என்னுடன் கல்லூரியில் உடன் படித்த நண்பரை நீண்ட நாட்களுக்கு பிறகு அழைக்க நேர்ந்தது. அவர் எங்கள் மாவட்டத்தின் சமூக பாதுகாப்பு துறையில் Child Protection Officerஆக பணியாற்றி வருகிறார். அவரது அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்திருக்கிறது. களப்பணியாகவும், அலுவலகப் பணியாகவும் கலந்தவாறான ஒரு வேலை. இவரது அனுபவங்களை கேட்டறிவதற்காக அழைத்திருந்தேன். அவர் சார்ந்த துறை, அதன் பணிகள், தனக்கான பொறுப்பு என எக்கச்சக்கமாய் கூறினார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பத்திரமாக அழைத்து வர வேண்டும். பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும். ஒருவேளை கொரோனா போன்ற பேரிடர்களால் பெற்றோர் உயிரிழந்து குழந்தைகள் அநாதையாகி விட்டால், அவர்களை மீட்டு தேவையான வசதிகளை செய்து தருவது, இந்த குழந்தைகளை அப்படியே விட்டு விடாமல் வாய்ப்பு கிடைப்பின் தத்து கொடுப்பது, உணவு, இருப்பிடம், படிப்பு உள்ளிட்டவற்றை பூர்த்தி செய்வது என செயல்பாடுகள் நீண்டு கொண்டே செல்கின்றன.
அதேபோல் குழந்தை தொழிலாளர்களாக இருப்பின், அதுபற்றிய புகார்கள் கிடைத்தால் உடனே நிகழ்விடத்திற்கு நேரில் சென்று மீட்பு நடவடிக்கைகளை எடுப்பது என சமூக அக்கறை கொண்ட பணியாக திகழ்கிறது. மேலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாலும் இதே மீட்பு நடவடிக்கைகள் தான். அதுமட்டுமின்றி ஏழ்மை நிலையில் தவிக்கும் பெற்றோர், தங்களின் பிள்ளைகளை வளர்க்க முடியவில்லை என்று கைவிடும் சூழல் ஏற்பட்டால், அதுபற்றிய தகவல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவிற்கு கட்டாயம் தெரிவிக்கப்பட வேண்டும். அந்த குழந்தைகளை பாதுகாக்க, வளர்க்க அரசு சீரிய பல திட்டங்களை போட்டு வைத்திருக்கிறது. கொத்தடிமைகளாக எங்கேயும் அனுப்பி வைத்து விடக் கூடாது. அதில் கவனமாக இருக்க வேண்டும். இதன்மூலம் என் நண்பருடைய வேலை எத்தகைய பளு நிறைந்தது. பொறுப்பு நிறைந்தது என்பதைப் புரிந்து கொண்டேன். இதை நான் மட்டும் தெரிந்து கொண்டால் சரியாக இருக்காது. நான் சார்ந்த சமூகமும் பயனடைய வேண்டும். இந்த விஷயங்களை தெரிந்து கொண்டு பாதிக்கப்படும் குழந்தைகள் எங்கேயாவது தென்பட்டால் உடனே 1098 என்ற எண்ணிற்கு அழைத்து தகவல் தெரிவித்து விடுங்கள்.
அதன்பிறகு அந்த குழந்தைகளுக்கு நிச்சயம் நல்வழி பிறக்கும் என்று நம்பலாம். என் நண்பர் கூறியதில் மிகவும் முக்கியமானதாக நான் உணர்ந்தது CARA. அதாவது மத்திய தத்தெடுப்பு வள ஆணையம் (Central Adoption Resource Authority) என்று பொருள்படுகிறது. இதைப் பற்றிய தேடலில் இறங்கிய போது அதற்கான இணையதளம் (cara.nic.in) கிடைத்தது. இந்த தளத்தில் குழந்தைகளை தத்தெடுப்பதற்கான அனைத்து விவரங்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக 4 வயது வரையிலான குழந்தைகளை தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்களின் மொத்த வயது அதிகபட்சம் 90ஆக இருக்க வேண்டும். ஒருவேளை 100 வரை இருந்தால் 4-8 வயது குழந்தைகளை தத்தெடுக்கலாம். அதுவே 110 வரை இருந்தால் 8-18 வயது குழந்தைகளை தத்தெடுக்கலாம். அதுமட்டுமின்றி தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளை கண்காணிக்கவும் உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தத்தெடுத்தல் தொடர்பான மத்திய அரசின் அறிவிப்பாணைகள் அவ்வப்போது இந்த தளத்தில் வெளியாகி வருகின்றன. எனவே குழந்தைகளை தத்தெடுக்க விரும்புவோர், இந்த தளத்தை நன்றாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
Tags:
சமூகம்