கடல் பயணங்களின் வாசிப்பு

 


இனிதே முடிவுற்றது கடல் பயணங்களின் வாசிப்பு. கடல் பயணங்கள் உலகம் என்பது வெறும் ஐரோப்பா மட்டுமே அல்ல என்பதை ஐரோப்பியர்கள் புரிந்து கொண்டது அப்போதுதான். அதுவரை வாய்வழிக் கதைகளாகவும், சுவையான கற்பனையாகவும் மட்டுமே இருந்த பல இடங்களை கடல் பயணிகள் நேரில் சென்று பார்த்தனர். ஆசியாவின் அழகும் அங்கு கிடைத்த விதவிதமான மசாலாப் பொருட்களும் முத்து, பவளம், தங்கம் போன்ற மதிப்புமிக்க கற்களும் அவர்களை ஈர்த்தன. அதேபோல் ஆப்பிரிக்காவின் கம்பீரமான அழகும், இயற்கை வளமும் கடல் பயணிகளின் ஆசையை தூண்டி விட்டன. அமெரிக்காவில் ஒரு புதிய உலகம் அவர்கள் கண்டார்கள்.

அங்கு வசித்து வந்த பழங்குடி மக்களின் வாழ்க்கையும் கலாச்சாரமும் அவர்களை மயக்கின. இங்கும் அவர்களுக்கு தங்கம் உள்ளிட்ட பல பொருள்கள் கிடைத்தன. புதிய நிலங்களின் அறிமுகம் புதிய கலாச்சாரத்தையும் புதிய வாழ்க்கை முறையையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அதுவரை அறிமுகமாகாத புதிய காய்கறிகள், பழங்கள் மரங்கள், விலங்குகள் அறிமுகமாயின. புதிய வழித்தடங்களை உருவாக்க முடிந்தது. உலகம் உருண்டையானது என்னும் நம்பிக்கை வலுப்பெற்றது. இந்த உலகில் நாம் மட்டுமல்ல பல வகையான மக்கள் இருக்கிறார்கள், நம்முடைய மதம் மட்டுமல்ல பல விதமான மதங்களும் நம்பிக்கைகளும் இருக்கின்றன.

நம்முடைய கலாச்சாரம் மட்டுமே உயர்ந்தது என்று நினைக்க முடியாது. நாமே மேலானவர்கள் என்று இனியும் கருதமுடியாது. மனிதர்கள் வெள்ளை நிறத்தில் மட்டுமல்ல. மஞ்சள் நிறத்தில், பழுப்பு நிறத்திலும், கருப்பு நிறத்திலும் கூட இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்று போலவே சிந்திக்கிறார்கள். ஒன்றுபோலவே செயல்படுகிறார்கள். பல கண்டங்களாக உலகம் பிரிந்திருக்கிறது. பல மொழிகள் மக்களை பிரித்து வைத்திருக்கின்றன. பலவிதமான பழக்க வழக்கங்களை அவர்கள் பின்பற்றுகிறார்கள். இருந்தாலும் மக்கள் இனத்தின் அடிப்படையிலும் மதத்தின் அடிப்படையில் ஒரு கலாச்சாரத்தின் அடிப்படையில் பாகுபடுத்திப் பார்க்க கூடாது.

நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் மற்றவர்களுடைய உறவினர்கள் தான். வெவ்வேறு நாடுகளையும் கண்டங்களையும் மக்களையும் கடல் ஒன்றிணைக்கிறது. நம்மிடம் உள்ள வேறுபாடுகள் அனைத்தையும் கடல் சமப்படுத்துகிறது. இதை மனதில் வைத்து கடல் பயணங்களில் வெற்றி தோல்விகளில் இருந்து நாம் பாடம் படித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தொட்ட உயரம் அடைந்த வீழ்ச்சி இரண்டையும் நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.


இந்தியாவை கண்டுபிடித்த கதை


15ஆம் நூற்றாண்டில் இந்தியாவைப் பற்றி கனவு கண்டு கொண்டிருந்தவர்கள் ஏராளம். அப்போது இந்தியாவை பற்றி நிஜமாகவும், கற்பனையாகவும் பல கதைகள் உலவ விடப்பட்டன. அவற்றையெல்லாம் கேட்டு கேட்டு வளர்ந்த ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கு போவதை தங்கள் வாழ்நாள் இலட்சியமாக மாற்றிக் கொண்டார்கள். அவர்களில் ஒருவர் எஸ்டெவா ட காமா. போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இவர், தன் வாழ்நாளில் இந்தியாவிற்கு ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும் என்று தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். ஆனால் அதை நிறைவேற்றிக் காட்டியது இவரது மூன்றாவது மகன் வாஸ்கோ ட காமா.

சிறுவயதிலிருந்து தந்தையின் கனவை அருகிலிருந்து பார்த்த வாஸ்கோடகாமா காலப்போக்கில் அவரது கனவை தன் கனவாக மாற்றிக் கொண்டார். இந்திய வணிகர்கள் ஐரோப்பாவிற்கு வருவதற்கு பிரச்சினைகள் எதுவும் இல்லை. ஆப்கானிஸ்தான், பெர்ஷியா, அரேபியா, எகிப்து, துருக்கி ஆகிய பகுதிகளை கடந்து நிலம் மார்க்கமாக ஐரோப்பாவை வந்தடைந்தனர். சிலர் கடல் வழியாகவும் வந்தனர். அரபிக்கடல், செங்கடல் மத்திய தரைக்கடல் என்று அவர்களுக்கென்று ஒரு வழித்தடம் இருந்தது. இதில் சிக்கல் என்னவென்றால் இந்த வழிகள் அனைத்தும் அப்போது அரபு நாடுகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஐரோப்பிய கிறிஸ்தவர்களுக்கும், அரபு நாடுகளின் முஸ்லிம்களுக்கும் இடையில் இருந்த நீண்டகால பகை காரணமாக இந்த வழித் தடங்கள் ஐரோப்பியர்களுக்கு தடை செய்யப்பட்டிருந்தன.

எனவே புதிய வழியை கண்டுபிடிக்கிறேன் என்று களத்தில் இறங்கினார் வாஸ்கோடகாமா. வரைபடங்களை சேகரித்து கொண்டார். திசைகாட்டும் கருவிகளையும் எடுத்துக் கொண்டார். ஜூலை 8, 1497 அன்று போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் இருந்து வாஸ்கோடகாமா தனது முதல் இந்திய கடல் பயணத்தை ஆரம்பித்தார். 200 டன்கள் கொண்ட மொத்தம் 4 கப்பல்கள். அதில் வாஸ்கோடகாமா பயணம் செய்த கப்பலின் பெயர் செயின்ட் கேப்ரியல். இரண்டாவது கப்பலை அவரது சகோதரர் செலுத்த, மூன்றாவது கப்பலில் பணியாளர்களும், நான்காவது கப்பல் சரக்குக் கப்பலாகவும் புறப்பட்டது. மொத்தம் 170 பேர் இந்தப் பயணத்தில் ஈடுபட்டிருந்தனர். நீண்ட பயணம் என்பதால் இடையில் தென்பட்ட நிலப்பகுதிகளில் சிறிய ஓய்வு எடுத்துக் கொண்டனர்.

தங்களுக்கு தேவையான பொருட்களையும் நிரப்பிக் கொண்டனர். சில இடங்களில் பண்டமாற்று முறைகளில் பொருட்களை வாங்கிக் கொண்டனர். அட்லாண்டிக் கடலில் மிக நீண்ட பயணம் தொடங்கியது. நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மூன்று மாதங்களாக கடல், கடல், கடல் என கரையையே காண முடியவில்லை. இந்த சூழலில் 10,000 கிலோ மீட்டர் கடந்த பிறகு ஒரு துண்டு நிலம் தென்பட்டது. அது தென்னாப்பிரிக்கா. மீண்டும் தன் பயணத்தை தொடங்கினார் வாஸ்கோடகாமா. தெற்கு பகுதியில் இருந்த நன்னம்பிக்கை முனை வழியாக கப்பலை . ஆப்பிரிக்காவை ஒட்டியபடியே கீழே இறங்கி அப்படியே மேலே ஏறத் தொடங்கினார்கள்.

இந்த சூழலில் கென்யாவை அடைந்தார்கள். அங்கிருந்து இந்திய பெருங்கடலில் தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். உடன் வந்தவர்கள் துவண்டு போயினர். திரும்பிப் போய்விடலாம் என்று நினைத்தனர். நோய்வாய்ப்பட்டு பலர் இறந்து போயினர். ஓரிடத்தில் சரக்கு கப்பல் முழுமையாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. கொண்டுவந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் வீணாயின. ஆனால் மன உறுதியுடன் வாஸ்கோடகாமா தனது பயணத்தை தொடர்ந்தார். அரபிக்கடல் வந்தது. வாஸ்கோடகாமாவின் கண்கள் கரையை தேடியது.

ஒரு கட்டத்தில் அவருக்கு சிறிய சந்தேகம் ஏற்படத் தொடங்கியது. இதுவரை யாரும் சாதிக்காததை தன்னால் சாதிக்க முடியுமா? தனது முயற்சிகள் அனைத்தும் வீணாகி விடுமோ? என்றெல்லாம் எண்ணத் தொடங்கினார். ஆனால் தனது நீண்ட தேடலுக்கு விடை கிடைத்தது. மே 20, 1498 அன்று கரை தென்பட்டது. அனைவரும் கீழே இறங்கினர். சிலரை அனுப்பி இது எந்த இடம்? என்று கேட்டு வரச் சொன்னார். அப்படி சென்றவர்கள் திரும்பி வந்து கூறிய பெயர் "கோழிக்கோடு". கேரளாவிற்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். இந்தியாவை அடைந்துவிட்டார்கள். வாஸ்கோடகாமா இந்தியாவை கண்டுபிடித்து விட்டார். வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை பிடித்து விட்டார். வாஸ்கோடகாமாவின் முகம் மலர்ந்தது.

மருதன் எழுதிய "கடல் பயணங்கள்" என்ற புத்தகத்தில் இருந்து...

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post