சிறுவயதில் முறுக்கிய மீசையும், தலைப் பாகையும், கறுப்புநிற கோட்டும், வெள்ளைநிற கால் சட்டையும், கையில் ஒரு கம்புமாக பாரதியார் நமக்கு அறிமுகமாகி இருப்பார். அவரது வாழ்க்கை வரலாறும், சிறுசிறு கவிதைகளும் மதிப்பெண்களுக்காக நம் சிந்தனையில் நிரம்பி சென்றிருக்கும். உண்மையில் பாரதி நமக்குள் ஐக்கியமாகும் தருணம் பின்னாளில் தான் வரும் என்று நமக்கு அப்போது தெரியாது. நாம் சோகத்தின் உச்சத்தில் இருக்கும் போதும், தோல்விகளால் துவண்டு கிடக்கும் போது, சமூக அடுக்குகளால் ஒடுக்கப்படும் போது, நமது திறமைகளை இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளாத போது, விரட்டி அடிக்க அதிகாரம் நமக்கு பயம் காட்டும் போது நிச்சயம் பாரதி நமக்காக வந்து நிற்பார்.
இத்தகைய தருணங்களில் அவரது கவிதைகளை படித்துப் பழகுங்கள். நிச்சயம் புது ரத்தம் பாய்ச்சியதை போன்ற உணர்வு பிறக்கும். பாரதியை மிகவும் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் அவரது பிராமணச் சாயல் முதல் பாண்டிச்சேரியில் மறைந்து வாழ்ந்தது வரை பல்வேறு விமர்சனங்கள் எழலாம். ஆனால் பாரதி தமிழர்களின் மகாகவி என்பதில் சந்தேகமே இல்லை என்பது வாதம். மேற்குறிப்பிட்ட சிக்கலான சூழல்களை சந்திக்கும் போது பாரதியின் கவிதைகள் எனக்கு புத்துணர்ச்சி அளித்திருக்கிறது. வேலையிழந்து தவித்த போது, வேலை தேடி அலைந்த போது, பசியால் வயிறு வாடிய போது, சரியான சம்பளம் கிடைக்காமல் தவித்த போது, சமூகப் பிரச்சினைகளை கண்டு மனம் வருந்திய போது பாரதி என்னுடனே பயணித்திருக்கிறார்.
”நல்லதோர் வீணைசெய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?” என்ற பாடலில் துயரத்தை தாங்கும் மனதை அளித்திருப்பார். ”கேளடா மானிட வாழ்வில் கீழோர் மேலோர் இல்லை” என்ற பாடலில் பொதுவுடைமை பேசியிருப்பார். ”நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?” என்ற பாடலில் இதோ மீண்டு வந்துவிட்டேன் என்று உணர்வை வாரி வழங்குவார். ”அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே” என்ற பாடலில் அளவில்லா தைரியம் ஊட்டியிருப்பார்.
”தனி ஒருவனுக்கு உணவில்லை எனில், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்ற பாடலில் நமக்கான இந்த வாழ்வு ஒட்டுமொத்த சமூகத்திற்கானது. அனைத்து மக்களுக்காகவும் சிந்தி. அனைவருக்காகவும் உழை என்று உத்வேகம் கொடுத்திருப்பார். இவ்வாறு பிடித்த பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம். பாரதியை பற்றியோ, அவரது பாடல்களை பற்றியோ நான் புரிந்து கொண்ட விதம் தவறாக இருக்கலாம். அதன் வழியே என் அடுத்தகட்ட சிந்தனைகளும், செயல்பாடுகளும் ஒருபோதும் தவறாக இருக்காது என்பதே என் எண்ணம். பாரதியை படியுங்கள்...
Tags:
சமூகம்