நவீனம் அசுரனாய் வளர்ந்து நிற்கும் இன்றைய காலகட்டத்தில் கடிதம் எழுதத் தெரியுமா? என்று கேட்டால் சிரிக்கத் தான் செய்வார்கள். Text, SMS, Voice Call, Video Call என தொழில்நுட்பங்கள் பிரம்மாண்டமாய் வளர்ந்துள்ளன. கண் இமைக்கும் நொடியில் உலகின் எந்தவொரு மூலையில் இருக்கும் நபரையும் தொடர்பு கொண்டுவிடலாம். ஆனால் ஒருகாலத்தில் கடிதம் மட்டுமே முதன்மையான தகவல் தொடர்பு சாதனமாக இருந்திருக்கிறது. இதை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் எத்தனை பேர் அனுபவித்திருக்கிறோம் என்பது தான் இங்கே கேள்வி. அத்தகைய பெரும் பேறு எனக்கு வாய்க்கப் பெற்றது.
4ஆம் வகுப்பில் இருந்து கடிதம் எழுதத் தொடங்கியதாக எனது நினைவு. அப்போது கடலூரில் இருந்த எனது சித்ரா அக்காவிற்கு எழுதியிருக்கிறேன். நாங்கள் வாழப்பாடியில் இருந்த தருணம். அடிக்கடி வாழப்பாடியில் இருந்து கடலூருக்கு கடிதங்கள் பறக்கும். எனது பிஞ்சு கைகளில் மெல்லிய பேனாவின் கைப்பிடித்து தள்ளாடும் பாட்டியின் நடையை போன்ற எனது எழுத்துகளால் எங்கள் வீட்டின் அன்பை அப்படியே வாரி இறைத்திருக்கிறேன். இத்தகைய செயலை பெற்றோர் தான் எனக்கு ஊக்கப்படுத்தினர். அதற்கு பதில் கடிதம் எப்போது வரும் என்ற காத்திருப்பிற்கு தனி சுகம்.
வந்தவுடன் பொறுமையாக எழுத்துக் கூட்டி படித்து அன்பை, அரவணைப்பை, அக்கறையை புரிந்து கொண்ட போது முகம் நிறைய புன்னகை பூத்திருக்கும். நாட்கள் வேகமாக ஓடின. எங்களின் இடங்கள் மாறின. பேனா இருந்த கைகளுக்கு செல்போன் வந்து சேர்ந்தது. நாள் கணக்கிற்கு பதிலாக நொடிப் பொழுதில் பதில்களை பெறத் தொடங்கிவிட்டோம். ஆனால் கடிதத்தின் மீதான எனது அன்பு குறையவே இல்லை. தற்போது நேரம் கிடைக்கவில்லை என்று கூட சொல்லலாம்.
ஆனால் கடிதம் எழுத இன்னும் ஆர்வம் குறையவில்லை. கடைசியாக 10 ஆண்டுகளுக்கு முன்பாக என்னிடம் படித்த மாணவர்களுக்கு சில கடிதங்களை எழுதியிருக்கிறேன். மீண்டும் அப்படியொரு வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன். நீங்களும் உங்கள் பிள்ளைகளுக்கு கடிதம் எழுதுங்கள். அதைப் படிக்க கற்றுக் கொடுங்கள். அவர்கள் எழுதப் பழகியவுடன் பதில் கடிதம் கேளுங்கள். பேனாக்கள் அன்பை பரிமாறும் கருவிகளாக நம்மை இன்பத்தில் ஆழ்த்தும். இன்று செப்டம்பர் 1 - உலகக் கடிதம் எழுதும் தினம்...
Tags:
சமூகம்