சென்னையில் ஒரு நாள்

சென்னையில் உள்ள பிரபல செய்தித் தொலைக்காட்சியில் பணியாற்றிய தருணம். பணி முடிந்து வள்ளுவர் கோட்டத்தில் இருந்து வேளச்சேரி செக்போஸ்டில் உள்ள எனது அறைக்கு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தேன். பேருந்து முழுவதும் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சின்னமலையில் பேருந்து நின்றது. பலரும் முண்டியடித்துக் கொண்டு பேருந்தில் ஏறினர். அப்போது கடைசியாக ஏறிய நபரால் மேலே ஏறி உள்ளே வர முடியவில்லை. அதற்குள் பேருந்து புறப்பட்டு விட்டது. ஓட்டுநர் பட்டனை அழுத்தியதும் தானியங்கி கதவுகள் மூடத் தொடங்கின. கடைசியாக நின்றிருந்த நபர் கதவுக்குள் மாட்டிக் கொண்டார்.

அவர் வலியில் கூச்சலிட சக பயணிகளும் குரல் கொடுக்க பேருந்து களேபரமானது. உடனே தகவலறிந்து பேருந்தை ஓட்டுநர் நிறுத்தினார். பின்னர் தானியங்கு கதவை திறந்துவிட்டார். அந்த நபர் சற்று ஏறி உள்ளே வந்தார். அப்போது பேருந்து நடத்துனர் டிக்கெட் வாங்குமாறு கேட்டார். அதற்கு அந்த பயணி கதவு இடுக்கில் ஒரு நபர் மாற்றிக் கொண்டது கூட தெரியாமல், என்னைய்யா பேருந்து ஓட்டுகிறார்கள்? உங்களுக்கெல்லாம் யார் வேலை கொடுத்தது? அவனவன் நாள் முழுவதும் உழைத்து, களைத்து, அசதியில் எப்படியாவது சீக்கிரம் வீடு போய் சேர்ந்து விட வேண்டுமென்று பேருந்தில் முண்டியடித்துக் கொண்டு ஏறி பயணம் செய்தால் இப்படியா செய்வது? உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா? என்று மிகவும் ஆத்திரத்துடன் கத்தினார்.

என்னால் டிக்கெட் வாங்க முடியாது. அந்த ஓட்டுநரை இங்கே வரச் சொல். அவர் வந்து இந்த விஷயத்திற்கு பதில் சொல்லட்டும் என்று அதட்டலாக கூறினார். நடத்துனர் எவ்வளவு வலியுறுத்தியும், அவர் டிக்கெட் வாங்கவே இல்லை. அந்த வலி அவருடைய மனதை மிகவும் காயப்படுத்தி இருந்தது. ஆம்! ஒரு சாமானியனின் குரல் இப்படித்தான் இருக்கும். ஒரு சராசரி குடிமகனின் அடிப்படையான விஷயங்கள் கூட நிறைவேறாத போது எழும் கோபம் மிகவும் உக்கிரமாகத் தான் இருக்கும். அரசும், அரசு ஊழியர்களும் குடிமக்களுக்காகத் தான் வேலை செய்கிறோம். அவர்களின் வரிப்பணத்தில் தான் சம்பளம் வாங்குகிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இதையடுத்து வேளச்சேரி செக்போஸ்ட் வந்தவுடன், பேருந்தில் இருந்து இறங்கி விட்டேன். அப்போது ஒரு பெண் இடுப்பில் கைக்குழந்தையுடன் வந்து ஏதாவது காசு இருந்தால் கொடுங்கள்.

குழந்தைக்கு பசிக்கிறது என்று கேட்டார். பொதுவாக இப்படி காசு கேட்பவர்களுக்கு நான் காசு கொடுப்பதில்லை. பெரிதாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் அதற்கான சூழல் இருக்காது. அதுவே சாப்பாடு, பசி என்று கேட்டால் மனம் இறங்கி விடும். இந்த தருணத்தில் அந்தப் பெண்ணிடம் சாப்பாடு வாங்கித் தருகிறேன். சாப்பிடுகிறீர்களா? என்று கேட்டேன். சரி என்று சொன்னார். அப்போ இங்கேயே காத்திருங்கள் வந்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டு, சற்று தொலைவில் இருந்த உணவகத்திற்கு விரைந்தேன். மூன்று பரோட்டாவும், இட்லியும் விரைவாக கட்டித் தருமாறு கூறினேன். கடை சற்று தொலைவில் இருந்ததால் திரும்ப சில நிமிடங்கள் ஆனது.

மிகவும் வேகமாக ஓடி வந்து, உணவு பொட்டலத்தை அந்த பெண்ணிடம் கொடுத்து விடலாம் என்று பார்த்தபோது அந்தப் பெண் இல்லை. மனம் காயம்பட்டது. உதவி செய்ய முன்வரும் போது அது சரியான நபர்களை சென்றடையவில்லை எனில் அதைவிட துயரம் வேறெதுவும் இல்லை. வருத்தத்துடன் அந்த உணவு பொட்டலத்துடன் அறைக்கு திரும்பி கொண்டிருந்தேன். எப்படியும் அறையில் சமைத்து வைத்திருப்பார்கள். இப்படி நான் உணவு வாங்கிக் கொண்டு சென்றால், அது மற்றவர்களுக்கு அசௌகரியமாக இருக்கும். இந்த எண்ண ஓட்டத்தில் சென்று கொண்டிருந்த போது, வழியில் ஒரு முதியவர் மிகவும் ஏக்கத்துடன் அமர்ந்திருந்தார். அவரிடம் சாப்பிட்டீர்களா? என்று கேட்டேன். அதற்கு இல்லை என்றார். நான் சாப்பாடு வாங்கி கொடுத்தால் சாப்பிடுவீர்களா? என்றேன். சரி என்றார். உடனே என்னிடம் இருந்து பொட்டலத்தை கொடுத்து விட்டு நடையைக் கட்டினேன். வருத்தம் சற்று தணிந்தது. இருப்பினும் உணவிற்காக இப்படி கையேந்தும் நபர்கள் எத்தனை பேர் இருப்பார்களோ? அவர்களுக்கு எல்லாம் யார் பசியாற்றுவார்கள் என்ற கேள்வி என்னுள் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

5 Comments

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post