தொழிலாளர்கள் நலனுக்கான அக்கினிக் குரலாய், எழுத்து, பேச்சு, செயல்பாடுகளில் பொதுவுடைமை பேசும் தோழராய் என்னுள் ஆழப் புதைந்தவர் தோழர் ஹசீப். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் புதியதாக தொடங்கவிருந்த ஊடகம் ஒன்றினுள் நான் பணியில் சேர்ந்த தருணம். அப்போது, ”ஹசீப் அண்ணா! இங்க வரப் போறாங்களாம். தெரியுமா?” என்று பலரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்கு முன் அவரது அறிமுகம் எனக்கு இல்லை. அவரிடம் என்னென்ன விஷயங்களை கற்றுக் கொள்ளலாம் என்று பலரும் பட்டியல் போட்டுக் கொண்டிருந்தனர். அவருடன் ஒவ்வொருவராக செய்தி சேகரிக்க அனுப்பி வைத்து பயிற்சி கொடுக்கலாம் என்றும் கூறினர். அடுத்த சில வாரங்களில் தோழர் ஹசீப் வந்து சேர்ந்து எங்களில் ஒருவராகிப் போனார். அவரின் புன்னகை எப்போதும் என்னை வசீகரிக்கும். அவரது நிதானமான பேச்சும், தகவல்களை சேகரிக்கும் விதமும், சக செய்தியாளர்கள் மற்றும் மூத்த ஆசிரியர்களிடம் பேசும் பாங்கும் கவனிக்க வைத்தன. ஒவ்வொரு செய்தியையும் எப்படி சேகரிப்பது, எழுதுவது, அதை மக்களுக்கு எப்படி வழங்குவது என அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்திருக்கிறேன். அந்த சமயத்தில் விவாத நிகழ்ச்சி ஒன்றிற்கு கண்டனம் தெரிவித்து, சில மர்ம நபர்கள் புதிய தலைமுறை அலுவலகத்தின் மீது அதிகாலை நேரத்தில் டிபன் பாக்ஸ் குண்டு வீசிச் சென்றிருந்தனர். அதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒருவராய் தோழர் ஹசீப் இருந்தார். அப்போது தான் அவரது போராட்டக் குணமும், களச் செயல்பாடுகளும் எனக்கு தெரிய ஆரம்பித்தன. இதையடுத்து படிப்படியாக அவருடனான நட்பு அதிகமானது.
வெறுமனே எழுத்தில் மட்டுமே புரட்சி செய்து கொண்டிருந்த எங்களுக்கு, களப்பணி எவ்வளவு அவசியம் என்பதை அடிக்கடி நிரூபித்துக் காட்டியவர். நாங்களெல்லாம் சமூக வலைதளங்களில் புரட்சிகரமான வசனங்களை பதிவிட்டுக் கொண்டிருக்கையில், அவர் அதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருப்பார். இவரது விவாத நிகழ்ச்சி என்றால் எனக்கு கொள்ளைப் பிரியம். இதற்காகவே வேலை முடிந்த பின்னரும் தோழர் ஹசீபின் நிகழ்ச்சிக்காக காத்திருப்பேன். சில சமயங்களில் அவரது Run Down-க்காக சில விஷயங்களை செய்யுமாறு என்னிடம் அறிவுறுத்தியிருக்கிறார். அவரிடம் நிறைய பேச வேண்டும் என்பதற்காகவே, அவர் இருக்கும் இடங்களை தேடிக் கொண்டே இருப்பேன். நான் அதிகம் பேசுவதில்லை என்றாலும், அவரைப் பேச வைத்து கேட்பேன். நான் நன்கு அறிமுகமான பிறகு, தம்பி என்று பொதுப்படையான அடையாளத்தை எனக்கு அளித்தார். எப்போது பார்த்தாலும், ”வா தம்பி, எப்படி இருக்கிறாய்? வேலை எப்படி சென்று கொண்டிருக்கிறது?” என நலம் விசாரிப்பார். பணியை தாண்டி கலகலப்பூட்டும் விஷயங்களை பேசி மகிழ்ச்சிகரமாகவும் சில பொழுதுகளை கழித்திருக்கிறோம். அந்த சமயத்தில் தோழர் ஹசீப் உள்ளிட்ட ஊடகவியாளர்கள் ஒன்றிணைந்து ”மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்” (Center of Media Persons for Change - CMPC) என்ற பெயரில் சங்கம் அமைத்து வேலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. அதில் என்னையும் சேர்த்து கொண்டார். அதன் நோக்கம், செயல்பாடுகள் குறித்து விரிவாக பலமுறை பேசியிருக்கிறார். ”எப்போதும் சங்கம் அமைத்து செயல்படு. உரிமைகளுக்காக குரல் கொடு. சக தொழிலாளர்களின் நலனுக்காக நில்” என்ற தோழர் ஹசீபின் வார்த்தைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை.
இவர் பற்றிய நினைவுகள் வரும் போதெல்லாம் மேற்கண்ட வாசகம் தான் முன்னால் வந்து நிற்கும். சங்கத்தின் ஒவ்வொரு வாராந்திர கூட்டத்திற்கும் எனக்கு மறக்காமல் அழைப்பு விடுப்பார். அப்போது, ஏதேனும் ஒரு தலைப்பில் அனைவரும் கலந்துரையாடுவர். அந்த கூட்டங்கள் மதிப்புமிக்க பல புதிய கருத்துகளை பெறும் பயிற்சிக் கூடமாய் விளங்கின. சில சமயங்களில் நண்பர்களிடமும் கேட்டு தெரிந்திருக்கிறேன். ”இந்த வாரத்திற்கு என்ன தலைப்பு? அதில் தோழர் ஹசீப் பேசியது என்ன?” என்று கேட்டுள்ளேன். இந்த சங்கத்தின் மூலம் நடத்தப்படும் பொது நிகழ்ச்சிகளுக்கும் என்னை தவறாமல் அழைத்திருக்கிறார். நானும் முடிந்தவரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறேன். சில விடுமுறை நாட்களில் மார்க்சிய வகுப்புகள் எடுத்து வந்துள்ளார். அதுபற்றிய தகவல்களை நண்பர்கள் பகிர்ந்து கொள்வர். அவற்றில் நான் கலந்து கொள்ள முடியவில்லையே என்று ஏங்கியிருக்கிறேன். CMPC மூலம் சக ஊடகவியாளர்கள் நலனுக்காக செய்தது ஏராளம் என்று தான் சொல்ல வேண்டும். சம்பளம் தராமல் இழுத்தடித்தது, காரணமே இன்றி வேலையை விட்டு வெளியேற்றியது, ஊடக நிறுவனத்தையே திடீரென மூடிவிட்டு அதன் ஊழியர்களை நடுத்தெருவில் நிற்க வைத்தது, எதிர்பாராமல் நிகழ்ந்த ஊடகவியலாளர்கள் உயிரிழப்புகள் என பல்வேறு நிகழ்வுகளில் நியாயமும், இழப்பீடும், நிவாரணமும் பெற்றுத் தந்திருக்கின்றனர். ஒருமுறை நாங்கள் பணியாற்றிய நிறுவனத்தில் திடீரென சில மூத்த பத்திரிகையாளர்களை நிர்வாகம் வெளியேற்றிய நிகழ்வு எங்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. நாங்கள் துவண்டு கிடந்த சமயத்தில் ஊடக நிர்வாகத்திடம் சென்று தோழர் ஹசீப் அவர்கள் நியாயம் கேட்டார். ஊழியர்கள் விஷயத்தில் நிர்வாகம் செய்தது தவறு என்று மிகவும் கண்டிப்புடன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
இவற்றை நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். ஒருசமயம் ”குஜராத் கோப்புகள்” (Gujarat Files) என்ற பெயரில் பத்திரிகையாளர் ரானா ஆயூப் எழுதிய புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நான் கலந்து கொள்ள செல்கையில், தோழர் ஹசீபிடம் தகவல் தெரிவித்தேன். அதற்கு, ”அந்த புத்தகம் கிடைத்தால் வாங்கி வா” என்றார். அவருக்காக நான் வாங்கிய முதல் புத்தகம் அதுவே. அதை அவருக்கு அளித்த தருணம் மிகவும் மகிழ்ச்சிகரமானது. ஹசீப் அண்ணாவிற்கு ஒரு புத்தகத்தை பரிசளித்துவிட்டேன் என்று மனம் துள்ளல் போட்டது. இவரைச் சுற்றி எப்போதும் ஒரு புத்தகம் வட்டமிட்டுக் கொண்டே இருக்கும். இல்லையெனில் ஏதேனும் ஒரு புத்தகத்தை பற்றிய விவாதம் சென்று கொண்டே இருக்கும். எனக்கும் சில புத்தகங்களை பரிந்துரை செய்திருக்கிறார். சென்னை புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வாங்கிய சில தருணங்களில் அந்தப் புத்தகங்களை நான் அவரிடம் காண்பித்திருக்கிறேன். அவற்றைப் பார்த்து விட்டு எவை முக்கியமான புத்தகங்கள்? தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என அறிவுரைகள் கூறுவார். புதிய ஊடகமொன்றின் தொடக்கத்தில் அவருடன் என்னையும் அழைத்திருக்கிறார். ஆனால் நான் வேறொரு நிறுவனத்தில் சேர முடிவு செய்திருந்ததால், அந்த வாய்ப்பை பின்னர் பயன்படுத்திக் கொள்வதாக தெரிவித்துவிட்டேன். கடந்த ஆண்டு தோழர் ஹசீபிற்கு எதிராக பெரும் சர்ச்சை வெடித்த போது நான் அதிர்ந்து போனேன். அவரை தவறாக சித்தரித்து அவதூறுகளை கிளப்பியிருந்தனர். இதனால் தான் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து அவர் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன்பின்னர் தன் பக்கத்து நியாயத்தை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக உலகிற்கு எடுத்துரைத்தார். அப்போது தோழர் ஹசீப் மீதான களங்கத்தை போக்க #StandwithJournalistHaseef என்ற கோஷத்துடன் சமூக வலைதளங்களில் சக ஊடகவியாளர்களாகிய நாங்கள் முழங்கியது உணர்ச்சி மிக்க தருணம்.
தற்போது ”அரண் செய்” என்ற பெயரில் சுதந்தரமாக செயல்படும் ஊடகத்தை உருவாக்கி அதை வழிநடத்தி வருகிறார். இந்த ஊடகத்தின் மூலம் சரியான தகவல்களை, புரிந்து கொள்ள வேண்டிய அரசியலை, ஏமாற்றும் அரசு எது? அரசியல்வாதிகள் யார்? உள்ளிட்டவற்றை மக்களிடம் கொண்டு செல்லும் பணியை தீவிரமாக செய்து கொண்டிருக்கிறார். அவரது பணி மென்மேலும் சிறக்க வேண்டும் என்பது என்னை போன்ற ஊடகவியலாளர்கள் மட்டுமின்றி, வெகுஜன மக்களின் குரலாகவும் இருக்கும். சுதந்திரமான அவரது ஊடகத்திற்கு நம்மால் இயன்ற ஒத்துழைப்பை நாம் வழங்கியே ஆக வேண்டும். பொதுமக்களும் இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சமீபத்தில் மார்க்சியத்தை எளிய முறையில் புரிந்து கொள்ளும் புத்தகம் ஒன்றை தோழர் ஹசீப் எழுதி வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக Club House-ல் நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டு தோழர் ஹசீபின் பேச்சை கவனித்தேன். ஆழ்ந்த பொருள் கொண்டதாய் தொழிலாளர்கள் மீதான சுரண்டல் குறித்து சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் பேசினார். அதேபாணியில் தான் புத்தகத்தையும் எழுதியிருப்பதாக குறிப்பிட்டார். ”பொதுவாக மார்க்சியம் குறித்த புத்தகங்கள் வாசகர்களின் புரிந்து கொள்ளும் திறனில் இருந்து வெகுதொலைவில் இருப்பதே, அதன் உள்ளாக்கம் பலரை சென்றடையாததற்கு காரணம். அதிலும் இளைஞர்களுக்கு கொஞ்சம் கூட வசப்படவில்லை. இதனால் தான் நம் மண்ணில் மார்க்சியம் எடுபடாமல் போய்விட்டதோ என்று எண்ணத் தோன்றும். அந்த விஷயத்தை நாம் உடைக்க வேண்டும். அதன் முதல்படியாக தான் இந்த புத்தகம்” என்று குறிப்பிட்டார். அந்த புத்தகத்திற்காக நான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் மிக அருகில் இருந்த களப் போராளியாகவே தோழர் ஹசீப் அவர்களை பார்க்கிறேன். அவரிடம் இருந்து நான் கற்றுதும், பெற்றதும் ஏராளம். இது அடுத்து வரும் நாட்களிலும் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன். இவரிடம் இருந்து களப்பணிக்கான உந்துதலை தற்போதும் பெற்றுக் கொண்டே இருக்கிறேன். அது செயல் வடிவம் பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றே நினைக்கிறேன்.
Tags:
நான் படித்த மனிதர்கள்