அரசியல் எனக்கும் பிடிக்கும்

 

நம் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் பல்வேறு முடிவுகளை எடுப்பது அரசியல். அதைப் பற்றி அக்கறை இல்லாமல் இருப்பது எப்படி சரியாகும்? உன்னை என்ன செய்யிறதுன்னு அங்க நாலு பேர் உட்கார்ந்து முடிவு செஞ்சிட்டு இருக்கான். நீ அதைப் பத்திக் கவலைப்படாம இருப்பியா? என்று மிகவும் காட்டமாகவே கேள்வி எழுப்புகிறது இந்தப் புத்தகம். அரசு பிறந்த கதை, எத்தனை விதமான அரசுகள் இருக்கின்றன, அதில் சோசிலிஷ அரசு எப்படியிருக்கும், மக்களாட்சி என்றால் என்ன, அந்தர்பல்டி அடிக்கும் ஆளும் அரசு, கலாச்சார அரசியல் என பல்வேறு விஷயங்களை இந்தப் புத்தகம் அலசுகிறது. 


இடதுசாரி அரசியல்


மக்கள் என்று பொதுப்படையாக பேசுவது தவறு. ஏனெனில் தொழிலாளர்களும், விவசாயிகளும் ஆகிய பாட்டாளி வர்க்கம் என்பது வேறு. இந்த பாட்டாளிகளின் உழைப்பினால் சுகமாக வாழும் முதலாளி வர்க்கம் என்பது வேறு. இதை உலகிற்கு புரியவைத்ததில் கார்ல் மார்க்ஸின் பங்கு அளப்பரியது. முதலாளிகள் எப்படி முதலாளிகள் ஆனார்கள் என்கிற கதையை புள்ளி விவரத்தோடு "மூலதனம்" என்ற புத்தகத்தில் விரிவாக எழுதினார். இதன்மூலம் மூலதனம் என்பது எப்படி வந்தது? லாபம் என்றால் என்ன? என்பதையெல்லாம் தொழிலாளர்கள் புரிந்து கொண்டார்கள். லாபத்தின் அடிப்படை வேலை நேரத்தில் தான் அடங்கி இருக்கிறது என்பதை உணர்ந்தனர். எட்டு மணி நேரம்தான் வேலை செய்வோம் என்று முதலாளிகளுடன் தகராறு செய்ய தொடங்கினர். முதலாளி கொடுக்குற சம்பளத்துக்கு நாலு மணி நேரம் வேலை செய்தால் போதும். ஆனால் தொழிலாளி குறைந்தது 8 மணி நேரமாவது வேலை செய்கிறான். நாலு மணி நேரம் போக மிச்சம் தொழிலாளி வேலை செய்யும் நேரத்தில் உருவாகும் பொருள் தான் "லாபம்" என்ற பெயரில் முதலாளிக்கு கிடைக்கிறது. இதைத்தான் மார்க்ஸ் "உபரி உழைப்பு" என்றார். மூலதனம், லாபம் என்பதெல்லாம் தொழிலாளி வர்க்கத்தை ஏமாற்ற முதலாளி வர்க்கம் காலம் காலமாக செய்து வரும் ஏமாற்று வேலை என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கினார். அதன் பிறகான உலக அரசியல் முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையேயான பிரச்சினையாக மாறிவிட்டது. கட்சி அரசியல் எல்லாம் பின்னுக்கு போய்விட்டது.


ஓட்டுப் போடும் அதிகாரம்


சோழப் பேரரசில் குடவோலை முறையில் கிராம சபைகள் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி எல்லோரும் ஆகா ஓகோ என்று பேசுவார்கள். அந்தக் காலத்திலேயே தமிழன் ஓட்டுப் போட்டு கிராம சபையை தேர்ந்தெடுத்திருக்கிறான் பார்த்தீர்களா. என்னே சோழர்களின் ஜனநாயக உணர்வு என்று பாராட்டுபவர்கள் நிறைய உண்டு. ஆனால் உண்மை என்ன? யாரெல்லாம் கிராம சபைக்கு போட்டியிட முடியும் தெரியுமா? உத்திரமேரூர் என்ற இடத்தில் உள்ள சோழர்காலக் கல்வெட்டு இந்தக் குடும்பு என்கிற கிராம சபைக்கு உறுப்பினராகும் தகுதி பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறது. "கால் வேலி நிலத்துக்கு மேல் இறை நிலம் உடையவனாகவும் தன் சொந்த மனையிலேயே வீடு கட்டி கொண்டவனாகவும், 30லிருந்து 60 வயதுக்கு உட்பட்டவராகவும், வேத சாஸ்திரங்களில் நிபுணராகவும் இருப்பவனே கிராம சபையின் உறுப்பினராக முடியும்". இந்த கல்வெட்டு தகுதி என்ற பெயரில் பெருவாரியான ஏழை உழைப்பாளி மக்களை ஆரம்பித்திலேயே புறந்தள்ளி விடுகிறது. வேத சாஸ்திரங்களை சூத்திரர் படிக்க முடியாது என்பதை நாம் அறிவோம். ஆகவே தாழ்த்தப்பட்ட சாதியார் யாரும் சோழர் காலத்தில் கிராம சபையில் உறுப்பினராகவே முடியாது. ஆகவே பண்டைய தமிழக அரசுகள் வலதுசாரிகள் ஆன நில உடைமையாளர்களுக்கே ஆதரவாக இருந்தன என்பதற்கு இந்த உதாரணமே போதும். கிராம சபைக்கே போக முடியாத பாட்டாளிகள் அரண்மனை அரசியலைப் பற்றி யோசிக்கவே முடியாது. அது மட்டுமல்ல. எந்த அரசாக இருந்தாலும் அதன் தலையாய வேலை மக்களிடமிருந்து வரி என்ற பெயரில் அடித்து பிடுங்குவது தான். சோழர்கள் காலத்தில் 400க்கும் மேற்பட்ட வரிகள் விதிக்கப்பட்டன. கொடுமையான முறையில் வரிகள் வசூலிக்கப்பட்டன. ஆண்ட சோழனும் தமிழன். மண்சட்டியும் இழந்த வரி கட்டமுடியாத மனிதனும் தமிழன். வெள்ளைக்காரனை எதிர்த்து வீரப் போர் புரிந்த கட்டபொம்மு உள்ளிட்ட பாளையக்காரர்கள் கூட வரி வசூலில் தமிழ்நாட்டு மக்களை கசக்கிப் பிழிவதில் எந்த குறையும் வைக்கவில்லை என்பதற்கு அரசாங்க ஆவணங்களே ஏராளமான சான்றுகளாக உள்ளன.


இந்தியா ஜனநாயக நாடா?


ஒரு நாட்டின் விளைச்சல் நிலங்களும், , சுரங்கங்களும், வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களும் தனியார் கைகளில் பெரும் முதலாளிகள் கையில் இருக்கும் வரை தொழிலாளிகள் வாழ்வில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டு விடாது. அரசியல் அதிகாரம் எதையும் தொழிலாளி பெற்றுவிட முதலாளித்துவம் அனுமதிக்காது. இந்தியாவில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதிகளாக டாட்டா, பிர்லா, அம்பானி போன்ற முதலாளிகளுக்கும் ஒரு ஓட்டு. உழைத்தால் தான் சோறு என்று வாழ்கிற நமக்கும் ஒரு ஓட்டு. இதனால் நாமும் டாட்டாவும் சமம் என்கிறது நமது ஜனநாயகம். ஆனால் யதார்த்தம் என்ன தெரியுமா? அவரவர் பாக்கெட்டில் எவ்வளவு பணம் இருக்கிறதோ, அதற்கு தகுந்த அளவுக்குத்தான் அவருக்கு சுதந்திரம் உண்டு. அதனால் தான் இதனை வெறும் ஜனநாயகம் என்று சொல்லக்கூடாது. "முதலாளித்துவ ஜனநாயகம்" என்று சொல்லவேண்டும் என்கிறோம். ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். குடியாட்சி என்று பெயர் இருக்கலாம். மக்களாட்சி என்று பெயர் இருக்கலாம். ஜனநாயக நாடு, சோசலிச நாடு என்று கூட அறிவிக்கப்பட்டு இருக்கலாம். நாமும் அது உண்மைதான் என்று உறுதியாக நம்பிக் கொண்டும் இருக்கலாம். கடமை தவறாமல் நமது வாக்குகளை வாக்குப் பெட்டியில் போட்டிருக்கலாம். ஆனால் அடிப்படையில் நாட்டில் தனியுடைமை நீடிக்கிறதா, பொதுவுடைமை வந்துவிட்டதா என்பதை பொறுத்து தான் அது இடதுசாரி அரசா? வலதுசாரி அரசா? என்பதை முடிவு செய்ய முடியும்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு புத்தகத்தை முழுமையாக நிறைவு செய்துள்ளேன். சிறிய புத்தகம் தான் என்றாலும் ஆழமான கருத்துகள். பாட்டாளி வர்க்கம் ஒன்றிணைந்து உறுதியான குரலில் ஓங்கி ஒலிக்க வேண்டிய தருணம் இது. அரசியல் பழகு. அந்த அரசியலில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள் என்பதை வலுவாக எடுத்துரைக்கிறது. நிச்சயம் ஒருமுறை வாசித்து விடுங்கள்.

Mageshbabu

முன்பு ஆசிரியராக சில காலம். தற்போது ஊடகவியலாளராக சில காலம். ஆனால் எப்போதும் எழுத்தின் காதலன். என் வாழ்வில் நான் கொண்டாட நினைக்கும், பகிர நினைக்கும் அனைத்தும் எழுத்துகளாக வெளியே வருகின்றன. இங்கே எழுத்துகளாக பரிணமிக்கும் சமூகத்தின் மீதான எனது பார்வையை மதிக்கும் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

Post a Comment

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்

Previous Post Next Post