கடல் உற்ற தோழன்


நம் தமிழகத்தின் பெரும்பகுதி கடலால் சூழப்பட்டிருக்கிறது. சுற்றுலா போகும் போதும், கோயில் வழிபாட்டிற்கான பயணங்களின் போதும் கடலை கண்டிருப்போம். அதன் பிறகு சென்னை போன்ற கடற்கரை நகரங்களில் நிரந்தரமாக வசிக்கத் தொடங்கும் போது கடல் நம் ஊராகிப் போய்விடும். அப்படியான வாய்ப்பு எனக்கும் கிடைத்திருக்கிறது. அலைகள் நம் கால்களில் பட சிலிர்ப்பூட்டும் உணர்வை தாங்கி நடை பயிலும் போது மனம் லேசாகிவிடும். குழந்தைகளை போல துள்ளல் போட வைக்கும். நம் பிரச்சினைகள் அப்படியே காற்றில் பறந்து சென்றுவிட்டது போல் உணரும்.

அதுவும் நடுக்கடலில் இருப்பதை போன்று நினைத்தால் ஒருவித அமைதி நிலவும். அந்த சூழல் தியானத்திறகு ஒப்பான நிலைக்கு நம்மை கொண்டு செல்லும். வேலை தேடிய தருணங்களில் பசியால் வாடிய சூழல்களில் பலமுறை கடற்கரையில் உலவியிருக்கிறேன். நீ எதையும் சாதிக்க வேண்டும் என்று சுயநலம் விரும்பாதே. இந்த சமூகத்தை கை தூக்கி விட ஏதாவது செய் என்ற பொது நலம் விரும்பு என்று கடல் எனக்கு அறிவுரை சொல்லியிருக்கிறது. அதற்கு முன் நமக்கு கிடைத்த படிப்பினைகளும் ஒன்று சேர்ந்து கொள்ளும். கடற்கரை மணலில் அமர்ந்தபடியே பாரதியின் கவிதைகளை வாசித்தால் அதைவிட பேரின்பம் ஏது.

அப்படியே "நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" என்று வாசிக்கத் தொடங்கினால் அவ்வளவு தான். இதோ எழுந்து விட்டேன். சரிவிலிருந்து மீண்டு விட்டேன். இந்த உலகில் இல்லாமையை ஒழித்துக் கட்டப் போகிறேன். எல்லாமும் எல்லாருக்கும் கிடைக்கும் வகையிலான புத்துலகம் படைக்கப் போகிறேன் என்றெல்லாம் உத்வேகம் பிறக்கும். பசித்த வயிறும், சமூகத்தின் மீதான கோபமும் இப்படியான எண்ண ஓட்டங்களை அளிக்கும். இவற்றை நான் அனுபவித்திருக்கிறேன். இந்த எண்ணங்களை அலட்சியப்படுத்தி விடக்கூடாது. அப்படியே பிடித்து கொள்ள வேண்டும். நம் வாழ்நாள் இலக்காக மாற்றிவிட வேண்டும்.

அந்த ஊற்றின் வழியே கொள்கைகளையே பெருங்கடலாய் பற்றிக் கொண்டு வாழும் கூட்டத்தோடு ஒன்றிட வேண்டும். நம் பிழைப்புக்கான வேலையே சமூகத்திற்கான வேலையாக இருந்துவிட்டால் எத்தகைய பெரும் பேறு. ஒவ்வொருவருக்கும் அவர்கள் எண்ணப்படி தான் வாழ்க்கை. அதன் வழியே சிந்தனைகளும் பிறக்கும். இந்த கடற்கரை எத்தனையோ அறிஞர்களை, கவிஞர்களை, தலைவர்களை, தத்துவஞானிகளை உருவாக்கியிருக்கிறது. அவர்களை தடம் புரளாமல் நல்வழிப்படுத்தி இருக்கிறது. நீங்களும் கடற்கரையில் நடந்து பாருங்கள், கையில் பிடித்த புத்தகத்துடன்.

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

1 Comments

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post