இசைப்போராளி

இசையும், கால்பந்தும் வாழ்க்கையின் பிரதானமாக இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். பிடித்த இசையை கேட்டு உற்சாகம் பெறும் போதும், கோல்களால் திருப்புமுனை ஏற்படுத்தும் கால்பந்து ஆட்டங்களை கண்டு மெய்சிலிர்க்கும் போதும் இப்படியொரு உணர்வு பலமுறை வந்திருக்கிறது. அப்படி தனது வாழ்க்கையை இசையாகவும், ஓய்வில் கால்பந்தை ஆடிக் களிப்பவராகவும் மாற்றிக் கொண்டவர் பாப் மார்லி. உலக இளைஞர்களால் பெரிதும் விரும்பப்படும் போராளியாக இருப்பவர் சே குவேரா. இவருக்கு அடுத்த இடத்தில் கொண்டாடப்படுபவர் தான் இந்த பாப் மார்லி. இவர்களை படிக்க வைப்பதற்கான வேலைகளை செய்யாமல், வெறுமனே வர்த்தக குறியீடாக மாற்றி இளைஞர்களின் டி-ஷர்ட்களில் மட்டும் வலம் வரும்படி நமது முதலாளித்துவ சமூகம் மாற்றி அமைத்திருக்கிறது.

வெகு சிலரே இவர்களை ஆத்மார்த்தமாக மனதில் கொண்டு அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாப் மார்லியை பற்றி எனக்கு பெரிதாக அறிமுகம் கிடையாது. எல்லோரையும் போல நண்பர்களின் டி-ஷர்ட்களிலும், புரொஃபைல் படங்களிலும் பார்த்திருக்கிறேன். சமீபத்தில் நான் பார்த்த ஆவணப் படம், இவரைப் பற்றிய தேடலை என்னுள் அதிகப்படுத்தியது. சே குவேரா துப்பாக்கி ஏந்திய போராளி என்றால், பாப் மார்லி ரெகே வகை இசையை ஏந்திய இசைப் போராளி. ஜமைக்காவில் அடித்தட்டு குடும்பத்தில் பிறந்த இவர், அந்நாட்டு மக்கள் இசையை பெரிதும் விரும்பினார்.

கிங்ஸ்டன் நகரின் ட்ரெஞ்ச்டவுன் பகுதிக்கு குடியேறிய போது தான், இவரது வாழ்க்கை பெரிதும் மாறியது. சமூகத்தின் ஒடுக்குமுறை, வன்முறை, ஏகாதிபத்தியத்தை புரிந்து கொண்டார். ஜமைக்காவின் பாரம்பரிய ரெகே இசையை தனக்கானதாக எடுத்துக் கொண்டார். தனது நண்பர்களுடன் சேர்ந்து “தி வெய்லர்ஸ்” இசைக் குழுவை உருவாக்கி உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். ’ராஸ்டாஃபரி’ இயக்கத்தின் பங்கெடுப்பால் வெட்டப்படாத தலைமுடியும், கஞ்சா பழக்கமும் ஒட்டிக் கொண்டது. பாப் மார்லியின் இசை வன்முறைக்கு, ஒடுக்குமுறைக்கு, ஏகாதிபத்தியத்திற்கு எதிரானதாக உலகம் முழுவதும் ஒலித்தது.

36 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் இன்றும் தனது புரட்சிகர வரிகளுடன் இசையால் உலகையே கட்டி போட்டு வைத்திருந்தார். இவருடைய ”Get Up Stand UP” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதாவது, ”உரிமைகளுக்காக எழுந்து நில். வானத்தில் இருந்து கடவுள் வந்து உன் துக்கங்களை நீக்கி சந்தோஷம் வழங்குவார் என்று கனவு கண்டிராதே. உங்கள் வாழ்க்கையை இந்த பூமியில் தான் தேட வேண்டும். அப்போது தான் நீங்கள் வெளிச்சத்தை காண்பீர்கள். எழுந்து நில்” என்று பொருள்படும் படியான பாடல். சமூக நலனுக்காக களப்பணி ஆற்றும் ஒவ்வொரு தோழர்களுக்கும் இந்தப் பாடல் பெரிதும் பொருந்தும் என்றே எண்ணத் தோன்றுகிறது.

 

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post