முதன்முதலில் என்னவள் தேவிப்பிரியா-வை பெண் பார்க்க சென்ற தருணம். அப்போது என்னவளின் சகோதரராக அறிமுகமானவர் தான் சத்தியமூர்த்தி. பெண் பார்த்துவிட்டு பேருந்து நிறுத்தத்திற்கு திரும்பும் போது என்னை இருசக்கர வாகனத்தில் ஏற்றி அழைத்து வந்தார். அப்போது தான் முதன்முதலில் பேசினோம். ”அக்காவை பிடித்திருக்கிறதா? என்னிடம் மட்டும் சொல்லுங்கள். யாரிடமும் சொல்ல மாட்டேன்” என்று கேட்டதாக நினைவு. அதற்கு ‘எனக்கு பிடித்திருக்கிறது. இருந்தாலும் சில விஷயங்களை பேசி புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்’ என பதிலளித்ததாக நினைவு. அப்போது இருவரின் தொலைபேசி எண்களையும் பரிமாறிக் கொண்டோம். பெண் பார்த்து விட்டு சென்ற பின்னர், சில நாட்கள் கழித்து சத்தியமூர்த்தியை அழைத்தேன். இருவீட்டாரின் சம்மதமும் பெற்று உறுதியாகி விட்ட தருணம். அப்போது ”பேச ஆரம்பித்துவிட்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு, ‘இன்னும் இல்லை. பேச வேண்டும். என்னைப் பற்றி சில விஷயங்களை நான் கூற வேண்டும். எனக்கு கடவுள் நம்பிக்கை பெரிதாக இல்லை. வேண்டுமென்றால் உடன் செல்வேன். இதுபோன்ற சில விஷயங்கள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் மனம்விட்டு பேச வேண்டும். அது தேவிக்கும் பிடிக்க வேண்டும்’ என்று பதிலளித்தேன். ”நீங்களே போன் செய்து பேசுங்கள். பேசினால் தான் தெளிவு பிறக்கும். தேவிக்கு கடவுள் நம்பிக்கை நிறைய உண்டு. ஆனால் எனக்கும் பெரிதாக ஈடுபாடு இல்லை.
அவளோடு கோயிலுக்கு உடன் சென்றால் போதும். வேறெதுவும் பெரிதாக செய்ய தேவையில்லை. வீட்டிற்கு திரும்ப வெகு நேரமாகி விட்டாலோ அல்லது போன் செய்து அழைக்கும் போது எடுக்கவில்லை என்றாலோ தேவி விட மாட்டாள். அவள் மனம் ஆறும் வரை விடாமல் போன் செய்து கொண்டே இருப்பாள். மற்றபடி மிகவும் சகஜமாக இருக்கக் கூடியவள் தான்” எனக் கூறினார். ‘விரைவில் தேவிக்கு போன் செய்து பேச ஆரம்பிக்கிறேன்’ என்று பதிலளித்தேன். இதுதான் போனில் நாங்கள் மனம் விட்டு நீண்ட நேரம் பேசிய முதல் தருணம். திருமணத்திற்கு முதல் நாள் ஆத்தூர் திரௌபதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி விட்டு, மண்டபத்திற்கு திரும்பிய தருணம். அப்போது தேவியின் அப்பா என்னிடம் வந்து "மச்சானின் கையே பிடித்துக் கொண்டே இருக்க வேண்டும். விடக் கூடாது" என்று கூறினார். அதன்படி கோயிலில் இருந்து மண்டபம் செல்லும் வரை சத்தியமூர்த்தியின் கைகளை பிடித்தவாறே சென்றேன். அதன்பிறகு தேவியின் கழுத்தில் தாலி கட்டி நெற்றியில் குங்குமம் வைத்து என்னவள் ஆக்கிக் கொண்டேன். என் சகோதரரை போல அவரும் ஒரு முக்கியமான நபராக மெல்ல மெல்ல மாறத் தொடங்கினார். அதன்பிறகு பெரிய அளவில் பேசிக் கொள்ளாவிட்டாலும் சிறிய சிறிய உரையாடல்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டே தான் இருந்தன. நாட்கள் வேகமாக நகரத் தொடங்கின. பெங்களூருவில் தங்கியிருந்த போது ஒருமுறை நானும் சத்தியமூர்த்தியும் ஓட்டலுக்கு உணவு வாங்கச் சென்றிருந்தோம்.
அப்போது அவர் பேசிய வார்த்தைகள் எனக்கு சரியாக நினைவில்லை. ஆனால் அவரை எப்படி புரிந்து கொண்டேன் என்பது இன்னும் நினைவில் இருக்கிறது. யாரிடமும் கைகட்டி வேலை செய்யும் போக்கு தனக்கு பிடிக்காது. சொந்த காலில் நிற்க வேண்டும். சுயமாக தொழில் செய்ய வேண்டும். தான் படித்த கட்டடக்கலை சார்ந்த பொறியியல் பட்டத்தின் மூலம் பெரிது பெரிதாக கட்டடங்களை கட்ட வேண்டும். தனக்கென்று ஒரு நிறுவனத்தை கட்டியெழுப்ப வேண்டும். நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும். தன்னுடைய துறையில் தனி முத்திரை பதிக்க வேண்டும். துறை சார்ந்த நுணுக்கங்களை பலருக்கும் கற்றுத் தர வேண்டும். நண்பர்களை, நம்பி வந்தவர்களை, தன்னிடம் வேலை செய்பவர்கள் என அனைவரையும் வாழ வைக்க வேண்டும். தான் ஒரு விஷயத்தில் முடிவெடுத்து விட்டால் அதில் தீர்க்கமாக இருக்க வேண்டும். குடும்பமாக இருந்தாலும் சரி, நட்பாக இருந்தாலும் சரி. ஏதாவது ஒரு விஷயத்தில் பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை தான். எந்தவொரு சமரசத்திற்கும் வர மாட்டார். சத்தியமூர்த்தி உடனான எனது அன்பு கைகோர்க்க ஆரம்பித்து நான்கு ஆண்டுகளை கடந்துவிட்டது. என்னவள் உடனான காதலை விட சத்தியமூர்த்தி உடனான அன்பின் தொடக்கத்திற்கு வயது அதிகம். அவ்வப்போது தனது துறை சார்ந்த நுணுக்கங்களை என்னிடம் கூறுவார். நாங்கள் புதிதாக கட்டுவதற்கு திட்டமிட்டுள்ள வீட்டிற்கும் சமீபத்தில் இவர் சில ஆலோசனைகளை வழங்கினார்.
அன்றைய தினம் எங்களிடம் உரையாடல் மீண்டும் ஒருமுறை நீட்சி அடைந்தது. சத்தியமூர்த்தி மீது குடும்பத்தில் அனைவரும் கோபப்பட்ட தருணங்களில் கூட எனக்கு கோபம் வரவில்லை. தனி ஆளுமையாக உருவெடுக்க நினைக்கும் அவர் சில நேரங்களில் தவறு செய்யலாம். அதனை நாம் தான் திருத்த வேண்டும். அதை அன்பென்ற ஆயுதம் கொண்டு சீர்செய்ய வேண்டும் நினைக்கிறேன். புதிதாக ஏதேனும் ஒரு இடத்தில் ஊர் சுற்றுவது, உணவு உண்பது, பொழுதை கழிப்பது என்றால் உடனே சத்தியமூர்த்தியின் நினைவு வந்துவிடும். அவரையும் அழைக்க வேண்டும் என்று முதலிலேயே சொல்லி விடுவேன். அவரது கட்டடம் கட்டும் பணி மிகவும் வேலைப்பளு நிறைந்தது. கட்டடம் கட்டித் தரும் பணியை தனி ஆளாக எடுத்துக் கொண்டு செயல்பட்டு வருவதால் நிறைய பேருக்கு மணிக்கொரு முறை பதில் சொல்லியாக வேண்டும். இதனால் சில சமயங்களில் சலிப்புடன் காணப்படுவார். அதைப் பார்க்கும் போது எனக்கும் சோர்வாக இருக்கும். இருப்பினும் தனது முடிவில் உறுதியாக நின்று செயல்பட்டு வருகிறார். சத்தியமூர்த்தி ஏதேனும் ஒரு நிறுவனத்திற்கு மாத சம்பளத்திற்கு வேலை செய்தால் நன்றாக இருக்குமே என்னவள் அடிக்கடி கூறுவாள். ஆனால் அவர் அதற்குள் பிடிபட மாட்டார். அவர் கானும் கனவு பெரியது.
நாம் அதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. சராசரி மனித வாழ்க்கையை விரும்பும் நம்மை போன்றவர்களுக்கு சத்தியமூர்த்தியின் தொலைநோக்கு பார்வை பிடிபடாது என்றே தோன்றுகிறது. பெங்களூரு, அதன் சுற்று வட்டாரப் பகுதிகள், சேலம், ஆத்தூர் என அவர் கட்டிய வீடுகள், கடைகள், மருத்துவமனைகள் என எண்ணிக்கை 20ஐ தொட்டு விட்டது. வளர்ந்து வரும் இளம் கட்டடக் கலை நிபுணராக சத்தியமூர்த்தி திகழ்கிறார். இவரது வளர்ச்சி மென்மேலும் வளர வேண்டும். இவர் கட்டும் கட்டடங்களை பார்த்து உலகம் வியக்கும் தருணம் வரும். இதன் எண்ணிக்கை 50, 100, 1,000 என பன்மடங்கு பெருகட்டும். இவரது திறமைகளை பலரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நேர்த்தியான கட்டடங்களுக்கு திட்டம் தீட்ட, கட்டி எழுப்ப நினைக்கும் அனைவருக்கும் சத்தியமூர்த்தி ஒரு வரப்பிரசாதம்.