ஆசிரியராக நான்

பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக நாம் பெரிதும் நம்பக் கூடியவர்கள் ஆசிரியர்கள். வெறுமனே பாடம் நடத்தி விட்டால் மட்டும் மாணவர்கள் மனதில் இடம்பிடித்து விட முடியாது. அதையும் தாண்டி அவர்களின் வயதிற்கு ஏற்ப இறங்கி வர வேண்டும். புரிதலுக்கு ஏற்ப சொல்லிக் கொடுக்க வேண்டும். குடும்ப உறவுகளை விசாரித்தல், தற்கால நடைமுறை வாழ்க்கையை கற்றுத் தருதல், சவால்களை சமாளிக்க பழக்குதல் என பலவற்றை சொல்லித் தர வேண்டும். அப்படியொரு ஆசிரியரை தான் மாணவர்களால் கொண்டாட முடியும். எனக்கு முதல் வகுப்பு எடுத்த வெண்ணிலா ஆசிரியை முதல் 12ஆம் வகுப்பு எடுத்த துரைசாமி ஆசிரியர் வரை பலர் என்னை கவர்ந்திருக்கிறார்கள். அவர்களை உள்வாங்கிக் கொண்டு நான் ஆசிரியராக வாழ்ந்து காட்டிய தருணங்களை என்றுமே மறக்க முடியாது. ஆசிரியராக என்னை முதன்முதலில் வரவேற்றது கெங்கவல்லி அரசு தொடக்கப் பள்ளி. அதன்பிறகு சார்வாய் புதூர் அரசு நடுநிலைப் பள்ளி, தேவியாக்குறிச்சி அரசு தொடக்கப் பள்ளி, தேவியாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளி. இந்த நான்கு இடங்களும், நான் நடத்திய டியூசனிலும் தான் முழுமையான ஆசிரியராக இருந்திருக்கிறேன்.
வெறுமனே ஆசிரியர் என்று சொல்வதை விட ஒரு தோழனாக வாழ்த்திருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும். தொடக்கத்தில் மாணவர்களை சற்றே தொலைவில் இருந்து தான் கவனித்தேன். அதன்பிறகு தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் மிகவும் சகஜமாக மாணவர்களுடன் ஓடி, ஆடி விளையாடி, கதைகள் பேசி மகிழ்வதைக் கண்டு உத்வேகம் பெற்றேன். இதையடுத்து புதுரத்தம் பாய்ச்சியதைப் போன்ற உணர்வு. என்னை மெருகேற்றிக் கொண்டேன். ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களை சிரிக்க வைக்க நிறைய விளையாட்டுத் தனங்களை செய்திருக்கிறேன். நகைச்சுவை வெடிகளை கொளுத்தி போட்டிருக்கிறேன். எனது முகத்தில் நவரசத்தையும் கொண்டு வந்து வயிறு வலிக்க சிரிக்க வைத்து ஆட்டம் போட வைத்திருக்கிறேன். நான் எடுக்கும் வகுப்பு மாணவர்கள் அனைவரும் என் ரசிகர்கள் ஆனார்கள். மேற்குறிப்பிட்ட பள்ளிகளின் நுழைவு வாயிலில் காலடி எடுத்து வைத்தால் போதும். யாராவது ஒரு மாணவர் கண்டு கொண்டால் அப்படியே ஒரு கூட்டம் ஓடிவந்து என்னைக் கட்டிக் கொள்ளும். இதனை தேவியாக்குறிச்சி அரசு தொடக்கப் பள்ளியில் திகட்ட திகட்ட அனுபவித்துள்ளேன்.
தேவியாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் இதேபோன்று சூழலை உருவாக்கி அங்கிருக்கும் ஆசிரியர்களை பிரமிக்க வைத்த தருணங்கள் ஏராளம். எனது வகுப்பில் எப்போதும் நகைச்சுவை கொந்தளிக்கும். கதைகள் விஸ்வரூபம் எடுக்கும். மாணவர்கள் என்னைச் சுற்றும் வண்டுகளாக மாறியிருப்பர். ஓய்வு நேரத்தில் வெளியில் செல்லும் போது கூட, ”எங்கள் வகுப்பிற்கு எப்ப வருவீர்கள். சீக்கிரம் வாங்க சார்” என்று கெஞ்ச வைத்திருக்கிறேன். அதன்பிறகு எனது வாழ்க்கை பாதை மாறியது. படிக்க நினைத்தது ஒன்று. கிடைத்த வாழ்க்கை வேறானது. சென்னையில் மேல்படிப்பிற்கு சென்ற போதும் விடுமுறை நாட்களில் தேவியாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு திரும்பி பாடம் நடத்தியிருக்கிறேன். வகுப்பறையில் ஆசிரியரில்லாமல் இருந்தால் போதும். உடனே அங்கு கால் பதித்துவிடுவேன். இந்த பசுமையான நினைவுகளில் நான் நடத்திய டியூசனை சொல்லியே ஆக வேண்டும். எங்கள் ஊரில் எனக்கு பெயர் பெற்றுத் தந்த விஷயம் இதுதான். நேற்று கூட டியூசன் எடுக்கிறீர்களா என்று கேட்ட அக்காக்களை, அம்மாக்களை பார்க்க முடிந்தது.
அந்த அளவிற்கு என்னுடைய டியூசனை எனக்கான உலகமாக கட்டமைத்திருந்தேன். இதில் நான் நடத்திய பாடங்களை விட, ஒவ்வொரு தேர்விலும் முந்தைய தேர்வை காட்டிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் புத்தகங்களை பரிசாக அளித்தது, இந்த புத்தகங்களை வாங்குவதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்றது, The Hindu செய்தித்தாளில் ஒவ்வொரு செவ்வாய் அன்றும் வெளியாகும் Young World சிறப்பு பிரதியை அலசி ஆராய்ந்தது, பொது அறிவு புத்தகங்களில் இருந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டது, மாணவர்களுக்கு அறிவுரைகள் கூற சிறு, சிறு கதைகள் எழுதியது, அணிகளாக பிரித்து போட்டிகள் நடத்தியது உள்ளிட்டவை தான் சிறப்புமிக்க தருணங்கள். நான் கல்லூரியில் படித்துக் கொண்டே டியூசன் நடத்தியதால், செல்லும் இடமெல்லாம் அதன் கதைகளையே கூறி தள்ளுவேன். இந்த விஷயங்கள் பலரின் மனதில் பதிந்துவிட்டதால் தற்போது கூட டியூசன் மாணவர்கள் எப்படி இருக்கின்றனர் என்றெல்லாம் என்னிடம் விசாரிப்பர். ஆசிரியராக எனது சில காலப் பணியானது, சுவையான உணவை திகட்ட திகட்ட உண்டது போல, இனிமையான இசையை கேட்டு கேட்டு மெய் மறந்தது போல, பிடித்த காட்சிகளை பார்த்து பார்த்து ரசித்தது போன்ற உலகத்தில் வாழ்ந்ததற்கு சமம்.


 

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

5 Comments

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post