய போது கையில் ஒரு நோட்டீஸ் கொண்டு வந்திருந்தார். ”இதைப் படித்து பார்” என்று என்னிடம் கொடுத்தார். அதை எடுத்துக் கொண்டு வழக்கமான விளையாட்டு தலமான மாரியம்மன் கோயிலுக்கு சென்றேன். அந்த நோட்டீஸில் தாடியுடன் கூடிய தாத்தா ஒருவரின் படம் இருந்தது. அதன் தலைப்பு எனக்கு நினைவில்லை. அதில், “ஏழைக் குழந்தைகள் பாலுக்கு அழும் போது, சாமி சிலைகளுக்கு பால் அபிஷேகம் எதற்கு? நம்மை சாமி காக்கும் என்றால், சாமி இருக்கும் கோயிலுக்கு எதற்கு பூட்டு? கடவுள்களுக்கு, நதிகளுக்கு பெண்களின் பெயரை வைத்துக் கொண்டாடும் போது நிஜ வாழ்க்கையில் அவர்களை மிகவும் தாழ்வாக நினைப்பது ஏன்?” உள்ளிட்ட சுமார் 50 கேள்விகள் இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த கேள்விகளை மீண்டும் மீண்டும் படிக்கும் போது சரியான கேள்விகள் தானே? என்று தோன்ற ஆரம்பித்தது. அப்போது தெரியாது நாம் பாதுகாக்க வேண்டிய சொத்து அந்த பெரியவர் என்று. சிறிய நோட்டீஸ் மூலம் என் தந்தை போட்ட விதை இன்று மரமாக வளர்ந்து நிற்கிறது. என் தந்தை ”உண்மை” என்ற மாத இதழ்களின் பெரிய தொகுப்பு ஒன்றை வைத்திருந்தார். பள்ளிக் காலங்களில் பலமுறை அதனைப் படித்து பார்த்திருக்கிறேன். கடவுள் மறுப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, சாதிக் கொடுமை அகற்றுதல், தீண்டாமை கூடாது, சுதந்திரப் போராட்டம் என சிலவற்றை அதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.
அதேசமயம் பாடப்புத்தகங்களில் சிறிய பகுதியாக ஈ.வெ.ராமசாமி அவர்களைப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால் அது வெறும் வாழ்க்கை வரலாறாகவே கடந்து போய்விட்டது. கல்லூரி காலத்தில் தான் நண்பர்கள் எனக்கு பகுத்தறிவு ஊட்டினார்கள். புத்தக அறிவை விட சக மனிதர்களின் அனுபவ அறிவு எனக்குள் ஆழமாக பதியத் தொடங்கியது. அப்போது தான் அவர் ஈ.வெ.ராமசாமி அல்ல. ”தந்தை பெரியார்” என்ற மாமனிதர் எனத் தெரியவந்தது. வேலை நிமித்தமாக சென்னை வந்து சேர்ந்த போது பெரியார் திடலை கண்டு கொண்டேன். அங்குள்ள அவரது நினைவிடத்திற்கு பலமுறை சென்றுள்ளேன். பெரியார் திடலில் நடைபெற்ற தலைவர்கள் கருத்தரங்கு, குறும்படங்கள் திரையிடல், புத்தகத் திருவிழா, பெரியாரின் பிறந்த நாள் விழா ஆகியவற்றில் கலந்து கொண்டது தந்தை பெரியார் பற்றிய அறிவை மேலும் வலுப்படுத்தியது. வேலை தேடிய தருணங்களில், வேலை கிடைத்த பின்னர் ஓய்வு நேரங்களில் சில புத்தகங்களை எடுத்துக் கொண்டு பெரியார் திடலுக்கு சென்று அமர்ந்து அமைதியான சூழலில் படித்து வந்திருக்கிறேன். என் திருமணத்திற்கு “பெரியார் இன்றும் என்றும்” என்ற பிரம்மாண்ட புத்தகத்தை நண்பர்கள் பரிசாக அளித்தது மகிழ்ச்சியின் உச்சம் என்று தான் சொல்ல வேண்டும்.
நான் மட்டுமல்ல, நம் தமிழ்ச் சமூகமும் தந்தை பெரியார் சொன்ன விஷயங்களை கேட்டு பகுத்தறிந்து, அதிலிருக்கும் நல்லவற்றை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். பாசிச சக்திகள் மிக வேகமாக வளர்ந்து வரும் தற்காலச் சூழலில், அவற்றை எதிர்கொள்ளவும், முற்போக்கு சமூகத்தை கட்டமைக்கவும் தந்தை பெரியார் நமக்கு என்றென்றும் உறுதுணையாக நிற்பார். அதற்கு முதலில் அவரை கற்க வேண்டும். வாழ்க்கை வரலாற்றை விட்டுத் தள்ளுங்கள். பிறப்பு, வளரும் சூழல் என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அதன் தாக்கம் வளர்ந்த பின்னர் பல்வேறு சமயங்களில் வெளிப்படும். அதை வைத்து குறை காணக் கூடாது. பெரியார் யாருக்கும் எதிரானவர் இல்லை. அப்படியிருந்தால் தனக்கு முற்றிலும் எதிர்நிலையில் இருக்கும் தீவிர ஆத்திகவாதியான, வர்ணாசிரமத்தை தூக்கி பிடித்த ராஜாஜி உடன் எப்படி நட்பு பாராட்டி இருக்க முடியும். தந்தை பெரியார் சொல்லும் தத்துவங்கள், சமூக சீர்திருத்தங்கள், சாதியால் பிரிவுற்று கிடக்கும் நமது சமூகம் விழித்துக் கொள்வதற்கு செய்ய வேண்டிய கடமைகள், வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவம், பெண்ணுரிமை உள்ளிட்ட விஷயங்களை கற்க வேண்டும். வெறுமனே ஏட்டுச் சுரைக்காயாக மட்டுமின்றி நடைமுறை வாழ்க்கையில் பின்பற்ற பழக வேண்டும்.
சமீப காலமாக பெரியார் சிலைகள் மீது சில மோசமான செயல்களை செய்வது, அவரை கொச்சைப்படுத்தி பேசுவது என இளசுகள் முதல் பெருசுகள் வரை கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவது உள்ளிட்ட செயல்கள் வேதனையை அளிக்கின்றன. ஆனால் இதற்கெல்லாம் தந்தை பெரியார் தான் கவலைப்படுவாரா? அவரது சித்தாத்தங்கள் தான் காணாமல் போய்விடுமா? நம் சமூகம் தான் அவரை மறந்து போகுமா? எவ்வளவு அவதூறுகளை பாசிச சக்திகள் முன்வைத்தாலும் அவற்றை எதிர்கொள்ள பெரியார் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கிறார். இதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வோம். மானமும் அறிவும் கொண்டதாக தமிழ்ச் சமூகம் விளங்க, இனியும் வாழ பெரியார் நம் சுவாசக் காற்றாய் சுற்றிக் கொண்டே தான் இருப்பார். எதுவுமே ஒரேநாளில் வந்துவிடாது. தொடக்கம் கற்கள் நிறைந்த பாதையாக இருக்கலாம். இதன் முடிவு ஏற்றத் தாழ்வுகள் அற்ற, மூட நம்பிக்கைகள் களைந்த, சம உரிமை பழகும், தமிழைக் கொண்டாடும் ஒப்பற்ற சமூகமாக இருக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் கொள்ள வேண்டாம். பெரியாரை படியுங்கள். அவரது சித்தாத்தங்களை நம் சமூகத்தின் ஆணி வேருக்கு கடத்துங்கள்.
Tags:
சமூகம்