கிர்கிஸ் சோவியத் சோசியலிஸ்ட் ரிபப்ளிக் நாட்டின் ’குர்க்குரீ’ என்ற கிராமத்தில் 1924 முதல் 1950 வரை நடந்த நிகழ்வுகளாக கதை அமையப் பெற்றுள்ளது. ரஷ்யாவில் உள்நாட்டு போர் முடிந்த தருணம். படிப்பு வாசனையே இல்லாத குர்க்குரீ கிராமத்திற்கு முன்னாள் செஞ்சேனை வீரரும், இளைஞர் கம்யூனிஸ்ட்டில் தீவிர களப் பணியாற்றி வந்தவருமான தூய்ஷன் என்பவரை ஆசிரியராக அனுப்பி வைக்கிறது அப்போதைய லெனின் அரசாங்கம். கதை நெடுகிலும் இயற்கையின் வர்ணனைகளுக்கு பஞ்சமில்லை. அதனோடு கல்வி ஏன் தேவை? லெனின் அரசாங்கம் எதை விரும்புகிறது?
கல்வி கற்காமல் போனால் என்னவாகும்? என்பதையெல்லாம் ஆழமாக பதிவு செய்கிறது. தூய்ஷனின் மாணவியாக வரும் அல்டினாய் தான் இந்த கதையை தாங்கி பிடிக்கிறாள். அவள் தன் வரலாற்றை பதிவு செய்வதன் மூலம் ஆசிரியர் தூய்ஷன் எவ்வளவு மகத்தானவர் என்பதை இவ்வுலகிற்கு தெரியப்படுத்துகிறார். அவளது வலிகளை, வேதனைகளை, கனவுகளை நிறைவேற்ற போராடிய ஆசிரியர் தூய்ஷனின் செயல் போற்றுதலுக்குரியது.
கதையின் ஆணிவேராய் சொல்லப்படும் இரண்டு பாப்ளார் மரங்கள் இன்னும் என் கண்களை விட்டு அகலவில்லை. எனக்குள் மிச்சமிருக்கும் ஆசிரிய மனப்பான்மையை தூய்ஷன் மேலும் தூண்டுவிடுகிறார். தூய்ஷனை போன்ற பொதுநலவாதிகள் எல்லா நாடுகளிலும், எல்லா காலங்களிலும் பிறந்து கொண்டே இருக்க வேண்டும். இயற்கை எழில் கொஞ்சும் குர்க்குரீ கிராமத்தின் வாயிலான எனது படிப்பினை என்றென்றும் பசுமையான நினைவுகள்...