மழலைகளின் உலகம்



குழந்தைகளின் உலகம் அசாத்தியமானது. நாம் அந்த வயதை கடந்து வந்திருந்தாலும், தற்போது அந்த உலகத்திற்குள் நுழைவது அவ்வளவு எளிதல்ல. அவ்வாறே இனியனின் உலகமும் சாகசங்கள் நிறைந்ததாகவே பார்க்கிறேன். ஒரு சமயம் சிறிய பூச்சி ஒன்றின் அருகில் சென்று, "இங்கே வரக்கூடாது. அப்படியே போய் விடு" என்றார். அந்த வழியே கடந்து செல்கையில் எதேச்சையாக நான் கவனித்தேன். அடுத்ததாக, "சொன்னா, கேட்க மாட்டியா?" என்று அதிகாரத்துடன் கேட்டார். அந்த பூச்சியால் மனிதர்களின் பேச்சையோ, மொழியையோ புரிந்து கொள்ள முடியாது.

அதைப் பொறுத்தவரையில் ஏதோ ஓர் உயிரினத்தின் அசைவுகள், அதிர்வுகள், தாக்குதல்கள். அவ்வளவே. இப்படியான விளையாட்டுகள் மழலைகளுக்கு எப்போதும் சாத்தியப்படும். நாமோ விசித்திரத்தில் ஆட்கொள்ளப்படுவோம். நாங்கள் இருவரும் சேர்ந்து பலமுறை செடி, கொடிகளை பார்த்து வணக்கம் சொல்லி இருக்கிறோம். நாய், பூனை, ஆடுகள், மாடுகளுக்கு சில அறிவுரைகளை கூறியிருக்கிறோம். பூச்சிகளை பிடித்து உண்ணும் பல்லிகளை கண்ணெடுக்காமல் பார்த்திருக்கிறோம். மயில்களைப் பார்க்க ஓடியிருக்கிறோம். எறும்புகளுக்கு அரிசியையும், சர்க்கரையையும் உணவாக அள்ளி இறைத்திருக்கிறோம். மீன்களுக்கு முன்னால் ஆட்டம் போட்டிருக்கிறோம்.

பறவைகளின் திசையை சில மீட்டர் தூரம் அண்ணாந்து பார்த்த படியே கடந்திருக்கிறோம். அதன் நீட்சி தான் தற்போது தன்னிச்சையான செயல்பாடுகளாக இனியனிடம் வெளிப்பட்டிருக்கின்றன. இந்த மழலைப் பருவத்தின் அத்தனை அசாத்தியங்களையும் முழுமையாக வாழ்ந்து பார்த்திட வேண்டும். அதற்கு பெற்றோர்களாகிய நாம் தான் நம் பிள்ளைகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். கற்றுத் தர வேண்டும். அவர்களின் கொண்டாட்டத்தில் பங்கெடுத்து கொள்ள வேண்டும். வாருங்கள், மழலைகளின் உலகில் நுழைவோம்.👶

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post